Sunday, September 27, 2015

தங்கருக்கு மரியாதை தரும் தினத்தந்தி

கிராமத்து படம் என்றாலே அதன் களம் மதுரை பக்கம் இருக்கும் கிராமமாகத்தான் இருக்கவேண்டும் என்று இயங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவில், வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, கிராமங்களை மண்வாசனையோடு சொன்னவர்/சொல்லிவருபவர் இயக்குனர் தங்கர்பச்சான்.

அவரது 'அழகி' ஒரு சர்வதேச தரம் வாய்ந்த, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலை படைப்பு. சொல்ல மறந்த கதை, ஒன்பது ருபாய் நோட்டு போன்ற படங்கள் வாழ்க்கையை பேசுபவை.

முடிந்து பல வருடங்களாகியும் இன்னமும் வெளிவராமல் இருக்கும் தங்கரின் அடுத்த படம் " களவாடிய பொழுதுகள்".

நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய, நடிகையின் சதையை நம்பாமல் நல்ல கதையை நம்பும் இயக்குனரான தங்கர் பச்சானுக்கு தற்சமயம் தினத்தந்தி கவுரம் தந்து இருக்கிறது.

இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் பெறுகிறார். இவருடைய ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்கு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (ரூ.2 லட்சம்) வழங்கப்படுகிறது.

திரைப்பட டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும், எழுத்தாளராகவும் புகழ்பெற்ற ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டையில் 1962-ம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் தங்கராஜ். வீட்டில் சுருக்கமாக ‘தங்கர்’ என்று அழைப்பார்கள். தந்தை பெயர் பச்சான். எனவே இரண்டையும் இணைத்து, ‘தங்கர் பச்சான்’ என்று வைத்துக்கொண்டார்.

கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போது, சினிமா ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் அரசு நடத்திய திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தார். 3 ஆண்டுகள் பயின்று 1984-ல் ஒளிப்பதிவாளருக்கான பட்டம் பெற்றார்.

46 படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியபின், 1990-ல் முதல் ஒளிப்பதிவாளராக உயர்ந்தவர். ‘காதல் கோட்டை’, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘காலமெல்லாம் காதல் வாழ்க’, ‘மறுமலர்ச்சி’ உள்பட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

ஒளிப்பதிவில் மிகப்புகழ் பெற்று விளங்கினாலும், அடிப்படையில் ஓர் எழுத்தாளர். ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘அம்மாவின் கைபேசி’ ஆகிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதினார். அவருடைய சிறுகதைகள், ‘வெள்ளை மாடு’, ‘கொடிமுந்திரி’, ‘இசைக்காத இசைத்தட்டு’, ‘தங்கர்பச்சான் கதைகள்’ ஆகிய 4 புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவலுக்கு, தமிழக அரசு சிறந்த நாவலுக்கான பரிசை வழங்கியது. ‘அக்னி அக்சரா’, ‘திருப்பூர் தமிழ்ச்சங்கம்’ ஆகிய அமைப்புகளும் இந்த நாவலை ‘சிறந்த நாவல்’ என்று தேர்ந்தெடுத்து பரிசு வழங்கின.

தன்னுடைய நாவல்கள், சிறுகதைகளை அவரே இயக்கிப்படமாக்கினார். அவற்றில் முக்கியமானவை: அழகி(2002), பள்ளிக்கூடம் (2007), ஒன்பது ரூபாய் நோட்டு (2007), அம்மாவின் கைபேசி(2012).

பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி ஆகியோர் நடித்த ‘அழகி’ படம், ஒரு திரைக்காவியம் என்ற புகழ் பெற்றது.

தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, சிறந்த இயக்குனருக்கான ராஜா சாண்டோ விருது, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.

(ஞாயிற்றுக்கிழமை,27.9.2015) மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனாரின் 111-வது பிறந்தநாள் விழா இலக்கியப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன் விழாவுக்கு தலைமை தாங்கி விருது மற்றும் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார்.

"நான் முதலில் எழுத்தாளன். அப்புறம்தான் ஒளிப்பதிவாளர், இயக்குனர் எல்லாம்" என்பார் தங்கர்.

சினிமா தராத மரியாதையை, அவரது இலக்கியம் இன்று அவருக்கு பெற்றுத்தந்து இருக்கிறது.

கலை என்பது மக்களுக்கானது என்று வாழும் தங்கர்பச்சானுக்கு வாழ்த்துக்கள். மீண்டும், அவர் திரை உலகில் தடம்பதித்து, இலக்கிய சினிமாக்களை தருவார் என்று நம்புவோம்.

-இன்பா

 
Follow @kadaitheru