Wednesday, November 7, 2012

Love Anthem 2 - 'லவ்' பண்ணலாமா? வேணாமா?

கல்விக்கடனுக்கு
அலையும்
கிராமத்து
ஏழை மாணவனாய்..
உன்
கடைக்கண் பார்வைக்கு
காத்திருக்கிறேன்.

நள்ளிரவில்
யாருக்கும் தெரியாமல்
உயரும்
பெட்ரோல் விலை போல
ரகசியமாய்
என்னை பார்க்கிறாய் நீ.

பத்துமணி நேர
மின்வெட்டை விட
பத்து நொடி வரும்
உன்
கண்வெட்டுதான்
அதிகம்
வியர்க்கவைக்கிறது
என்னை.

தேங்கிய மழைநீரில்
தத்தளிக்கும்
தெருவாக்கிவிடுகிறது
என் மனதை
அது.

மக்கள் நலனுக்கு
அரசு போடும் திட்டங்கள்.
உனனை நினைத்து
நான் எழுதிவைத்திருக்கும்
காதல் கடிதங்கள்.
இரண்டும் ஏனோ
இலக்கை எட்டுவதேயில்லை.

தனியார் பள்ளிக்கட்டணம்
குறைவது எப்பொழுது?
தனிமையில் நாம்
சந்திப்பது எப்பொழுது?

ஊழலை
ஒப்புக்கொள்ளாத
அரசியல்வாதி போலவே
என் மீதான
காதலை
ஒப்புக்கொள்வதில்லை நீ.

'சிறந்த மௌனம்'
என்னும் தலைப்பில்
போட்டி வைத்தால்
முதலிடம் உனக்கே.
இரண்டாமிடமே
இந்திய பிரதமருக்கு.

மணமேடையில்
இல்லாவிட்டாலும்
மருத்துவமனையிலாவது
சேர்த்துவைத்து
நம் பிரிவுக்கு
'சங்கு' ஊதுமா
'டெங்கு'?

கவிதை - இன்பா

 
Follow @kadaitheru