Tuesday, December 9, 2014

ஜானி - ரஜினியின் இன்னொரு முகம்



"தங்கையை நம்பி ஒப்படைக்கலாம் போன்ற முகம் " என்று ரஜினியின் முக வசீகரம் பற்றி ஒருமுறை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. பாலசந்தரால் அறிமுகம் செய்யபட்ட ரஜினி என்ற நடிகரின் திறமையான முகங்கள் வெளிப்பட்டது இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இலக்கிய தரமான படங்களில்தான்.

முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை குறிப்பாய் ....ஜானி .கதாநாயகன் இரட்டை வேடங்கள் ஏற்கும் படங்களில் தனித்துவம் மிக்க, எனக்கும், எல்லோருக்கும் எப்பவும் பிடித்த ஜானி படம் பற்றிய ஒரு பார்வை.

கமர்ஷியல் சினிமாவுக்கும், அழகியல் அம்சம் உள்ள கலை படத்திற்க்கும் இடையே பயணிக்கும் மகேந்திரன் அவர்களின் திரைக்கதை, ரஜினி - ஸ்ரீதேவி பாந்தமான நடிப்பு, கதையோடு உணர்வு பூர்வமாக கலந்து இருக்கும் இசைஞானி அவர்களின் இசை.....இவை எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக உருவாக்கபட்டு இருக்கிறது ஜானி.

ஜானி , வித்யாசாகர் என இரு வேடங்களில் ரஜினி. அர்ச்சனாவாக ஸ்ரீதேவி. பாமாவாக தீபா. இந்த நான்கு கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கதை.

இரண்டு ரஜினிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மீசை மற்றும் மூக்கு கண்ணாடி. ஆனால், பார்வையிலையே பெரும் வித்தியாசம் காட்டுகிறார் ரஜினி. முகபாவனைகள் மூலம் ஒரு தேர்ந்த நடிகராக பரிணாமிதது இருக்கிறார்.


ஜானி : தனது தந்தையின் கடன்களை தீர்ப்பதர்க்கு, மன உறுததலொடு திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்.பாடகி அர்ச்சனாவின் குரலில் மனத்துக்கு அமைதியை தேடுகிறார்.

வித்யாசாகர் : முடிவெட்டும் தொழிலாளியாக இருப்பவர். தனது தோட்டத்தில் இருக்கும் பூக்களை கூட எண்ணி வைக்கும் சிக்கனம். அதே சமயம், " காசு விஷயத்துல கருமியா இருக்கறது தப்பில்ல. ஆனா, பிரத்தியாருக்கு அன்பு செலுத்துரத்தில் யாரும் கருமியா இருக்கக்கூடாது." என்று கொள்கையொடு இருப்பவர்.

அர்ச்சனா : புகழும்,பணமும் பெற்ற ஒரு பாடகி. தனிமையில் வாடும், அன்புக்கு எங்கும் பெண். புடவையில், பாந்தமும், அடக்கமும், எளிமையும் உள்ள இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி கச்சிததமாய் பொருந்துவது கதைக்கு பெரிய ப்ளஸ்.

பாமா : எதிலும் திருப்தி அடையாத ஏழை பெண்ணாக தீபா. கிழிசல் உடையில் கவர்ச்சியாய் தோன்றும் வேடம் இவருக்கும் opt.

தான் செய்யும் தவறுகள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை உள்ள அப்பாவி வித்யாசாகரை போலீஸ் தொல்லை செய்வதை அறிந்து, நேரில் வந்து வித்யாசாகரை சந்தித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது கைரேகையை அவரிடம் ஒப்படைத்து இன்னும் பத்து நாளில் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜானி சொல்லும் காட்சி படத்தின் ஹை லைட்.

"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் " பாடலை கேட்டு ஒரு ரசிகராக அர்ச்சனாவிடம் அறிமுகம் ஆகும் ஜானி, படிப்படியாக அவரிடம் நட்பு கொள்கிறார். அர்ச்சனா சிததார் இசைக்கும் போதும், தனது பிறந்த நாளின் போதும் தாயின் நினைவுகளை பகிர்கிறார்.ஜானிக்காக அர்ச்சனா பாடுவதாக வரும் "என் வானிலே ஒரே வெண்ணிலா " கண்ணதாசன் வரிகளில், ராஜாவின் இசையில் உலக தரம். இந்த இரண்டு பாடல்களின் தேன் குரல் வண்ணம் ஜென்சி.


நட்பு காதல் ஆகிறது. குற்ற உணர்வு காரணமாக அர்ச்சனாவின் காதலை ஜானி ஏற்க மறுப்பதும், அதற்கு காரணமாக தான் பல பேர் முன்பு மேடையில் பாடும் பெண் என்பதால்தான் என அர்ச்சனா நினைப்பதும், பின் இருவரும் சமாதானம் அடைவதும் கவிதைகள்.

இந்த காதல் கவிதை என்றால், வித்யாசாகர் - பாமா இடையே ஆன காட்சிகள் சிறுகதை. அனாதையான பாமாவை தனது வீட்டு வேலைக்காரியாக்கி , பின் தனது மனைவி ஆக்க விரும்பும் வித்யாசாகரிடம் "நாளைக்கு நமக்கு பிறக்கும் குழந்தைக தங்கள் அப்பா ஒரு பார்பார் என சொல்லிக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படும்" என்று பாமா கூறும் காட்சி யதார்த்தம். இதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு கடைக்கு போகும் காட்சியில் ஒரு பணக்கார இளைஞனை அறிமுக படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன். அவன் கையில் இருக்கும் புத்தகத்தின் பெயர் future shock.

நாம் எதிர்பார்த்தபடி, பாமா அந்த பணக்கார இளைஞனுடன் ஓட முயலும் போது, வித்யாசாகர் அவர்களை சுட்டு கொன்று விடுகிறார். ஒரே உருவம் கொண்ட ஜானி, வித்யாசாகர் இருவரையும் போலீஸ் தூரத்துகிறது.

சந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு ஆதிவாசி கூட்டத்தில் பதுங்குகிறார் ஜானி. "ஆசைய காத்துல தூது விட்டு " பாடலும், அதில் வரும் நடனமும், இசையும்,எஸ். பி ஷைலஜாவின் ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது.

அதைப்போல, ஜானி என நினைத்து வித்யாசாகருக்கு அடைக்கலம் தருகிறார் அர்ச்சனா. பாமாவை போலவே எல்லா பெண்களையும் எண்ணும் வித்யாசாகர் அங்கேயே நிரந்தரமாக தங்கி, அர்ச்சனாவின் அழகையும், பணத்தையும் அனுபவிக்க முடிவு செய்கிறார். பின், கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறார். அர்ச்சனாவின் கண்ணீரும், ஜானி மீது அவர் வைத்து இருக்கும் பரிசுத்தமான அன்பும் எப்படி வித்யாசாகரின் மிருக தன்மையை அழிக்கின்றது என்பதே மீதி கதை.

"நான் உங்க ஜானி இல்லை " என்று வெளியேறும் காட்சியில் அர்ச்சனாவிடம் வித்யாசாகர் பேசும் வசனத்தில் தனது அழுத்தமான முத்திரையை பதிக்கிறார் மகேந்திரன்."நான் பார்பார் by profession , murderer by accident , இன்னைக்கு மனுஷன் உங்களாலே, thank you very much"..

இறுதி காட்சியில், வித்யாசாகர் சொன்னபடி, கொட்டும் மழையில். தனியாக கச்சேரி செய்யும் அர்ச்சனாவை தேடி வருகிறார் ஜானி. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே .." .என்று கதையின் சுகமான முடிவை ஜானகியின் இனிய குரலில், நம் மனதுக்குள் மழையாய் பொழிகிறார் இசை என்கிற இளையராஜா .

ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை. அதுதான் நம் தமிழ் சினிமா.இன்றைக்கு சினிமாவில், ஜப்பான் உட்பட உலகம் எங்கும் ரசிகர்களை கொண்டவராக, மற்ற நடிகர்கள் யாரும் நெருங்க கூட முடியாத முதல் இடத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த் .

மலையாள திரை உலகில், சர்வதேச தரத்திலான அமரம்,பரதம், வான்ப்பிரஸ்தம் போன்ற படங்களில், அந்தந்த கதாபாத்திரங்களில் எந்த அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பினை வழங்கி,வாழ்ந்து இருப்பார்கள் மம்முட்டியும், மோகன்லாலும்.

அவர்களுக்கு இணையாக தமிழில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த கூடிய ஒரே நடிகர் ரஜினி அவர்கள்தான். ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, மற்றும் ஜானி போன்ற படங்கள் அதற்க்கு சரியான உதாரணங்கள்.

சூப்பர் ஸ்டார் என்ற வெகு ஜன ஒப்பனை முகத்துக்கு பின் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறந்த யதார்த்த நடிகரின் முகம் தெரிகிறதா உங்களுக்கு?

அது,, நமது கரவொலிகளில், விசில் சத்தங்களில், கட் அவுட்களின் நிழல்களில், காணாமலே போய்விட்ட முகம்...ரஜினி அவர்களின் இன்னொரு முகம்.

-இன்பா

(ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு. கடை(த்)தெருவின் மறுபதிப்பில்.).

Saturday, December 6, 2014

'ஆச்சி' மனோரமாவைத் தேடி.....

அன்பே வா - எம்.ஜி.ஆர். , சரோஜாதேவி நடித்த  இந்த படத்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு தொலைக்காட்சியில் சமிபத்தில் மீண்டும் பார்த்தேன்.

படத்தில், பங்களாவின் உரிமையாளரே எம்.ஜி.ஆர்தான் என்று அங்கு வேலை செய்யும் மனோரமாவிற்கு தெரியும். ஆனால், இந்த உண்மை தெரியாமல் அவரிடமே வாடகை வசூலிப்பார் நாகேஷ். நாகேஷிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனோரமா படும் அவஸ்தைகள் படத்தின் ஹைலைட்.

அன்பே வா - மனோரமா அவர்களை பற்றிய பல நினைவுகளை எனக்கு கிளறிவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜியுடன் மனோரமா என்று பார்த்தால், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் "ஜில் ஜில் ரமாமணி" என்ற நாடகநடிகையாக வந்து குரலில் காட்டும் குழைவும், நடிப்பில் அவர் காட்டும் நளினமும் மறக்கமுடியுமா?

ரஜினி அவர்களுடன் "மன்னன்" மற்றும் "எஜமான்" உட்பட பல படங்களில் மனோரமாவின் பங்களிப்பை பற்றி குறிப்பிட்டு சொல்லமுடியும்.

கொஞ்ச காலம் முன்புவரை மனோரமா அவர்கள் இல்லாத கமல்ஹாசன் படங்களே இல்லை என்று கூறலாம். "ஐயோ அய்யய்யோ" என்று 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஜனகராஜ் கோஷ்டியை அதகளம் பண்ணும் காட்சி ஒன்றே போதும். மனோரமா அவர்களின் நடிப்பு திறமைக்கு.

அவர் செய்த வேடங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது....வயதான பாட்டுவாத்தியார் கெட் அப்பில் வரும் சத்யராஜை ஜொள்ளுவிடும் 'முதிர்கன்னியாக' அவர் அசத்தி இருந்த "நடிகன்" தான்.

பாசமிக்க பணக்கார பாட்டியாக 'பாட்டி சொல்லை தட்டாதே, தெற்றுபல் கிழவியாக ''சின்ன கவுண்டர்' இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்தானே.

உலக சினிமாவில் சுமார் 1000 படங்களுக்கும்மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா அவர்கள் இப்போது என்ன செய்கிறார்?

சில மாதங்களுக்கு முன்னால் 'குமுதம்' பத்திரிக்கையில் அவரை பற்றிய ஒரு வேதனையான செய்தியை பார்த்தேன்.அதில், மனோரமா அவர்கள் இரண்டு கால்களும் முடங்கி, ஆறு மாதத்திற்கும் மேலாக படுத்தபடுக்கையாய் இருப்பதாக தெரிந்தது. பின்பு டிஸ்சார்ஜ் ஆன செய்தியும் வந்தது.

மருத்துவமனையில் தான் சேர்ந்தபோது கமல் போன்ற ஒரு சிலரே வந்து பார்த்ததாகவும், பின்னர் யாரும்வந்து நலம்கூட விசாரிக்கவில்லை என்றும் கண்ணிருடன் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார் மனோரமா.

உள்ளதை சொல்கிறேன். இவரை போன்ற ஒரு நடிகை கேரளாவில் இருந்து இருந்தால், கலைபொக்கிஷமாக மதித்து கொண்டாடிஇருப்பார்கள்.

தமிழ் திரையுலகின் நன்றிகெட்டத்தனங்களுக்கு கணக்கில் அடங்கா உதாரணங்கள் இருக்கின்றன. " அடிப்படையான நாகரிக இயல்புகள் கூட திரையுலகில் இருப்பதாக தெரியவில்லை" என்று 'ஒ' பக்கங்களில் திரு.ஞானி அவர்கள் ஒரு முறை எழுதியது என் நினைவுக்கு வந்தது.

மீண்டும் மனோரமா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக தெரிகிறது. இந்தமுறை அவரது அருகில் அவர் குடும்பத்தினர் கூட இல்லை என்று தெரியவந்து இருக்கிறது.

உலக சாதனை செயத நடிகை, இறுதி நாட்களில் இப்படி யாருமற்ற அனாதையாக இருப்பதை என்னவென்று எழுதுவது??

அவர் பூரணநலம் அடைந்துவிடுவரா?

தான் பங்கேற்ற கதாபாத்திரங்கள் மூலம், நம் தமிழ் குடும்பங்களில் ஒரு உறவாகவே ஆனவர் நடிகை மனோரமா அவர்கள்.

இனி வரும் திரைப்படங்களில், அவரது கனிவான குரலை கேட்கவே முடியாதா?


 பண்பட்ட அவரது நடிப்பை இனி நம்மால் காணவே முடியாதா? போன்ற கேள்விகள் என் மனதை கனக்க செய்தன.

ஆச்சி மனோரமா, எங்கு இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்?



-இன்பா

Friday, December 5, 2014

காமம் போற்றும் பெண் கவிஞர்கள்

'எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி" என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.

தனது கவிதை நூலுக்கு "முலைகள்" என்று தலைப்பு வைத்து எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.

இவர்களை போன்று, கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

- அனார்

கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி

சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.

- மாலதி மைத்ரேயி.

"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."


- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?' என்று கேட்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??

--இன்பா

Monday, December 1, 2014

களவாடப்படும் மலைவளம் - சுப.உதயகுமார்

“காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றான் பாரதி. நமது சாதியிலும், கூட்டத்திலும் பலரும் காணாமற்போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தீர்களா?

அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைவழியாகப் பயணித்தபோது பல இடங்களில், குன்றுகளும் மலைகளும் தரைமட்டமாக்கப் பட்டிருப்பதை, அல்லது உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன்.

ஆங்காங்கே கனரக இயந்திரங்கள் மலைகளின்மீது மொய்த்துக் கொண்டிருப்பதையும், சாரை சாரையாக லாரிகள் கல், ஜல்லி, மணல் எனக் கடத்திக் கொண்டிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி இந்தப் பகல்கொள்ளை இவ்வளவு பட்டவர்த்தனமாக நடைபெறுகிறது என்று விசாரித்தபோது, அரசுகளின் அனுமதியோடும், ஆசீர்வாதத் தோடும் தான் இந்த மலையழிப்பு நடக்கிறது என்று சொன்னார்கள்.

தங்க நாற்கர சாலை தரையெங்கும் வழிப்பாதை என்று முடிவெடுத்த அரசுகள், சாலை ஒப்பந்தக்காரர்களோடு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்களாம்.

அதாவது அருகேயுள்ள குன்றுகளை, மலைகளை அடித்து உடைத்து சாலைப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அது. ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம், உத்தரவு கிடைத்த பின்னர் ஒரு கணம் சும்மா இருப்பார்களா? ஒரு கல்லையாவது விட்டுவைப்பார்களா? அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும், மலையழிப்பு கனஜோராக இரவும் பகலும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. ‘வளர்ச்சி’ பேய் பிடித்தாட்டும் நிலையில், பலருக்கும் மலையழிப்பு வாழ்வளிக்கும் வரப்பிரசாதமாகத் தோற்றமளிக்கிறது.

ஊரெங்குமுள்ள மலைகளை அரசுகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் கபளீகரம் செய்துகொண்டிருக்க, ஆங்காங்கிருக்கும் சில சிறப்பு மலைகளை, குன்றுகளை தனியார் நிறுவனங்கள் விழுங்கத் துடிக்கின்றன.

திருவண்ணாமலை நகரின் அருகேயுள்ள இரும்புத்தாது நிரம்பிய கவுத்தி மலை, வேடியப்பன் மலை இரண்டையும் ஜிண்டால் நிறுவனம் தமிழக அரசின் உதவியுடன் விழுங்கி ஏப்பம் விட ஆவன செய்து வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர் ஆட்சிபுரிந்த திமுக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்தது. மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் அமைத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும், 2008ஆம் ஆண்டு இத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மற்றும் மத்திய அரசின் உதவியுடன் இத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட ஜிண்டால் நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 325 ஹெக்டேர் வனத்துறை நிலமும், 26,918 ஏக்கர் விளைநிலமும் கையகப்படுத்தப்படும். இந்தப் பகுதியிலிருந்து 9.30 கோடி டன் இரும்புத்தாது வெட்டியெடுக்க முடியும். வெறும் 180 பேருக்கு வேலை கிடைக்கும். ஏறத்தாழ 51 கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தம் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்களும், அரிய மூலிகைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். மலையைத் தோண்டும் அதிர்வுகளால், தூசியால், சத்தத்தால், பத்து கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங்கள், மக்கள் பாதிக்கப்படுவர். ஆண்டவன் அண்ணாமலையாரின் பக்தர்களின் கிரிவலப் பாதைகூடப் பாதிப்படையும்.

நண்பர்களும் நானும் இந்த மலைகளைக் கடந்த ஜூன் மாதம் நேரடியாகச் சென்று பார்வையிட்டோம். உள்ளூர்த் தோழர்களும் உடன் வந்தனர். எங்கள் வாகனத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்ட அந்தப் பகுதி கிராமப் பெண்கள், நாங்கள் யார், என்ன வேண்டும் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். எங்களைப் பற்றிச் சொன்னதும், தங்கள் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர். அனைவருமாக வேடியப்பன் மலைமீது ஏறினோம். அங்கே அமைந்திருக்கும் அருள்மிகு வேடியப்பன் திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாம். மனதில் ஒன்றை நினைத்து வேண்டிக்கொண்டு இங்கே வந்து சென்றால், அந்தக் காரியம் நிச்சயம் கைகூடும் என்று ஆண்களும், பெண்களும் அடித்துச் சொன்னார்கள். கோவிலருகேயுள்ள சுனைநீரைக் குடித்தால் தீராத நோயெல்லாம் தீரும், நலம் கிடைக்கும் என்று மாசி எனும் பூசாரி சொன்னார். தண்ணீரைக் குடித்துப் பார்த்தபோது, அதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.

இந்தச் சுரங்கத் தொழிலால் உள்ளூர்ச் சந்தை கொழிக்கும் என்றும், உள்ளூர்த் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதியின் கட்டமைப்பு வசதிகள் பெருகும் என்றும் ஜிண்டால் நிறுவனம் ஆசை காட்டுகிறது. உள்ளூர் மக்களின் பொருளாதாரமும், நாட்டின் நலன்களும் உயரும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இருப்பதையும் இழந்துவிட்டு ஏதிலிகளாகி விடுவர் இம்மக்கள். கொள்ளை லாபம் பெறும் ஜிண்டால் நிறுவனத்தின் வருமானத்தில் ஒரே ஒரு சதவீதம் பணம் மட்டும் தமிழக அரசுக்கு மூன்று ஆண்டுகளுக்குக் கிடைக்குமாம்.

சந்தைப் பொருளாதார ஏற்பாட்டில் மலைகளும் வியாபாரப் பொருட்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. இவையனைத்துமே மாற்றியமைக்கப்படத்தக்கவை என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது.

கவுத்தி மலை, வேடியப்பன் மலை போன்றவற்றை நாம் கொண்டு வந்தோமா அல்லது கொண்டுதான் போகப் போகிறோமா எனும் ரீதியில்தான் ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் சிந்திக்கின்றன, செயல்படுகின்றன. இம்மலைகளின் வெளிப்புறத் தன்மைகளை, நன்மைகளை, சுற்றுப்புற மனித நல்வாழ்விற்கான பங்களிப்புகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இம்மலைகளுக்குள் புதைந்துகிடக்கும் கனிம வளங்களை அள்ளி எடுப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும்தான் வளர்ச்சி என்று கொள்ளப்படும்போது, மலையழிப்பதே வாழ்வளிப்பது என்றாகி விடுகிறது.

ஆனால், கவுத்தி மலை, வேடியப்பன் மலைப் பகுதி மக்களோ மலையழிப்பது வாழ்வழிப்பதே எனக்கொண்டு நிராயுதபாணிகளாய் அறவழியில் பன்னாட்டு மலைவிழுங்கி மகாதேவன்களை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்கள். குறிப்பாக அப்பகுதிப் பெண்கள் மிகத் தெளிவாகச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். இவர்கள் போன்ற தமிழ்ப் பெண்களால்தான் நம் மலைகளும், கடல்களும், நிலமும், நீரும், காற்றும் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

(சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், நன்றி: காலச்சுவடு பதிப்பகம்)

 
Follow @kadaitheru