ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற என் கவிதை
ராம்ஜி தாத்தாவை
ராயப்பேட்டை இப்ராகிம்
மூன்றாவது மாடியில் இருந்து
முதுகில் கட்டிக்கொண்டு இறங்க,
அவரை கைகளில் தாங்கி
படகில் ஏற்றுகிறார்
காசிமேடு அந்தோணி.
மதத்தை 'இடி'த்து
மனிதமாய்
பொழிந்திருக்கிறது
பெருமழை.
சுயநலத்தை
சுட்டுப்பொசுக்கிய
தீக்குளிப்பாய்..
இந்த
'மழை'க்குளிப்பு.
இங்கே
வெள்ளத்தில் இறங்கியவர்கள்
எழுந்தார்கள்
வேள்வியில் வெளிவந்தவர்களாய்.
மனிதர்களை
புனிதர்களாக்கியது
ஆகாய கங்கை.
ஆட்டுக்குட்டியை
தலையில் சுமக்கும் மனிதன்.
மனிதனை காப்பாற்றும் நாய்.
அன்பிற்கும் உண்டோ
அலைமோதும் வெள்ளம்?
எல்லாம் இருந்தும்
எதுவுமில்லா நிலையில்
எல்லாவற்றிலும் பெரிது
மனிதாபிமானமென்று
புரியவைத்தது
பெருமழையொன்று.
-இன்பா