"பொதி சுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா?"
- இது ஒரு பாடல் வரி.
மாணவர்கள் கல்வி கற்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருவதாக பின்வரும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் திரு.பொன்.குமார்.
பொன்.குமார், ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராகப் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) பணிபுரிகிறார்.
தமிழகக் கல்வித் துறை புதிய கட்டத்தை எட்டியுள்ளது என்பதற்குத் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக்கற்றல் படைப்பாற்றல் கல்விமுறையை உதாரணமாகச் சொல்லலாம். செயல்வழிக்கற்றல் முறை அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு ஒரு தனிப்பண்பை ஊட்டத் தொடங்கியுள்ளது.
காலந் தோறும் கல்விமுறை என்பது மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் முன்பாகக் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் சொல்லக்கூடியவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வுகளில் முறைபிறழாமல் எழுதுவது என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இத்தகைய படைப்பூக்கமற்ற கல்விமுறையை மாற்றும் முயற்சிதான் செயல்வழிக்கற்றல் முறை.
தொடக்கக் கட்டச் சுணக்கத்தைக் கடந்து தற்போது நம் கல்விமுறையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த முறை.
கற்பதில் புதிய அணுகுமுறைகள்
வசீலி கெம்லன்ஸ்கியின் ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்னும் ரஷ்யப் புத்தகம் குறிப்பிடுவதைப் போல் குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் ஒரு கல்விமுறையாகக் கல்விச் செயல்பாடுகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. ஆசிரியர்களிடையே கற்பிப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. வகுப்பறைகளில் அந்த மாற்றத்தின் எதிரொலி கேட்கத் தொடங்கியிருக்கிறது.
பள்ளிக்கு வந்தவுடன் வானவில் செயல்பாடு என அழைக்கப்படும் ஓர் அட்டையை எடுத்துவந்து ஒன்றாகக் கூடி அதிலுள்ள பாடல்களைப் பாடத் தொடங்குகின்றனர் மாணவர்கள். கற்றல் இப்படித்தான் ஒரு கொண்டாட்டமாகத் தொடங்குகிறது. பிறகு அவர்களுக்குரிய குழுவில் அமர்கின்றனர். ஒவ்வொரு குழுவுக்கு முரிய பாடங்கள் அட்டைகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அவரவர் தேவைக்கேற்றபடி பாடங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர்.
பழைய கல்விமுறையில் ஆசிரியர் தன் திட்டப்படி ஒரு பாடத்தை நடத்தத் தொடங்குவார். மாறுபட்ட ஏற்றத் தாழ்வான கற்கும் திறன்களைக் கொண்ட அனைத்துக் குழந்தைகளும் அந்தப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருப்பர். கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும்போது ஆசிரியரும் மேம்பட்ட கற்றல் திறன் கொண்ட குழந்தைகளும் அடுத்த பாடத்துக்கு நகர்ந்து சென்றிருப்பர். செயல்வழிக்கற்றல் முறை இதிலிருந்து முற்றாக வேறுபட்டது. மேம்பட்ட கற்றல் திறன்கொண்ட குழந்தைகள் அடுத்த பாடத்தைக் (அதாவது அட்டையை) கற்கத் தொடங்குவர்.
மெதுவாகக் கற்பவர்கள் பதற்றமின்றி, தமக்கான பாடங்களைக் கற்பர். ஆசிரியர்கள் இவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். முன்னர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதும், ஆசிரியர் அடுத்த பாடத்துக்குச் சென்றுவிடுவார். இப்போது கற்பிக்கும் முறை கற்றல் திறனில் குழந்தைகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைச் சமன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. குறைவான கற்றல் திறன் கொண்ட மாணவனுக்காக ஆசிரியர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்பதே இதன் பொருள்.
முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் ஒரே குழுவாக உட்காரவைக்கப்படுகிறார்கள். இதேபோல்தான் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களும். இது அவர்களுக்குள் தோழமையுணர்வையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்கிறது.
மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முறைகளும் மாறியுள்ளன.
வகுப்பறையில் நான்கரை அடி உயரத்திற்குத் தாழ்மட்டக் கரும் பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமக்கென ஒதுக்கப்படும் பகுதிகளில் மாணவர்கள் சாக்கட்டிகளைக்கொண்டு எழுதிப் பழகுகின்றனர். தாள்களில் எழுதிப் பழகியவர்கள் கரும்பலகையில் எழுதும்போது கையெழுத்து சரியாக வராது. இப்பயிற்சி அந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கு உதவுகிறது. புதிய கல்விமுறையில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஓவியப் பயிற்சி குறிப்பிடத்தகுந்தது. மாணவர்கள் தமக்குப் பிடித்த படங்களை வெள்ளைத்தாள்களில் வரைகின்றனர். அது ஒரு கிளியாக இருக்கலாம். கரடியாகவோ நாயாகவோ நரியாகவோ நிலவாகவோ இயற்கைக் காட்சியாகவோ அல்லது அவர்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒன்றாகவோ இருக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு வரைந்த படங்கள் வகுப்பறையின் குறுக்கே கம்பிகளால் அமைக்கப்பட்ட பந்தல்களில் தொங்கவிடப்படுகின்றன. மாணவர்கள் வரையும் படங்களை ஆசிரியர்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சரிபார்க்கின்றனர். செயல்வழிக் கல்விமுறை என்பது ஒருவகையில் விளையாட்டின் கூறுகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. விளையாட்டுகளின் மீது இயல்பான ஆர்வம்கொண்ட குழந்தைகளுக்குக் கற்றல் ஓர் இனிய அனுபவமாக இருக்க வேண்டுமென்பதே இதன் நோக்கம்.
கணிதம் பயிற்றுவிக்கும் முறைகள்
தொடக்கக் கல்வியின் இன் னொரு முக்கிய அம்சம் கணிதம் கற்பிக்கும் முறைகள். ஒவ்வோர் அரசுப் பள்ளிக்கும் ஒரு கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கணிதப் பயிற்சிப் பெற்றுவருகின்றனர். முக்கோணம், செவ்வகம், சதுரம், மணிச்சட்டங்கள், ஒன்று, பத்து, நூறு இலக்கங்கள் எளியமுறையில் இதில் போதிக்கப்படுகிறது. இத்தகைய உப கரணப் பெட்டிகள் தனியார் மழலையர் பள்ளிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்க வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம் முதலான கலைச் செயல்பாடுகள் பாட அட்டையிலேயே இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் வில் இசைத்துப் பாடுகின்றனர். பொம்மலாட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களது நினைவாற்றலை, ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுகிறது. குறுந்தகடுகள் மூலம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் நடைமுறை பல பள்ளிகளில் இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதில் பல அரசுப் பள்ளிகள் பின்பற்றி வரும் நவீன அணுகுமுறை அந்த மொழியின் பயன்பாடுகளை விரிந்த அளவில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்றாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடியும்.
புத்தகப் பூங்கொத்துத் திட்டத்தின் கீழ் கதைகள், பாடல்கள், அறிவியல் வினா விடைகள், வரலாற்றுச் செய்திகள், பொது அறிவுத் துணுக்குகள் முதலான அரிய உள்ளடக்கங்களைக்கொண்ட நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. தனியார் பள்ளிகளில் இந்தப் புத்தகப் பூங் கொத்துத் திட்டம் இல்லை.
இவற்றின் சில தலைப்புகள் யுரேகா- யுரேகா, கோட்டை, ஆவணக் காப்பகம், சித்தன்ன வாசல், இந்திய அறிவியல் அறிஞர்கள், இளம் பருவத்தில் விஞ்ஞானிகள், காலநிலை, கடல்கள், செவ்வாய் கிரகம் முதலானவை. இப்புத்தகங்களின் வண்ணமும் தாளின் தரமும் தற்போது வெளி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடுகளின் தரத்தோடு ஒப்பிடத்தக்கவை. மாலை நேரக் கற்றல் செயல்பாடுகள் என்பவை மாணவர்களுக்கிடையே நடைபெறும் குழு விளையாட்டுகள்தாம். ஆசிரியர் மேற்பார்வையில் அல்லது அவரும் இணைந்து பிற்பகலில் விளையாட்டுகள் தொடங்குகின்றன. மாணவர்களின் உற்சாகம், ஆளுமைப் பண்பு, மகிழ்ச்சி, கூட்டுமுயற்சி, தோல்வியை ஏற்கும் பண்பு ஆகியவை இதன் மூலம் பேணப்படுகின்றன.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புகள்வரை பயிலும் குழந்தைகளுக்குப் பாட வாரியாகப் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டுள்ளன. பாட அட்டைப் பயிற்சியை முடித்தவுடன் அந்தப் பயிற்சி ஏட்டை எழுதி முடிக்கின்றனர். அவர்களின் அடைவுத்திறன் மாணவர் வாரியாக அட்டையில் குறிக்கப்படுகிறது. மாதவாரியாகவும் அட்டையில் அடைவுத்திறன் குறிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது தனிக் கவனம் செலுத்திச் சிறப்புப் பயிற்சிகள் மூலம் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (Simplified Active Learning Method) அறிமுகப்படுத்தப்பட்டு அது ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையிலும் ஒன்பதாம் வகுப்பில் (Active Learning Method) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தைப் படிக்கும்போது அதிலுள்ள கடினமான வார்த்தைகளை இனங்கண்டு உரிய அர்த்தத்துடன் முதலில் ஒரு பக்கத்தில் எழுதுகின்றனர். அதைத் தொடர்ந்து படம் வரைகின்றனர். கடின வார்த்தைகள், கடினப் பகுதிகளையும் சேர்த்துப் படங்களாக வரைகின்றனர். பிறகு இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் தொகுத்து மூன்றாம் பக்கத்தில் எழுதுகின்றனர். இறுதியாக மதிப்பிடுதல் என்று வினா விடை பகுதியாக எழுதுகின்றனர்.
இதன் வாயிலாக மாணவர்கள் ஒரு பாடத்தை நான்கு வழிகளில் கற்கின்றனர். இதனால் அவர்கள் மனத்தில் சிறப்பான கருத்துகளும் கடின வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் பதிவதுடன் இது பின்னாளில் அவர்களுக்கு நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. மேலும் கணிதப் பாடத்திற்கு ஜிமிநிணிஸி முறை என்னும் வகையில் கணிதம் எளிமையாகக் கற்பிக்கப்படுகிறது. இதுவும் கணிதச் செயல்பாடு கற்பிக்கும் முறையில் ஒரு புதிய முயற்சி.
கணினிக் கல்வி
மாறி வரும் சூழலுக்கேற்பத் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்குக் கணிப்பொறிகளும் மடிக் கணினிகளும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகவும் தொடக்கக் கல்வித் துறை மூலமாகவும் வழங்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படுகிறது. கணினி வழிக் கல்வி மையங்கள் (Computer Aided Learning) பெரும்பான்மையான பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தொலைதூர மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும்-உதாரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாணவர்களையும் - கணிப்பொறிக் கல்வி எட்டியுள்ளது. இது தொடக்கக் கல்வித் துறையில் மிகப் பெரிய சாதனை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், தளவாடச் சாமான்கள் தேவையான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 900 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டம்.
வழக்கமாகத் தரப்படும் கையெ ழுத்துப் பயிற்சி, கட்டுரைப் பயிற்சி, அறிவியல் செய்முறைப் பயிற்சி முதலானவை ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்குத் தொழிற்கல்வி அளிக்கப்படுகிறது. ஆபரண நகை செய்தல், காளான் வளர்ப்பு, வண்ண ஓவியங்கள் தீட்டுதல், பூக்கூடை, மேட், மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (SC, ST) குழந்தைகளுக்குச் சிறப்பு ஆளுமைத்திறன் பயிற்சி தரப்படுவதுடன் இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் புத்தகப் பை, கணித உபகணங்கள், அகராதி போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. இப்பயிற்சிகள் அனைத்தும் உணவுடன் கூடிய உறைவிடப் பயிற்சியாகும். பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் என்னும் முறை செயல்படுத்தப்பட்டு அதன் வாயிலாகப் பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டப்பயிற்சி, தையல் பயிற்சிகளைப் பள்ளி வளாகத்திலேயே மேற்கொள்கின்றனர். இடைநின்ற மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய பகல் நேரப் பராமரிப்பு மையங்கள், பயிற்றுவிக்க சிறப்புக் கல்வித்தகுதிபெற்ற சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கு வராத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சென்று தசைப்பயிற்சி, புலன் பயிற்சி அளித்துக் கல்வியும் கற்பிக்க வசதி என இந்தத் திட்டம் பள்ளியின் வளாகத்தைத் தாண்டி விரியும் ஒன்று. பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் மூலம் மாற்றுத் திறன் குழந்தைகளுக்குக் கல்வியுடன் தசைப்பயிற்சியும் அளிக்கின்றனர். இங்கே குழந்தைகளை விட்டுவிட்டுக் காத்திருக்கும் பெற்றோருக்கும் தையல் பயிற்சி மற்றும் கைவினைப் பொருள்கள் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி (ஷிஸிஙிசி) மையங்கள் அமைக்கப்பட்டு உண்டு உறைவிடப் பயிற்சியாகச் சிறப்பாசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.
இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு கஸ்தூர்பா காந்தி பாலிக வித்யாலயா (ரிநிஙிக்ஷி) என்னும் சிறப்புப் பள்ளி ஏற்படுத்தப்பட்டு, தொண்டு நிறுவனம் மூலம் 6-8 பெண் குழந்தைகளுக்கு எட்டாவது முடித்து முறையான பள்ளியில் 9ஆம் வகுப்பு சேர்ப்பதுவரை கல்வி அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவிகள் 9ஆம் வகுப்பில் சேர்வது உறுதிப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைச் சூழல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கற்கும் முறைகள் மாறியுள்ளதால் கற்பிக்கும் முறைகளும் மாறியுள்ளன. அறிவியல் மாற்றம்தான் வாழ்க்கை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய கல்விச் செயல்பாடுகளை எல்லாம் தனியார் பள்ளிகள் இழந்துவிட்டன. தனியார் பள்ளிகள் வணிக நோக்கத்திற்காக வகுப்பறைச் சூழலையோ கல்விச் சூழலையோ மாற்றிக்கொள்ளாமல் மனப்பாட முறைகளைப் பின்பற்றி பழைய மரபு சார்ந்த முறையிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளில் உயிரோட்டமுள்ள வகுப்பு (Smart Class) என்பது இல்லை. ஆனால் அது (Smart Class) அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ளது.
கற்பித்தலின் புதிய அணுகுமுறைகள்
கற்பித்தல் என்பது ஒரு ஆசிரியர், ஒரு பிரம்பு, ஒரு சாக்பீஸ், ஒரு பழைய கரும்பலகை, ஒரு புத்தகம் என்பது பழைய நடைமுறை. இப்போது ஆசிரியர்கள் கையில் பிரம்பில்லை. வகுப்பு முழுக்க தாழ்மட்டக் கரும்பலகைகள். சாக்பீஸ் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கைகளில் வந்துவிட்டது. வண்ணமிகு பல்வேறு தலைப்புள்ள புத்தகங்கள், கற்பிக்கும் முறைகள் ஆசிரியர் சக மாணவராகக் குழந்தைகளுடன் அமர்ந்து கற்பிக்கிறார். பழைய குருகுலமுறையிலும் குருவுக்கு உட்கார மனைப்பலகை இருந்தது. ஆனால் இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுடன் பாயில் அமர்ந்து கற்பிக்கின்றனர். நவீன யுக்திகள் ஆசிரியருக்குத் தெரிந்திருப்பதுடன். கணினி இயக்கப் பயிற்சியும் பெற்றுள்ளனர். ஜிக்ஷி, ஞிக்ஷிஞி, லிசிஞி இயக்கப் பயிற்சி பெற்றுள்ளனர். பொதுவாக அனைத்துப் பள்ளிகளிலும் இந்த வசதி ஜிக்ஷி, ஞிக்ஷிஞி உள்ளது. மாணவர்கள் வரைந்த படங்களைத் தனி உற்சாகத்துடன் கம்பிப் பந்தலில் மாட்டி ஆசிரியர்கள் அழகுபடுத்துகிறார்கள். மாணவர்களின் குழு விவாதங்களில் பங்கேற்கின்றனர். கூடி விளையாட்டு என்கிற மாலைச் செயல்பாடுகளில் இவரும் மாணவர்களோடு விளையாடுகிறார்.
ஆசிரியர்களின் கல்வித் திறன்கள் மேம்படப் பல்வேறு பயிற்சிகள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் குறுவளப் பயிற்சி மையம் மூலம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்குத் தொழிற்கல்வி, பயிற்சிகள், ஆபரண நகை செய்தல், மெழுகுவர்த்தி, சாம் பிராணி, சாக்பீஸ் செய்தல், கண்ணாடி ஒளிகள், முகமூடிகள், பர் பொம்மைகள் செய்யப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதுடன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் ஆங்கிலம் போதிக்கும் முறைகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அறிவியல் உபகரணங்கள் கையாளும் பயிற்சியும் மாணவர்கள் உடல் நலம் பேணும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கற்பித்தலை ஓர் இனிமையான செயலாக ஆசிரியர்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தனியார் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் எதுவும் தனியார் பள்ளிகள் மூலம் அளிக்கப்படுவதில்லை. இளைய தலைமுறை ஆசிரியர்களுக்குக் குழந்தைகள் மனவியல் பற்றிய சிந்தனையை இப்பயிற்சிகள் வளர்க்கிறது. கற்பதை நிறுத்திவிடுபவர்கள் ஆசிரியர்களாகத் தொடர முடியாது என்ற கல்வி மேதை ராதாகிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு இப்போது பயிற்சிகளின் மூலம் பலன் கிடைத்திருப்பதுடன் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனோபாவம் ஆசிரியர்களிடம் உருவாகத் தொடங்கியுள்ளது. கிராமக் கல்விக் குழு மூலம் குழந்தைகளின் பெற்றோர்களுடன் நேரடித் தொடர்புகொண்டு குழந்தைகளின் சிக்கல்களைக் களைய முற்படுகின்றனர். பள்ளிக்கு வராத குழந்தைகளின் வீடு தேடிச் சென்று அவர்களை அழைத்துவருகின்றனர்.
எளிமையான கதைகள், சுவை மிக்க உரையாடல்கள், நல்லொழுக்க மிக்க செயல்பாடுகள், சுகாதாரத்தைப் போற்றும் நடைமுறைகள் ஆகியவை ஆசிரியர்களின் முதல் பணியாக மாறிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நல்ல வார்த்தைகளைக் குழந்தைகள் கேட்க விரும்புவதுபோல் மக்கள் கூறும் நல்ல சொற்களை ஆசிரியர்களும் கேட்க விரும்பத் தொடங்கிவிட்டனர். ஆசிரியர்கள் பள்ளிகளின் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கின்றனர். கழிப்பிட வசதி, கட்டட வசதி போன்றவற்றை நேரடியாக உயரதிகாரிகளிடம் சென்று கேட்டுப் பெற்றுப் பள்ளியை மேலும் சிறப்பாக வைத்திருக்கும் ஆர்வம் வளர்ந்திருக்கிறது. ஆசிரியர்கள் சிலர் கற்பித்தல் முறையின்மீதும் பயிற்சிகள்மீதும் ஆர்வத்தைக் காட்டுவதில் சுணக்கமாக இருந்தாலும் அதன் சதவிகிதம் மிகமிகக் குறைவே.
மலைப்பகுதி, தொலைதூரப் பகுதிகளுக்குத் தற்போது அவர்களே சொந்த வாகனத்தில் சென்றுவிடுகின்றனர். அந்தியூரில் உள்ள பர்கூர் மலைப் பகுதியில் ஆசிரியர்களே தனி ஜீப்புகளில் பல குழுக்களாகப் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆசிரியர் வராமை குறைந்துள்ளது. பள்ளிகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளன.
புதிய உத்திகளுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப மாணவர்களைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் உருவாகிவருகின்றனர். அரசுப் பள்ளிகளின் முகம் மாறத் தொடங்கிவிட்டது. அரசுப் பள்ளி என்பது நல்ல கட்டடம், சுகாதாரமான கழிப்பிடம், சுத்தமான குடிநீர், கணினிமையம், தொலைக்காட்சிப் பெட்டிகள், புத்தகப் பூங்கொத்துடன் கூடிய நூலகம், பாதுகாப்பான சுற்றுச்சுவர், நவீன வசதிகளுடனான வகுப்பறை என மாறத் தொடங்கிவிட்டது.
தற்போது ஆர்வம் மிகுந்த குழந்தைகளும் செயலாற்றத் துடிக்கும் ஆசிரியர்களும் சமூக நலமிக்க அலுவலர்களும் நவீன ஆலோசனை தரும் வட்டார வளமையர்களும் அதிகரித்துள்ளனர். பொதுக்கல்வி சார்ந்து நிலவிவரும் அவநம்பிக்கைகளை இந்தப் போக்கு மதிப்பிழக்கச் செய்துவருகிறது எனலாம்.
(நன்றி : திரு.பொன்.குமார் மற்றும் காலச்சுவடு பதிப்பகம்).
Saturday, September 3, 2011
மாறிவரும் கல்வி முறைகள்
Posted by கடை(த்)தெரு at 11:08 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
absolultely right .this is the time of education revolution.nice article.
senthil
absolutely right .this is the time of educational revoution.
senthil
absolultely right .this is the time of education revolution.nice article.
senthil
absolultely right .this is the time of education revolution.nice article.
senthil
Post a Comment