Thursday, September 2, 2021

பூக்கள் பூக்கும் தருணம்



            மழை நின்றுவிட்டது. எங்கள் கல்லூரி வாசலில் இருக்கும் அடர்ந்த மரத்தின் அடியில் நான் காத்துக்கொண்டிருந்தேன்.

எப்படியாவது இன்று சங்கீதாவிடம் காதலை சொல்லிவிட வேண்டும்.

 

எப்படி சொல்வது? அவள் மனதை படிப்பது எப்படி?

 

அதோ! என்னை நோக்கி புன்னகைத்தபடி வரும் சங்கீதா.

 

அவள் கூந்தலுக்கு மட்டும்தான்...இரண்டு பக்கமும் பூக்கள்.

 

அவள் என்னை நெருங்க நெருங்க…எனக்குள் பதற்றம்.

 

'ஹாய்' என்று அவள் அருகில் வந்ததும் சட்டென்று மரத்தின் கிளைகளை பிடித்து உலுக்கினேன்.

 

இலைகளில் தங்கியிருந்த மழைத்துளிகள் படபடவென எங்கள் இருவர் மீதும் விழுந்தன.

 

"ஹேய் என்னப்பா இது" என்று அவள் கைகளை உயர்த்தினாள். 


செல்லக்கோபம்.

 

"சங்கீதா, ஐ லவ் யு".

 

 

                                                                                                                                                           -இன்பா

Friday, September 16, 2016

திருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி


"முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்"..

முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.

திருப்புகழைப்பாடப் பாட வாய் மணக்கும் என்பதற்கு இணங்க, படிக்க,படிக்க உங்கள் மனதை முருகன் வயப்படுத்தும் வசிய சக்தி படைத்தது திருப்புகழ் தமிழ்.

பொதுவாக எந்த பக்தி இலக்கியமாக இருந்தாலும், பாடல்கள் இருக்கும். அடிக்கு அடி அதன் விளக்கங்கள் இருக்கும்.

பாடல்களை நாம் எப்படி பிரித்து, படிப்பது? எளிமையான வரிகளில் எப்படி பாடுவது? பொருள் அறிவது?

சமய இலக்கியத்தில் எனக்கு தெரிந்தவரை முதல்முறையாக வரிகளை சேர்த்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டு, எளிமையான ஒரு புதியபாதை படைத்து இருக்கிறார் புதுச்சேரியை சேர்ந்த திருமதி.மாலதி ஆறுமுகம்.

இந்த முயற்சிக்கு அவர் எடுத்துக்கொண்ட பக்தி இலக்கியம்..."திருப்புகழ்"

உதாரணத்திற்கு, திருப்புகழின் முதல் பாடலான விநாயகர் துதியை எடுத்துக்கொள்வோம்

"கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்"

சேர்த்து எழுதப்பட்டிருக்கும் இந்த பாடலை...

"கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
     கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

கற்றிடும்  அடியவர் புத்தியில் உறைபவ
     கற்பகம் என வினை ...... கடிதேகும்"

என்று எளிதாக பொருள்புரியும்படி எழுதி இருக்கிறார் திருமதி.மாலதி ஆறுமுகம்.

இவ்வாறு தொகுப்பபட்ட திருப்புகழ் பாடல்கள் மொத்தம் 122. ஒவ்வொரு பாடலுக்கும் விளக்க உரை அமைந்திருப்பதும் இதன் கூடுதல் சிறப்பு.

எளிமையான இனிய அனுபவம் தரும் இந்த புத்தகத்தை பெற, நீங்களும் அணுகலாம்.

திருமதி. மாலதி ஆறுமுகம்,
எண்.11, திருவள்ளுவர் வீதி,
விஸ்வ நாதன் நகர்,
முத்தையால்பேட்டை,
புதுச்சேரி - 03.
தொடர்பு எண்: 9894019099

-இன்பா

Sunday, June 12, 2016

'வித்தையடி நானுனக்கு' - என் பார்வையில்


என் அருமை நண்பர் லாரன்ஸ் பிரபாகர் மூலமாக எனக்கு அறிமுகமானவர் திரு.செல்வகுமார் அவர்கள்.

செல்வகுமார் சாரை சில வருடங்களுக்கு முன் வடபழனியில் சந்தித்து இருக்கிறேன். "நான் இன்பா, இட்லிவடை வலைப்பதில் சண்டேனா இரண்டு எழுதுபவன்." என்று அறிமுகம் செய்துகொண்டு அவருடன் கலந்துரையாடியது மறக்கமுடியாத அனுபங்களில் ஒன்று.

வித்தையடி நானுக்கு பட ஸ்டில்களில் இருந்த அவர் பெயர் அந்த இனிய நினைவை கொண்டுவந்தது. அட,நம்ம செல்வா சார் என்று உரிமை கொண்டாட, நண்பர்களிடம் இந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு தெரிந்தவர் என்று சொல்லவைத்தது.

நண்பரின் படத்தை எப்படி விமர்சிப்பது என்ற தயக்கமெல்லாம் எனக்கு இல்லை.

வித்தையடி நானுக்கு -  புதிய,வித்தியாசமான முயற்சி என்று சொல்வதற்கு இல்லை. இதைபோன்றதொரு ஐடியாவை பாலுமகேந்திரா அவர்கள் தனது "ஜூலி கணபதி" படத்தில் செய்து விட்டார்கள். 

அதில் தனது அபிமான எழுத்தாளரை சரிதா தனியாக ஒரு வீட்டில் அடைத்துவிடுவார். க்ளைமாக்சில் அதறக்கான காரணமும் அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்கும். வித்தையடி நானுக்கு படத்தில் இயக்குனர் நடிகையை அடைத்துவைக்கிறார்.

ஆனால் ஜூலிகணபதி படத்தில் இருக்கும் அழுத்தமும், அழகியலும் இதில் மிஸ்ஸிங்.  குறைந்த பட்ஜெட்டில் அழுத்தமான திரில்லர் என்பதற்க்கு மிகச்சரியான உதாரணம்,,,மெகாஹிட் கன்னட படமான "ரங்கிதாரங்கா".

வித்தையடி நானுக்கு - முதலில் பட்ஜெட்டை முடிவு செய்துவிட்டு பின்னர் அதற்கான கதையை உருவாக்கி இருக்கிறார்களோ என்று ஆரம்பத்தில் தோன்றுகிறது. இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் படம் என்று விளம்பரம் செய்வதை தவிர்த்து இருக்கலாம் செல்வா சார். 

சவுரா சையத் நடிப்பு வெகு அருமை. ஷோபா, ரேவதி வரிசையில் ஒரு நடிக்க தெரிந்த நடிகை நமக்கு கிடைத்து இருக்கிறார். ராமனாதன் சார், தமிழ்சினிமாவுக்கு கிடைத்து இருக்கும் அருமையான ஒரு குண்சித்திர நடிகர்.

கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் அளவு பார்த்து கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் விவேக் நாராயணன். இன்னும் அவரின் முழுமையான இசைத்திறமைகள் தெரியுமளவுக்கு படங்கள் அவருக்கு அமையவேண்டும். 

இன்றைய காலகட்டங்களில் படத்தை எடுப்பதைவிட, அதை திரைஅரங்குகளில் ரிலிஸ் செய்வது ஒரு மிகப்பெரிய சாதனை. அதுவும் பெரிய நட்ச்சத்திரங்கள் இல்லாமல், எளியமுறையில், புதுமுகங்களை வைத்து படம் எடுத்து அதை வெளியிடுவது......கிரெட் டீம் வொர்க்.

செல்வா சாருக்கு என் பூங்கொத்து.

இன்னும்...இன்னும்...இன்னும்.... நிறைய எதிர்பார்க்கிறோம் செல்வா சார், ராமனாதன் சார் அண்ட் விவேக் சார்.

-இன்பா

Wednesday, May 4, 2016

"கபாலி" படத்தின் கதை - Exclusive FIR


சென்னையில் தனிமையில் வசிக்கும் தொழிலதிபர் கபாலிஷ்வரன். அவரது தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவர் தெய்வம்,

ஒரு நாள் அவருக்கு கருத்துவேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக அவரை பிரிந்து மலேசியாவில் வாழும் அவரது மனைவி ராதிகா ஆப்தேயிடம் இருந்து போன் வருகிறது. மகள் தனிஷிகாவுக்கு திருமணம். தந்தை என் கிற முறையில் அதில் கலந்துகொள்ளவதற்க்காக கோலாலம்பூர் செல்கிறார் கபாலி. அங்கே மணமகன் கலையரசனையும் சந்திக்கிறார்.



மறுபடியும் மனைவி,மகள் என இணையும் தருணத்தில், திருமணத்திற்க்கு முதல் நாள் ஒரு மர்மகும்பல் காபாலி இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்த, அதில் ராதிகா ஆப்தே கொடுரமாக கொலை செய்யபடுகிறார். மகள் தனிஷிகா கோமா நிலைக்கு செல்கிறார்.

கபாலி இதற்க்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க புறப்படுகிறார். அவருக்கு பக்கபலமாக கூடவே மகளின் காதலனான கலையரசன்.

காபாலியின் ப்ளாஷ்பேக்.

முப்பது வருடங்களுக்கு முன் மலேசியாவை ஆட்டிப்படைக்கும் தாதா காபாலி மற்றும் அவரது நண்பன் கம் பார்ட்னர் கிஷோர்.

காபாலியை கண்டு காதலில் விழுகிறார் ராதிகா ஆப்தே. இந்த காதல் காரணமாக கபாலிக்கும், கிஷோருக்கும் பிளவு ஏற்படுகிறது, ராதிகாவுடன் திருமணம்,குழந்தை என மாறும் குடும்ப வாழ்க்கையில் இறங்கும் காபாலி, தாதா தொழிலைவிட்டு விலக முடிவெடுக்கிறார்.

இதற்கிடையில், மலேசிய போலிசிடம் கிஷோர் சிக்கிகொள்ள, அவரது ஆட்கள் காபாலி காட்டிகொடுத்துவிட்டார் என்று அவரை அழிக்க புறப்படுகிறது.

தன்னால் தன் குடும்பத்திற்க்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதென்று, மனைவி,மகளை பிரிந்து சென்னைக்கு வந்துவிடுகிறார் காபாலி.


இத்தனை வருடங்களாக தனக்காக காத்திருந்து, தன் கண்முன்னே குடும்பத்தை கிஷோர் சீர்குலைத்துவிட்டதாக முடிவெடுத்த காபாலி, அவரை தேடி புறப்படுகிறார். இந்த வேட்டையில் மலேசியாவில் உள்ள வேறு சில தாதா கோஷ்டிகளுடன் அவர் மோத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது


தடைகளை தகர்த்து, எதிரி கிஷோரை நெருங்கும்பொது, அதிரடி திருப்பமாக மனைவியை கொலை செய்து மகளை படுத்தபடுக்கையில் ஆக்கியது கிஷோர் இல்லை, தன் கூடவே இருக்கும் கலையரசன் மற்றும் அவரது தந்தை என்ற உண்மை காபாலிக்கு தெரியவருகிறது,

அதன் பிண்ணனி என்ன? மகள் பிழைத்தாரா? காபாலி என்ன செய்தார்? போன்ற கேள்விகளுக்கு பரபரவென பதில் அளிக்கிறது பட்த்தின் க்ளைமாக்ஸ்.

இதுவரை சூப்பர்ஸடார் படமாக பழிவாங்கல், மாஸ், பன்ச்  வசனம், ஆக் ஷன் என்று  செல்லும் காபாலி, கடைசி பத்து நிமிடத்தில் மட்டும் மெட்றாஸ் ரஞ்சித் படமாக, ஒரு சமூக கருத்துடன் முடிவடைகிறது,



மொத்ததில் கபாலி - நிறைய மாஸ், கொஞ்சம் க்ளாஸ்

(கதை(!?!) - இன்பா)

Monday, February 29, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்


ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கவிதைப் போட்டியில்  பரிசு பெற்ற என் கவிதை


ராம்ஜி தாத்தாவை
ராயப்பேட்டை இப்ராகிம்
மூன்றாவது மாடியில் இருந்து
முதுகில் கட்டிக்கொண்டு இறங்க,
அவரை கைகளில் தாங்கி
படகில் ஏற்றுகிறார்
காசிமேடு அந்தோணி.

மதத்தை 'இடி'த்து
மனிதமாய்
பொழிந்திருக்கிறது
பெருமழை.

சுயநலத்தை
சுட்டுப்பொசுக்கிய
தீக்குளிப்பாய்..
இந்த
'மழை'க்குளிப்பு.

இங்கே
வெள்ளத்தில் இறங்கியவர்கள்
எழுந்தார்கள்
வேள்வியில் வெளிவந்தவர்களாய்.

மனிதர்களை
புனிதர்களாக்கியது
ஆகாய கங்கை.

ஆட்டுக்குட்டியை
தலையில் சுமக்கும் மனிதன்.
மனிதனை காப்பாற்றும் நாய்.
அன்பிற்கும் உண்டோ
அலைமோதும் வெள்ளம்?

எல்லாம் இருந்தும்
எதுவுமில்லா நிலையில்
எல்லாவற்றிலும் பெரிது
மனிதாபிமானமென்று
புரியவைத்தது
பெருமழையொன்று.


-இன்பா

Wednesday, February 3, 2016

கெயில் - கொலைவாளினை எடுப்போம்


தமிழகத்தின், ஏழு மாவட்டங்கள் வழியாக, 'கெய்ல்' எனப்படும், 'காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' பொது துறை நிறுவனம் சார்பில், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடை செய்ய முடியாது என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

                                               -செய்தி


காவிரி மற்றும் முல்லை பெரியாறில் தண்ணீர் வழங்க மறுக்கும் அண்டை மாநிலங்களுக்கு சாதகமாகவும், கெய்ல் வழக்கில், தமிழக விவசாயிகளுக்கு பாதகமாகவும்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

-அய்யாக்கண்ணு, தேசிய தென் மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர்









எரிவாயு மட்டுமல்ல
தமிழகத்தின் பிராணவாயுவையும்
கொண்டுபோகும்
கெயில் திட்டம்.

விளை நிலங்களை
விலை நிலங்களாககூட
விற்க இயலாமல்
மலட்டுமேடுகளாக்க
துணைபோகும் சட்டம்.

விவசாயத்தின் நரம்புகளை
அறுக்கபோகின்றன
ராடசத குழாய்கள்.

நாட்டை ஆள்வதோடு
நீதிமன்றத்தையும்
நிர்வகிக்கும்
தனியார் நிறுவனங்கள்.

ஒரு மாநிலத்தை பலியாக்கி
இரு மாநிலங்களை வாழவைக்கும்
ப(பி)ண நாயகம்
இந்திய சனநாயகம்.

வேடிக்கை பார்க்கும்
சனங்களும்
வெட்டிக்கதை பேசும்
அரசியல்வாதிகளும்
இருக்கும்வரை

தமிழ் நாட்டிற்க்கு
துரோகங்கள் தொடர்கதை.

மீண்டும்..மீண்டும்
சாந்தி அடையாமல்
தவிக்ககிறதே
நம்மாழ்வாரின் ஆன்மா.

உச்சநீதிமன்ற தீர்ப்பை
துச்சமென ம(மி)திப்போம்.

கோரிக்கைகளை விடுத்து
கொலைவாளினை எடுப்போம்.

-இன்பா

Sunday, January 17, 2016

அஞ்சலி - முனைவர் கே.ஏ.குணசேகரன்

"மனுசங்கடா!!! நாங்க மனுசங்கடா!!!
உன்னப் போல அவனப் போல
எட்டு சானு ஓசரமுள்ள
மனுசங்கடா!!! நாங்க மனுசங்கடா"

தலித் இசையை தரணியெங்கும் 'தன்னானே' இசைக்குழு மூலம் கொண்டு சென்ற ஐயா முனைவர் கே.ஏ.குணசேகரன் அவர்கள் இன்று புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.

" வலையென்ன பெரும் கனமா…. அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா…" என்று பாடிய மக்கள் கலைஞனை மரணவலையிலிருந்து விடுவிக்க இயலுமா??

-இன்பா

Thursday, January 7, 2016

ஆனந்தவிகடனில் (13.1.2016) பத்து செகண்ட் கதை

இந்த வார ஆனந்தவிகடனில் (13.1.2016) எனது பத்து செகண்ட் கதை பிரசுரமாகி உள்ளது. இது விகடனில் வெளிவரும் எனது மூன்றாவது கதை.


பலரது கவனத்தை ஈர்த்திருக்கும் அந்த கதை இங்கே.

                                      கண்டனம்

இணையத்தில் பரவிவரும் ஆபாசபாடலை தடை செய்யகோரி சென்ற
மாபெரும் கண்டன ஊர்வலத்தை மெதுவாக ஊர்ந்து கடந்தன
ஆற்றுமணல் அள்ளிய லாரிகள்.

-இன்பா

Friday, December 25, 2015

பாருரு வாய...



இசைஞானி இளையராஜாவின் இசையில் 1000 வது படமாக வரவிருக்கும் "தாரை தப்பட்டை" படத்தில் மாணிக்கவாசகர் அருளிய "பாருருவாய"  என்னும் திருவாசக பாடல்கள் இடம் பெற்று இருக்கின்றன.

அந்த பாடல்களும், அதன் விளக்கமும் இங்கே.



பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.

                                                (திருவாசகம் பாடல்:1)

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே.

                                               (திருவாசகம் பாடல்:4)

விளக்கம் :(திருவாசகம் பாடல்:1)

சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டருள் வாயாக.

விளக்கம் : (திருவாசகம் பாடல்:4)

எம்பிரானே! முத்துப் போன்றவனே! மாணிக் கத்தைப் போன்றவனே! தலைவனே! முறையோவென்று எவ்வள வாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவனாகின்றேன். ஆதலின் பற்று இல்லாதவனாயினும், வணங்குதல் இல்லாதவனாயினும் உனது மேலான பசுமையான கழலையணிந்த திருவடிகளைக் காண்பற்கு விருப்பமில்லாதவனாயினும், துதித்திலேனாயினும் என் பிறவியைப் போக்கியருள்வாயாக.

- இன்பா

Monday, December 21, 2015

ஆனந்த விகடனில் பத்து செகண்ட் கதை (23.12.2015)

இந்த வார ஆனந்த விகடனில் (23.12.2015) இரண்டாவது முறையாக நான் எழுதிய பத்து செகண்ட் கதை பிரசுரமாகி உள்ளது.

தமிழக முதல்வரின் ஆட்சியை பற்றிய கட்டுரை வெளியிட்டதால், அப்பத்திரிக்கைக்கு எதிராக மறைமுகமாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று, காவல்துறை மூலமாக விகடன் ஏஜெண்டுகளுக்கு மிரட்டல் விடுத்தது. அதன் அடிப்படையில் உருவான கதை(!)  இது.



Thursday, November 26, 2015

ஆனந்த விகடனில் பத்து செகண்ட் கதை (25.11.2015)

இந்த வார ஆனந்த விகடனில்(25.11.2015)  பிரசுரமான எனது பத்து செகண்ட் கதை(10 second story)


Friday, November 13, 2015

வேதாளம் vs. தூங்காவனம் - வெற்றி யாருக்கு?


கத்தி,லிங்கா படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து ஒட்டுமொத்த திரை உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அஜித்.

கொட்டும் மழை. போட்டிக்கு கமல் படம் என்னும் தடைகளை கடந்த இந்த சாதனை ரஜினிக்கு அப்புறம் அஜித்துக்குதான் தமிழகத்தில் "மாஸ்"  என நிருபித்து இருக்கிறது வேதாளம்.

"ஒரே வார்த்தையில் சொல்வதானால் " திருப்தி " .....படம் பார்க்கும் அனைவருக்குமே அல்லது அதிக சதவிகித ரசிகர்களுக்கு ....... திருப்தி அளிக்கக் கூடிய படம்தான் வேதாளம்" என்று எழுதி இருக்கிறார் நீண்ட வருடங்களாக திரை உலகில் பணியாற்றி வரும் திரு.வெங்கட் சுபா அவர்கள்.

"சிலர்.... இப்படம் சுமார் ... மொக்க ... ரொம்ப பழசு ... செயற்கைத்தனம் அதிகம் ... அஜீத் மிகவும் வயதானவராக தோன்றுகிறார். சுருதி ஹாசன் வழக்கம் போல பொம்மை போல உடை அணிந்து ஆபாசத்தை தொடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ... முக்கியம் இல்லாத கதாபாத்திரத்தில் முந்தி முந்தி வந்து நிற்கிறார். சூரி ஒரு அளவுக்கு மேலே போர் அடிக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ஆதிக்கம் செலுத்த அஜீத் வசனக்களில் போடும் சண்டையே அதிகம் என தோன்றுகிறது..... பழைய சரத்குமார் ஏ வெங்கதேஷ் படக் கதைதான் புதிய முலாம் பூசப் பட்டிருக்கிறது... வில்லன்கள் பின்னணியை ஏத்தி வைத்த அளவுக்கு காட்சிகள் அமைக்கப் படவில்லை ... இடைவேளைக்காட்சியில் இருந்த விறுவிறுப்பு உச்சக் கட்ட காட்சியில் இல்லை .... இப்படியும் இன்னமும் கூட ஆயிரம் கருத்துகளை முன் வைக்கலாம்...

ஆனால் இப்படத்தில் அஜீத் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்..... ஒரு வணிக ரீதியில் வெற்றி பெற இப்படத்தில் அனைத்து அம்சங்களையும் சேர்த்திருக்கிறார். இன்றைய இளைஞர்களின் இசைக்கலைஞன் அனிரூத் இசைக்கு செம குத்து ஆட்டம் ஆடி இருக்கிறார். ஏ எம் ரத்னம் பின்னணியில் இருந்து தயாரிக்கப் பட்ட இப்படத்திற்கு பிரும்மாண்டமான காட்சிகள் பலம்.... இயக்குனர் சிறுத்தை சிவா ... உடன் கதை எழுதி இருக்கும் ஆதி நாராயணா இருவரும் சில பல தெலுங்கு படங்களில் இருக்கும் வேகம் தங்கை செண்டிமெண்ட் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மசாலா அம்சங்கள் அனைத்தையும் இந்த தமிழ் படத்தில் கொண்டு வர நினைத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள்... இதை எல்லாம் தாண்டி இந்த தீபாவளி நாளில் மட்டும் சுமார் 15 கோடி வசூலை எட்டி இருக்கிறது வேதாளம் சென்ற தீபாவளிக்கு வந்த கத்தி படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சி விட்டது ... தூங்காவனத்தை விட பல மடங்கு வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது"

என்றும் திரு.வெங்கட் சுபா தெரிவிக்கிறார்.

அவரின் கூற்றை உண்மையாக்கும் விதத்தில் வேதாளம் ஒடும் திரை அரங்குகளில் குடும்ப சகிதமாக கூட்டத்தை காணமுடிகிறது.

வேதாளம் எல்லா தரப்பையும் சென்றடைந்து இருக்கிறது.

ஆனால் தூங்காவனம் 'எ' சென்டர்களில் எடுபட்ட அளவுக்கு, மற்ற பி சென்டர்களில் எடுபடவில்லை.

தூங்காவனம் சுமாராக ஓடினாலும் லாபம் நிச்சயம் காரணம் குறைந்த விலை.

வெறும் 14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சன் டிவி உரிமை, அமெரிக்க வசூல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது......தூங்காவனம், முதலுக்கு மோசமில்லாமல் ஒரளவுக்கு லாபம் இருக்கும்.

வேதாளம் சூப்பராக ஓடினாலும் சுமார் லாபம்தான் சாத்தியம், காரணம் மிக அதிக விலை.

தற்போதைய நிலவரப்படி படம் சந்தேகமில்லாமல் வேதாளம்
'ஹிட்'தான்,  ஆனால் 'மெகா ஹிட்டா' என அறிய, நாம் இன்னும் ஒரு வாரமாகவாவது காத்திருக்க வேண்டும்.

படத்துக்கு பெரும் போட்டியாக வந்த தூங்காவனம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், வேதாளத்துக்கு முன் பெரிதாக தாக்குபிடிக்கவில்லை என்றாலும், இந்த இரண்டு படங்களுக்குமே பெரும் போட்டியாக இருக்கிறது....விடாது பெய்யும் மழை.

-இன்பா

Thursday, November 5, 2015

மனநோயாளிகளை உருவாக்கும் மெகா தொடர்கள்

“உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம்.

தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த செய்திகள் அதிர வைக்கின்றன.


பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும், தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6.5 எபிசோடுகளைப் பார்ப்பதாகவும், அதிலும் குறிப்பிட்ட 3 சானல்களை 54 சதவீதம் பேர் பார்ப்பதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கேரளத்தில் இது 4 எபிசோடுகளாக உள்ளதாகவும், பிற்பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கேரளம், கர்நாடகத்தை விட தமிழகமும், ஆந்திரமும் தான் முன்னணியில் உள்ளதாகவும்,அதிலும் முன்னணில் இருப்பவர்கள் பெண்கள் என்றும் அந்தப் புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.

தொலைக்காட்சிகளால் நம்மவர்கள் அடைந்த பயன்தான் என்ன? பக்கத்து வீடுகளுடனான தொடர்பும், சச்சரவுகளும் குறைந்துள்ளது. கொலையும், கொள்ளைகளும், வீடுகளில் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன என்பது தான் பதில்.

பெண்களையும், தொடர்களையும் மையமாக வைத்தே இன்றைய டிவி சேனல்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கொலைக்காட்சிகளாகத்தான் இருக்கின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் டிவி சேனல்களுக்கு நம்மிடையே பெரிய அளவில் வரவேற்பில்லை என்பதும், இந்த தொலைக்காட்சி தொடர்களின் ஆதிக்கத்துக்குக் காரணம். பெண்களை மட்டுமன்றி குழந்தைகளையும் கவரக்கூடிய வகையில் ஏராளமான டிவி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகத்தான் உள்ளன.

சிறுவயதிலேயே டிவிக்கு அடிமையாகும் குழந்தைகள் கண்பார்வைக் குறைபாடுகளுக்கு உள்ளாவதாகவும், மனரீதியான பாதிப்புக்குள்ளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை வீதியில் கொண்டாடிய காலம் போய் இன்று டிவியில் பார்த்து ரசிக்கிற காலத்தில் இருக்கிறோம். பண்டிகைக் காலங்களில் கோயில்களுக்குச் செல்வது,உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவது போன்ற பழக்க வழக்கங்கள் எல்லாம் இன்று நம்மிடம் இருந்து மறைந்து போய்விட்டது (மறந்து போய்விட்டது) என்றே சொல்லலாம்.

"ஓடி விளையாடு பாப்பா" என்று சொன்ன கவிஞர் பாரதி வாழ்ந்த நாட்டில், இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழகிவிட்டோம்.

டிவி சேனல்கள்,இணையத்தின் வருகையால் இன்றைக்கு மைதானங்களில் விளையாடுவோரின் எண்ணிக்கையும்,தெருமுனைகளில் கதை பேசுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக இன்று ஏராளமானோரை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பது இணையதளம். தொலைக்காட்சியின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியையும்,வரவேற்பையும் பெற்றுள்ளது இணையதளம்.

அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்களைப் போன்று தோன்றியிருக்கும் தெருமுனை பிரவுஸிங் சென்டர்கள்.

சமூகத்தில் மாற்றங்களும்,இணையத்தால் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில் அதனால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மணிக்கணக்காக டிவி மற்றும் இணையதளங்களின் முன் அமரும் பெரும்பாலன இளைஞர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும்,

தவறான வழிகளில் செல்வதாகவும்.சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுற்றத்தோடும்,உறவுகளோடும் வாழ்ந்தவர்கள் அக்கால மனிதர்கள். தொலைக்காட்சியோடும்,இணையத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் இக்கால மனிதர்கள்.

இன்றைய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைவிடஅதைப் பார்த்து ரசிப்பதைத்தான் விரும்புகின்றனர்.

இதன் விளைவு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் மெச்சுகின்ற அளவுக்கு இந்தியர் யாரும் இல்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது.

உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள் கூட ஒலிம்பிக்கில் கோப்பையை வென்ற நாடுகளின் பட்டியலில் ஒளிர்கிறது. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் நிலையோ வெற்றிப்பட்டியலில் தேடும் நிலையில் தான் இருக்கிறது.

இன்று நடனம் என்ற பெயரில் வரும் நிகழ்ச்சிகளில் ஆபாச கூத்துக்கள் அரங்கற்ற பட்டு வருகின்றன. குடிப்பதும், கள்ள உறவுகளும் இன்று வரும் மெகா தொடர்களில் சகஜம். தங்கள் வீட்டு குழந்தைகளும் டிவி பார்க்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இந்த டிவி சம்பந்தப்பட்ட ஆசாமிகளுக்கு இல்லாதது ஏன்?

கீழ்த்தரமான உறவுகள்,சதி திட்டம் தீட்டும் வில்லிகள் என சொல்லிவைத்தாற் போல எல்லா சீரியல்களும் கிட்டத்தட்ட ஒரே விதமான கதையம்சத்தோடுதான் இருக்கின்றன.

நடிகர்,நடிகைகளும்,டைட்டிலும்தான் மாறுபடுகின்றன.

டிவி தொடர்களுக்கு, குறிப்பாக சன் டிவியில் வரும் மெகா தொடர்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுபவர்கள், உடனடியாக எதாவது ஒரு மனநல மருத்துவமனையில் அட்மிட் ஆவது, அவர்கள் தமிழ் நாட்டிற்க்கு செய்யும் சிறந்த நல்ல காரியமாகும்.

சினிமாவை போலவே, சின்ன திரைக்கு எப்போது, எந்த அரசு தணிக்கை கொண்டு வர போகிறது?

-இன்பா

Saturday, October 31, 2015

சென்னையில் நேதாஜி


"நேதாஜி உயிருடன் இருக்கிறார். அதற்க்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது' என்று வைகோ அவர்கள் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

சமீபகாலமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை பற்றிய செய்திகள் அடிப்பட்டு கொண்டு இருக்கின்றன.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்குச் செல்லுமுன் பிப்., 8, 1943ல், தன் சகோதரர் சரத்சந்திரபோசுக்கு தன் கைப்பட வங்க மொழியில் ஒரு கடிதம் எழுதி, அதை அவரது ஆஸ்திரிய மனைவி எமிலி ஷெங்கில்லிடம் கொடுத்திருந்தார்.

நேதாஜி 1941ல் எமிலியை மணந்து கொண்டார். ஒரு வருடம் மனைவியுடன் தங்கி இருந்தார். பெண் பிறந்து 27வது தினத்தில் ஜப்பானுக்குப் புறப்பட்டார். 1935ல், "இந்தியப் போராட்டம்' என்னும் நூலை நேதாஜி எழுதிய போது, சுபாஷின் காரியதரிசியாக பணியாற்றினார் எமிலி. திருமதி எமிலி ஆஸ்திரியாவில் ஒரு மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பெண்.

அக்கடிதத்தை, 1948ல் வியன்னாவிற்கு சென்றிருந்த சரத்போசுவிடம் கொடுத்தார் எமிலி.

நேதாஜி எழுதிய வங்கக் கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு...

பெர்லின், 8.2.1943
என் பேரன்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு,

இன்று நான் மறுபடியும் தாயகம் நோக்கிப் புறப்படுகிறேன். என் பிரயாணமோ பேராபத்து நிறைந்தது. இம்முறை தாயகம் வரவே கிளம்புகிறேன். ஒரு வேளை நான் அங்கு வந்து சேர இயலாமல் போனாலும் போகலாம். வழிப் பிரயாணத்தில் நான் ஏதும் விபத்திற்குள்ளானால் என்னைப் பற்றிய குறிப்பு ஒன்றை எழுதி, அதை தங்களிடம் உரிய காலத்தில் சேர்ப்பிக்கச் சொல்லியுள்ளேன்.

நான் இங்கே கலியாணம் செய்து கொண்டு குடும்பஸ்தனாகி விட்டேன். என் மனைவிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அண்ணா! தாங்கள் என் வாழ்நாள் முழுதும் என்னிடம் காட்டி வந்த அன்பு எல்லையற்றது. அதே அன்பை, கருணையை, என் மனைவி, மகள் இருவரிடத்தும்... நான் இம் மண்ணுலகினின்று நீங்கிய பின்னரும், ஒரு போதும் காட்டத் தவறாதிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மனைவியும், பெண்ணும், நான் உலகில் அரை குறையாய் விட்டுச் செல்லும் பணியை வெற்றியுடன் செய்து முடிப்பார்களாக! இதுவே, நான் ஆண்டவனிடம் செய்து கொள்ளும் இறுதியான பிரார்த்தனை. விடை பெற்றுக்கொள்கிறேன்.

அண்ணா! தங்களுக்கும், அண்ணியார் அவர்களுக்கும், மகா பூஜிதையாகிய நம் அன்னையார் அவர்களுக்கும், நமது குடும்பத்தார் அனைவருக்கும் எளியேனின் மதிப்பிற்குரிய வணக்கம்.

தங்கள் பேரன்பிற்குரிய

சகோதரர் சுபாஷ்.

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல...' என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர் நேதாஜி.

அவர் ஒரு மாபெரும் தியாகி. விவேகானந்தரின் கருத்துக்களால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டை துறந்தவர். ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்தவர், இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்திய மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த பதவியை துறந்தவர். குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களாவை 35 வயதில், "தேவையில்லை' என, தேசத்திற்காக அர்ப்பணித்தவர்.

காங்கிரஸ் கட்சி தலைவராக 42வது வயதில் வெற்றி பெற்ற போதும், அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனேயே அந்த பதவியை தூக்கி எறிந்தவர்.

ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85 ஆயிரம் வீரர்கள் கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர்; அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்.

நம்மிடையே, "வாழ்ந்து' கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் 3,4,5 ஆகிய தேதிகளிலும், பின் 1940 ம் ஆண்டு, ஜனவரி 10,11 ஆகிய தேதிகளிலும் வந்து தங்கியுள்ளார்.

தேச பக்தரான அய்யாசாமி என்ற பொறியாளர், 1930ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தங்கினார் நேதாஜி. இப்போது, அய்யாசாமியின் பேரனான, எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும், புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்.

நேதாஜி வந்து தங்கியிருந்த போது ஆன செலவு, தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போகிறது. கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட பல அரிய படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்தும் போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும், இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது காங்கீரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

"காங்கிரஸ் தலைமை,நேதாஜியின் இறுதி காலம் குறித்து முழுமையான விசாரணை நடத்தாமல் விட்டுவிட்டதே அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் போனதற்க்கு காரணம்" என்று முதல்முறையாக பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

நாடு விடுதலை அடைந்ததும் காங்கிரசை கலைத்துவிடுங்கள் என்று சொன்னார் காந்தி. ஆனால்,காந்தியடிகளின் பெயரை அடித்தளமாக வைத்து ஆட்சி பிடித்துவிட்டது காங்கிரஸ் கட்சி. அதன்பொருட்டே காந்தி தாத்தா, நேரு மாமா என்று பெருமையுடன் பாடப்புத்தங்களை திட்டமிட்டு தயாரித்த காங்கிரஸ், நேதாஜியையும்,அவரது வரலாற்றையும் இருட்டிப்பு செய்துவிட்டது.


காணாமல் போகும் குருவிகள் - தைலஞ்சிட்டுகள்


பருவ மழையால் இந்தியாவேகுறிப்பாக நம் தமிழகம் தற்போது நனைந்து நடுங்குகிறதுதெருவெல்லாம் தண்ணீர் ஓடகுறுகிய உடலும் குடையுமாய் இல்லம் நோக்கி விரைகின்றனர்ஒழுகும் வீட்டையும்ஒடிந்து போன மரக்கிளைகளையும்அறுந்து விழுந்த மின்சார வயரின் மறு இணைப்புக்காக மின்வாரிய ஊழியரை வேண்டிய வண்ணம் சலிப்புடன் காத்திருக்கின்றனர்

தாய்மார்கள் ஈரத்துணியைக் காய வைக்க முடியவில்லை என்ற கோரிக்கையில் துவங்கி இன்னும் ஏதேதோ பட்டியலிடுகின்றனர்மழையே காரணமாய் அமைந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்ற இனிய செய்தி தொடர் செய்தியாய் காதுகளுக்குள் பாயாதா என ஏங்கிய வண்ணம் குழந்தைகள்

என்னைப்போல் வெகுசிலரே கொட்டும் மழையிலும்உடைந்து ஓடும் கண்மாய்க் கரையோரமும்கம்பீரமாய் நுங்கும் நுரையுமாய் வெளியேறும் மறுகா வாயிலிலும் கால்களை நனைத்தவாறு உள்ளோம்கூட்டமும்குடும்பமும் விநோதமாய் பார்க்கிறது...........

எங்களைப்போலவே புள்ளினங்களும் என் வீட்டுக் கூரை மீது மகிழ்வுடன் பறந்து போகின்றனஏதேதோ பெயர் தெரியாத செடி கொடிகள் மிக அழகாய் பூத்துக் குலுங்கின்றன.

தீபாவளி தினத்தன்று குன்னூர் பாலம் கீழே ஓடும் வைகை ஆற்றைப் பார்ப்பதற்குச் சென்றேன்

நூற்றுக்கும் மேற்பட்ட தைலஞ்சிட்டுகள்.ஆனந்தமாய் பாட்டுப்பாடி நடனமாடி பறந்தவாறு இருந்தனஇது போல 4,5 கும்பல்களை என்னால் காண முடிந்ததுமழைக்கால குளிர் வேளையில் இதனைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறதுஇவ்வளவு குருவிகளை நான் கண்டு பத்து வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது...!


ஆங்கிலத்தில் swallows என அழைக்கப்படும் இச்சிட்டுகள் பல பிராந்திய பெயர்களைச் சுமந்துள்ளனதகைவில்லான்தலையில்லாக் குருவிதம்பாடி என பல பெயர்கள் சூட்டி அழைக்கப்பட்ட இவ்வினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதாய் சிவப்பு எழுத்துக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது

இக்குருவிகளைப்பற்றிய தகவல் சேமிப்புகளும்புத்தக வெளியீடுகளும் மிகக் குறைவாகவே கிடைக்கப்பெறுகின்றது

1789ல் டாக்டர் கில்பர்ட் ஒயிட் இக்குருவிகள் தொடர்பாக ஆய்வு நடத்தி வெளியிட்ட கட்டுரையே இன்றளவும் ஆகச்சிறந்த குறிப்பாக பறவையியல் வல்லுநர்களால் வாசிக்கப்படுகிறதுஇக்கட்டுரைத் தொகுப்பில் இவர் பல பறவைகள் ,சிறு பூச்சியினங்கள் குறித்தும் எழுதியுள்ளார்தகைவிலான் குருவிக்காக இவர் 21 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.

உலகம் முழுதும் 89 உள் வகுப்பு இவ்வினத்தில் உண்டுதென்னிந்தியாவில் மிக அதிக அளவு வாழ்ந்த இவை இளைப்பிற்கான மருந்து தயாரிக்ககுழந்தைகளின் நெஞ்சுச் சளி தீர்ப்பானாக பாவிக்கப்பட்டும்இதன் கறிக்காவும் கும்பல் கும்பலாக கொல்லப்பட்டுவிட்டன.

ஒரு நபர் இப்பறவைகள் வேட்டையில் 25 குருவிகளைக் கொல்லுவதை நானே பார்த்திருக்கிறேன்மிக வேகமாவும்வளைந்து நெளிந்துமேல் கீழ் எனபறக்கும்அலைவரிசையை அடிக்கடி மாற்றிக் கொள்ளும்இப்பறவைகளைக் கொல்வதற்கு என்றே நேர்த்தியான கவை கொண்ட தேர்ச்சி பெற்ற கொலையாளிகள் காட்டிற்கு அனுப்பப்படுவர்1970களில் தேவாரம் நகர் முழுதும் நிறைந்து காணப்பட்ட இவை இன்று முற்றிலும் அழிந்தே போனது.


கூட்டம் கூட்டமாக வாழும் தம்பாடிகளில் ஆணே தலைவனாக முன்னின்று ,அனைத்து செயல்பாடுகளையும் நடத்துகிறதுபெண் துணை புரிகிறதுஇளம் வயதினர்கும்பலின் உறுப்பினர்களையும்சிறு உதவிகள் செய்பவராகவும் உள்ளனர்உணவிற்காக இக்கும்பல் தேடுதல் வேட்டையில் ஈடுபடும்ஆதலால் இடம்விட்டு இடம் பெயருதல் நடைபெறும்அப்போது குழுக்களுக்கு இடையே பெரும் போர் நிகழும்ஒரு குழு மற்றொரு குழுவால் விரட்டியடிக்கப்படும் வரை போர் நிகழும்தவிர பிற பறவைகள் இவைகளை வெகு எளிதில் வேட்டையாடும்குறிப்பாக கழுகுராஜாளிவல்லூறுசில சமயம் காக்கை போன்றவையும் மூர்க்கத்தோடு,இக்கும்பலைத் தாக்கி ,துவம்சம் செய்கின்றனஇவை உணவைப் பங்கிட்டு கொள்ளும் இயல்பு கொண்டவை

புழுக்களையும்பூச்சி,வண்டினங்களையும் தின்பதால் விவசாய சேதாரத்தை ஓரளவு குறைக்கின்றனஆனாலும் விவசாயிகள்வலை விரித்து பிடித்துக் கொல்லும் அவலம் இன்றும் நடந்தவாறு உள்ளது.

இதன் காதல் வாழ்க்கை ரொமாண்டிக்கானதுபெண்ணை மயக்க ஆண் பல உத்திகளைக் கையாள்கிறதுகுறிப்பாக இக்குருவிகளின் சிறப்பே இவைகளின் நீண்ட இரட்டைவால் அமைப்புதான்ஆணிற்கு மிக நீண்ட வாலும்பெண்ணிற்கு சற்று குட்டையானதாகவும் இருக்கும்நீண்ட வாலைக் கொண்ட ஆணின் மீதே பெண் காமம் கொள்கிறதுஇக்குருவிகள் பழுப்புகறுப்பு வண்ண இறகுகளைக் கொண்டிருக்கும்ஆண் அவ்வப்போது அதைக் கோதி விட்டபடி நேர்த்தி செய்தவாறே இருக்கும்

1 வருடத்திற்கு ஒரு ஜோடி என்ற விகிதாசார அமைப்புபடி சேர்ந்து வாழும்காமம் கொள்ளும் சமயங்களில் இவை அடிக்கடி பாரம்பரிய முறைப்படியே உறவு கொள்கின்றனஅப்போது பெண்தன் இரு கன்னக் கதுப்புகள் உப்பியவாறும்நெஞ்சின் முன்பாகம் லேசான வௌ்ளை அல்லது நீலநிறம் ,பளபளக்கும் பச்சை நிறம் படர மேலெழும்பிதான் காமம் கொண்டிருப்பதை ஆணிற்கு சமிக்ஞை செய்யும்இதைப் புரிந்த ஆண் உறவுக்குத் தயாராகும்அப்போது அதுபலவித ஸ்வரங்களில் குரலெழுப்பி ,மேலும் கீழும் பறந்தவாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்இந்த தருணங்களில் மற்ற இளம் ஆண் பெண் பறவைகள் ,பிற பறவையினங்கள் இந்த ஜோடியைத் தாக்காதவாறு அரண் போல் நின்று காவல் செய்யும்இது இப்பறவைகளுக்கே உரித்தான சிறப்பு குணம் என்கிறார் கில்பர்ட்.


உறவுக்குப்பின் பெண் கருவுற்ற 18 நாட்களுக்குப்பின் 2 முதல் 5 முட்டைகளை இடஅவை பிற பறவைகளின் கூடுகளை,மரப்பொந்துகளைப் பயன்படுத்துகின்றனஆப்பிரிக்க தேசத்திலுள்ளவைகளில் ஆண்மண்ணால் குளவிகளைப் போல கூடமைத்து தருகிறதுஐரோப்பிய தேசங்களில் நகர முனிசிபல் நிர்வாகம் இப்பறவைகளுக்கென செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட கூடுகளை,கம்பம் அமைத்துநீள வாக்கில் கயிறுகளைக் கட்டித் தொங்க விடுகின்றனஇம்முட்டைகளின் மேல் சிவப்பு புள்ளிகள் இருக்கும்21நாள் அடைகாத்தலுக்குப்பின் குஞ்சு பொரிகின்றனஅடைகாப்புகுஞ்சுகளுக்கான உணவு வேட்டை போன்ற பணிகளை பெண்களே ஏற்று செய்கின்றனஇக்குருவிகள் அத்தகு காலங்களில் தண்ணீர் அருந்துவதில்லை

இதனை ஐசோடோப் சோதனை மூலம் கண்டறிந்தனர்ஒரு வருட பெற்றோரின் கவனிப்புக்குப் பின் குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியேறுகின்றனஇருப்பினும்அவை கொல்லப்படாமல் இருப்பின் சில வருடங்கள் வரை தங்கள் பெற்றோரைக் காண வருகை புரிகின்றனதாங்கள் பருவம் எய்யும்போது,தங்கள் பெற்றோரின் கூட்டைக் கைப்பற்ற தயங்குவதில்லை.

எதிரிகளைத் தாக்குவதில் இவை ஒற்றுமையாகச் செயல்படுகின்றன
அப்போது சில தந்திரங்களைக் கையாளுகின்றனகும்பலாக எதிரிகளைத் தாக்குவதும்முக்கோண வடிவில் வியூகம் வகுத்து மிக விரைவாக பறந்து வருவதும் இவைகளின் சிறப்பியல்பு.இப்பறவைகளின் பறக்கும் திறன் மிகச் சாதரண தருணங்களில் 30 கி.மீட்டரும்விரைவாகச் செயல்பட வேண்டிய தருணங்களில் 60கி.மீட்டராகவும் உள்ளனபாம்புகீரிபிற மாமிசம் உண்ணும் பறவை உயிரிகள் கூட்டில் உள்ள முட்டைகளைகுஞ்சுகளையே தாக்குகின்றன.


அரிஸ்டாட்டில்ஷேக்ஸ்பியர்ஜான் கீட்ஸ் போன்ற பேரிலக்கியவாதிகள் முதல் மருதகாசிகண்ணதாசன்பாரதி என நம் தமிழ் பாடலாசிரியர்கள் வரை தங்கள் பாடல்களில் இக்குருவியைத் தூது விட்டவர்களாகவும்இதன் வட்டமைத்த இசையில் மயங்கியவர்களாகவும் உள்ளனர்எஸ்டோனியா நாடு தங்கள் தேசியப் பறவையாக இதனை மரியாதை செய்கிறது

ஐரோப்பிய தேசம் முழுதும் "தங்கள் பறவை"(our bird) என யாரேனும் அழைத்தால் அது இக்குருவியையே அழைக்கின்றனர் என்பதை நாம் அறிய வேண்டும்

ஆனால் நம் மக்கள்......இக்குருவியை பற்றிப் பேசும்போதுஇதன் "மாமிச சுவையின் அலாதி"க்குத் தான் மதிப்பளிப்பதை இன்றும் கைவிடவில்லை.......?

கட்டுரை : எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.

Thursday, October 29, 2015

உடையார் - அஜித்தின் அடுத்தபடம்

எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அவருடன் இணைந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் பயனித்து கொண்டிருக்கிறேன், இது பற்றிய விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக அறிவித்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

அவர் ஆறுபாகங்களாக வெளிவந்த பாலகுமாரனின் "உடையார்" நாவலுக்கு திரைக்கதை அமைத்துகொண்டு இருக்கிறார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம். மாறாக உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தை, குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றை கதைக்களமாகக் கொண்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அலற்ப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில், இத்தனை பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும்.

தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்க்கான உந்துதல்களில் சிலவாக பாலகுமாரன் குறிப்பிடுகிறார்.


"நான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்ச நேரம். என் சித்தப்பா கூட, முதன்முறையா தஞ்சை கோவிலுக்குப் போறேன். "இது உனக்கு பரிச்சயமான இடம்தான்'ன்னு, மனசு சொல்லுது! "இங்கே சிவலிங்கம் இப்படித்தான் இருக்கும்'னு நினைக்கிறேன். அப்படியே இருக்குது. "அர்ச்சகர் இப்படி இருப்பார்'னு நம்புறேன். அவரும் அப்படியே இருக்கிறார். நிறைய பேர்கிட்டே விசாரிச்சேன். யாருக்கும் ஒண்ணும் தெரியலை. "இவ்ளோ பெரிய கோவில்! ஆனா, இதோட வரலாறு யாருக்கும் தெரியலையே'ங்கற வருத்தம் ஏற்பட்டது. கோவிலைச் சுத்தி வரும்போது, "இது ரொம்ப அநாதையா இருக்கு. இந்த கோவில் இப்படி இருக்கக்கூடாது'ன்னு அழுதேன்! ஆனா, அந்தசமயத்துல கூட, இந்த கோவிலைப்பத்தி எழுதணும். இதை நாவலாக்கணும்னு எனக்கு தோணவேயில்லை. ஆனா, தினமும் யோசிச்சேன். இதை எப்படி கட்டியிருப்பான்?ன்னு யோசிச்சேன். கல்வெட்டுக்களை தேடிப் படிக்கணும்னு முடிவு பண்ணுனேன்.

என் 27 வயசுலதான், முதல் கல்வெட்டு படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. "நான் கொடுத்தனவும், நம் மக்கள் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும்'ங்கற ஒரு கல்வெட்டை, கையில புத்தகம் வைச்சுக்கிட்டு தடவித் தடவி படிச்சு முடிச்சேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்படி, பல கல்வெட்டுக்களை படிச்சேன். அதுமூலமாத்தான் ராஜராஜனை விட, கிருஷ்ணன்ராமன் என்னை அதிகமாக ஈர்த்தான்.

 கிருஷ்ணன்ராமன்...அவன்...பிரம்மராயன். ராஜராஜனோட சேனாதிபதி. ஒரு பிராமணன் எப்படி சேனாதிபதியா இருந்திருக்க முடியும்?ன்னு, எனக்குள்ளே ஒரு ஆச்சர்யம்! அவனது சொந்த ஊரான அமண்குடியை தேடிப் போனேன். அங்கே, அற்புதமான காளி கோவில் இருக்கு. அது, அவன் கட்டின கோவில். அந்த கோவிலை நான் ரசிச்சுட்டு இருந்தப்போ, 90 வயசு கிழவர் ஒருத்தர் அப்படியே நின்னு என்னை பார்த்துட்டு இருந்தார். "இத்தனை நாளாச்சா வர்றதுக்கு?'' அவர் கேட்டவுடனே, ஒரு நிமிஷம் எனக்கு வயிறு கலங்கிடுச்சு. அந்த கிழவர் அப்படியே நடந்து, கருங்கல் சுவத்துக்குள்ளே புகுந்து போயிட்டார். அந்த நிமிஷத்துலதான்...சோழனைப் பத்தி எழுதணும்னு முடிவு பண்ணினேன். அப்பவும்கூட, "கிருஷ்ணன்ராமன் இல்லையெனில் ராஜராஜன் இல்லை'ன்னு, என் மனசுக்கு உறுதியா தோணுச்சு! அவனைப் பத்தின தகவல்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்.

கிருஷ்ணன்ராமனைப் பத்தி நான் திரட்டுன தகவல்கள் மூலமா, ராஜராஜனைப் பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். ராஜராஜன் எப்படியிருப்பான்? பெரிய கொண்டை, ஒல்லி உடம்பு, மீசை, கொஞ்சூண்டு தாடி... இதுதான் ராஜராஜன்னு, ஓவியங்கள் அடையாளம் காமிச்சது. அவன் வடித்த கல்வெட்டுக்கள் மூலமா, அவனோட மனசை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சோழ தேசத்தின் மீது எனக்கு காதல் வர, ராஜராஜனும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊராகப் போய், சோழர்கள் பத்தின விபரங்களை தேட ஆரம்பிச்சேன். சேர்த்து வைச்சிருந்த பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவு பண்ணினேன். அப்பதான் புரிஞ்சது. சோழ தேசத்து மேல எனக்கு இருக்கறது காதல் அல்ல...வெறி!

 ராஜராஜனின் உள்மன அலசல்! இதை... யாருமே மக்களுக்கு சொல்லலை! நான் " உடையார்' மூலம் சொல்லியிருக்கிறேன்!'

என்று விளக்கம் அளித்து இருக்கிறார் பாலகுமாரன்.



சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து,யுடிவி மோஷன் பிக்சர்ஸ் கூட்டுதயாரிப்பில், இயக்குனர் விஷணுவர்தன் இப்படத்தை
உருவாக்க இருக்கிறார்.

வேதாளம் படத்தை அடுத்து, முதல்முறையாக இந்த சரித்திர படைப்பில் ராஜராஜ சோழனாக, அஜித்குமார் நடிக்க இருக்கிறார்.

அவரது சேனாதிபதியாக, படத்தில் முக்கிய வேடத்தில், ஆரம்பம் புகழ்  ராணா டகுபர்டி நடிக்கவிருக்கிறார்,

உடையார் என்பது பெருவுடையார் என்று குறிக்கும்.

தெலுங்கு மக்களுக்கு எப்படி "பாகுபலி"யோ, அதுபோன்று தமிழ் மக்களுக்கு "உடையார்" நிச்சயம் அமையும்.

-இன்பா 

Sunday, October 25, 2015

கண்களை நிறைக்கும் தஞ்சை பெரியகோவில்

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், நான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று இருந்த போது,கருவறைக்கு மிகவும் அருகில் சென்றும், பிரகதீஸ்வரரை தரிசனம் செய்ய இயலவில்லை. அந்த அளவுக்கு இருட்டு.

நடிகர் எஸ்.வி. சேகர் கூட, தனது ஒரு நாடகத்தில் ஒளிந்து கொள்ள சரியான இடம் தஞ்சை கோவில் கருவறை என்று கிண்டல் செய்து இருக்கறார்.

ஆனால்,இன்று பெரிய கோவிலின் நிலை வேறு. கூட்டம் நிறைந்த,நன்கு பராமரிக்கபட்ட, தஞ்சை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாது சுற்றுலா பயணிகளின் முக்கியமான இடமாகி விட்டது அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம். கோவிலின் அறங்காவலராக இருக்கும் மராத்திய வம்சத்தை சேர்ந்த சரபோஜி மன்னரின் குடும்பத்திற்கும்,பெரிய கோவில் நிர்வாக கமிட்டிக்கும் இந்த தருணத்தில் நன்றிகள் பல நாம் தெரிவிக்க வேண்டும்.

. தஞ்சாவூர் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை கவுரவிக்கும் விதமாக , பெரியகோவில் கட்டி 1000 ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நமது தமிழக அரசு எடுத்துவரும் சதய விழா, அரசின் பாராட்ட வேண்டிய சாதனைகளில் ஒன்று.

கடந்த 23 அன்று தஞ்சை பெருவுடைய தேவருக்கு  1030 வது ஐப்பசி சதய திருவிழா கோலாகலமாக கொண்டாடபட்டது.


ராஜராஜ சோழன் - தஞ்சை பெரியகோவில் இடையிலான தொடர்புகளை தனது 'தஞ்சை பெரிய கோவிலும் ராஜராஜனும்' என்ற பின்வரும் கட்டுரையில் விளக்குகிறார் கி.ஸ்ரீதரன் அவர்கள்.

இறைவன் வீதி உலா வரும் பொழுது ஒலிப்பதற்காக பொன்னாலான காளங்கள் (பாத்திரங்கள் ) அளிக்கப்பட்டன. அவற்றில் "சிவபாத சேகரன்', "ஸ்ரீராஜ ராஜன்' எனப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கோவிலில் வழிபாட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களிலும் இதே போன்று பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை அறிய முடிகிறது. இக்கோவிலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த (ஸ்ரீகார்யம்) பொய்கைநாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான் ராஜராஜ சோழன், அவனது தேவி லோகமகா தேவி ஆகியோரது பிரதிமத்தை செய்து அளித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இக்கோவிலில் காணப்படும் ஓவியங்களிலும் ராஜராஜ சோழனின் தோற்றத்தைக்கண்டு மகிழலாம்.

மேலும், திருவிசலூர், திருநாரையூர், விளநகர், கோவிந்த புத்தூர் போன்ற கோவில்களிலும் ராஜராஜ சோழனின் வடிவத்தை சிற்பங்களாகக் காண முடிகிறது.பண்டைநாளில்கோவிலை எழுப்பிய மன்னர்கள், சிற்பிகள் போன்றவர்களின் சிற்ப வடிவங்களை ஒரு சில கோவில்களில் காண முடிகிறது. உதாரணமாக, திண்டிவனம் - மரக்காணம் சாலையில் அமைந்துள்ள உலகாபுரம் என்ற ஊரில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் தலைமை தேவியான தந்திசக்தி விடங்கி என்னும் உலோகமாதேவி பெயரால் இவ்வூர் உலோகமாதேவி புரம் எனக் குறிக்கப்படுகிறது. இன்று அது மருவி உலகாபுரம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் அம்பலவன் கண்டராதித்தனார் என்பவரால் கட்டப்பட்டதைக் கல்வெட்டு குறிக்கிறது. கோவிலின் கருவறைக்கு அருகில் சுவரில் கோவிலை எழுப்பிய கண்டாரதித்தனார் சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை சிற்ப வடிவிலே காண முடிகிறது. இதேபோன்று தஞ்சை பெரிய கோவிலிலும் தெற்குபுற அணுக்கன் நுழைவு வாயிலுக்கு (கருவறை அருகில்) அருகே உள்ள சக்கரதான மூர்த்தி சிற்ப வடிவத்திற்கு மேலே மகரதோரணத்தின் நடுவே ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானை வழிபடும் உருவத்தினை காணலாம்.

இவ்வடிவம் ராஜராஜ சோழனது உருவம் என அனைவராலும் கருத முடிகிறது. ஏனெனில், தனது குலநாயகமான ஆடவல்லான் வடிவத்திற்கு இக்கோவிலில் சிறப்பிடம் தந்து மகிழ்ந்திருக்கின்றான் ராஜராஜ சோழன். இக்கோவிலில் பயன்படுத்தப்பட்ட மரக்கால், துலாக்கோல் (தராசு), எடைக்கல் போன்றவைகளுக்கும், "ஆடவல்லான்' என்றே பெயரிட்டு போற்றியிருக்கின்றான் ராஜராஜ சோழன். எனவே, கருவறை தெற்கு தூணில் காணப்படும் சிற்பத்தினை ராஜராஜ சோழன் வடிவமாக கொள்வதில் தவறில்லை.

என்று பெரியகோயிலில் உள்ள சான்றுகளோடு விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் திரு.ஸ்ரீதரன்.

ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது.


ஆனாலும், இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு தீராத கரும்புள்ளியாக இருக்கிறது ஒரு மூட நம்பிக்கை. அதாவது...இக்கோவிலின் நேர்வழியாக,முன்வாசல் வழியாக சென்றால், செல்லும் அரசர் அல்லது தலைவரின் பதவி பறிபோய்விடும் என்பதே அது.

இக்கோவிலில் ஒருமுறை பெரும் தீவிபத்து நடந்தபோது, முற்போக்கு சிந்தனைகளை பேசும் கருணாநிதி அவர்கள் கூட, பின்வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார்.

"இது போன்ற ஐதீகம் எனக்கு தெரிந்தவரை எந்தவொரு குறிப்புகளிலும், வரலாற்றிலும் இல்லை" என்கிறார் தஞ்சாவூரில் வசிக்கும் எனது நண்பரான ஒரு தமிழாசிரியர்.

 ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும்,இல்லாவிட்டாலும் சரி. அவர் கோவிலின் முன்வாசல் வழியாக சென்று, உலகமே வியக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை பெரியகோவிலின் மேல் உள்ள கரும்புள்ளியை துடைக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

"கண்கொள்ளாகாட்சி" என்னும் வார்த்தைக்கு நான் உணர்ந்த சரியான,அழகான உதாரணங்கள் இரண்டு.

ஒன்று, அதிகாலை சூரியஉதயத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்.

இரண்டு, அந்திமாலையில்,...இரவில் மின்னொளியில் ...தஞ்சை பெரியகோவிலின் கோபுரம்.

-இன்பா

Monday, October 19, 2015

இலக்கியத்தில் குளியல் காட்சிகள் - கவிஞர் ஞானக்கூத்தன்



ஆறு, குளம், கடல் இவற்றில் குளிப்பது மக்களிடத்தில் இருந்து வரும் வழக்கம். இந்த மூன்றில் கடலில் குளிப்பது தூய்மைக்காக அல்ல. புறத் தூய்மை நீரால் அமையும் என்பது ஒரு பழைய வாக்கு. அகத் தூய்மை என்பதும் ஒன்றுண்டு. குளியல் இரண்டு தூய்மைக்கும் பொதுவானதுதான். கடலில் குளிப்பது சமயச் சார்பான சடங்கை நிறைவேற்ற. ஆற்றில் குளிப்பது அகப்புறத் தூய்மை இரண்டுக்குமாக. பெரியஅளவில் நாட்டில் கோயில்கள் அமைந்த பிறகு திருக் குளம் என்று பெயரிடப்பட்ட குளங்களும் மக்களின் அகப்புறத்தூய்மைக்குத் தேவையான நீர்நிலைகளாயின. சுனைகள், ஓடைகள் மற்றும் அருவிகள் இவற்றிலேயும் மக்கள் குளித்தார்கள்.

தமிழ்நாட்டின் பெரிய ஆறுகளான வைகையும் காவிரியும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. குளித்தல் என்பது மகிழ்ச்சியான செயல்தான். ஆண் குளித்தால் பெண்ணுக்கும் பெண் குளித்தால் ஆணுக்கும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியான செயலாகத்தான் இலக்கியம் குளிப்பதைக் கணித்து இருக்கிறது. ஏன்? இருபாலரது உடல்களும் நிர்ப்பந்தம் இல்லாமல் பார் வைக்குக் கிடைக்கிறது. ஒரு நீர்நிலையை தனக்குள்ள ஆதிக்கத்தைக் காட்டுவதற்குத்தான் மனிதன் குளியலைக் கண்டுபிடித்தான் போலும். தன் உடலை முழுமையாகத் தண்ணீரில் மனிதன் அமிழ்த்திக் கொள்கிறான். தண்ணீரோடு ஆழ்ந்த தொடர்பு கொள்ளும் அந்த உடம்பு பாராட்டுப் பெறுகிறது. இதற்கு எதிரான குளிப்பு தீக்குளிப்பு.

தமிழிலக்கியம் பரிபாடல் என்ற ஒரு தொகுப்பைப் பெற்றுள்ளது. நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழ வந்ததைக் கூறுகிறது பரிபாடல் . புனல் விளையாட்டு என்று குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பரிபாடல்தான் முதலில் இலக்கியத்தில் பதிவு செய்கிறது. அடுத்துவந்த நூல்களை சீவக சிந்தாமணி, கம்ப இராமாயணம் முதலியவற்றிலும் இந்தப் புனல் விளையாட்டு கொண்டாடப்படுகிறது. வடமொழியிலும் புனல் விளையாட்டு என்பது ஜலக்கிரீடை என்று பெயர் பெற்றுள்ளது:

பரி பாடல், வைகை நதியில் மக்கள் புதுவெள்ளத்தில் கொட்டம் அடிப்பதைக் காட்டுகிறது. மக்களுக்குப் புனல் விளையாட்டின்போது மான அவமானம், கூச்சம் போன்ற பிரச்சினைகள் எழுவதில்லை. இல்வாழ்க்கைக்கு வெளியே உள்ளதாகக் கூறப்பட்ட பரத்தையர்களின் நடத்தை பற்றியும் பரிபாடல் குறிப்பிட்டிருக்கிறது.

பரத்தையர்களின் நடத்தை பற்றிக் குறிப்பிடும்போது பரிபாடல் புறநூல்களில் ஒருவரான நல்லழிசியார் தயக்கம் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். வைகையின் கரை புதுவெள்ளம் நிறைந்தபோது இருந்த நிலையை நாடக அரங்குபோல் இருந்தது என்கிறார் நல்லழிசியார். நாடக அரங்கு என்றதால் சொல்லப்பட்ட விஷயம் நாடக வழக்கு சம்பந்தப்பட்டது என்று பொருளில்லை. ஆனால் ஓர்அசாதாரணத் தன்மையை, இந்த நிகழ்வு குறிக்கவே செய்கிறது. அரங்கு-நிகழ்வின் வெளி-நாடகத்தை நினைவூட்டுகிறதே தவிர, சொல்லப்பட்ட நிகழ்வு அல்ல. ஆனால் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் என்ற அர்த்தமும் இந்த நாடகம் என்ற சொல்லாட்சியில் தொக்கி நிற்கவே செய்கிறது.

கவிதையில் அர்த்தம் உத்தேசிக்கப்பட்டதும் உத்தேசிக்கப்படாததுமாகத் தானே அமைகிறது.

நல்லழிசியார் வைகையைப் பற்றிய பரிபாடலில் (16 ஆம் பாட்டு) குறிப்பிடும் நிகழ்ச்சி இது.

பரத்தையின் தோழிகள் மூங்கில் குழாய் மூலமாக அரக்கு நிறத்தில் உள்ள தண்ணீரைக் காதல் பரத்தை மேல் பீச்சினார்கள். அவளுடைய குரும்பைப் போன்ற முலையில் அந்த செந்நீர் தங்கி இருக்க, அவள் அதைத் துடைக்காமல் இருந்தாள். அப்போது தலைவன் அங்கே வருவதைப் பார்த்த அவளது தோழிகள் ‘அவளைச் சேராதே. அவள் பூத்திருக்கிறாள்’ என்றார்கள். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தலைவனுக்குத் தெரியும். அது செஞ்சாந்தின் குழம்பு என்பதும் அவன் அறிவான். உடனே வீட்டுக்குப் போய்த் திரும்பி வந்து அவளது குருதி பொறும் பூ நீரைத் துடைத்து மருவினான். இவள் பூத்தனள் என்று அவன் சொல்ல, அவள் நாணினாள். (பரிபாடல் 16-வரி 20-30)

இந்தப் பாட்டின் கடைசியில் பரத்தை வெட்கப்பட்டாள் என்று தோழி கூறுகிறாள். பரத்தை வெட்கப்பட்டது தலைவன் செய்த கேலிக்காகத்தானே தவிர, தோழிகள் சொன்னதற்கோ அல்லது பூப்பு பற்றிய செய்திக்கோ இல்லை. வைகை ஆற்றின் புது வெள்ளம், மூங்கில் குழாய்களால் பெண்கள் பீய்ச்சும் செந்நிறத் தண்ணீர்; செஞ்சாந்துக் குழம்பு- அதாவது திரவ நிலை- ஆக மூன்றும் சேர்ந்து ஒரு நீர்மையைக் கூச்ச நாச்சமின்றி பாடலில் நிலைநாட்டுகின்றன. ஆனால் இந்தத் தலைவனை அவனது முறையான மனைவி ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். தடையற்றதும் தடை உடையதுமாக இரண்டு விஷயங்களை வைத்து நல்லழிசியார் இப்பாட்டை அமைக்கிறார். பரத்தையின் நடத்தையையும், தலைவன் நடத்தையையும் தலைவி நிராகரிப்பதன் மூலம் ‘பொதுக்குளியல்’ பற்றி ஒரு கருத்துக்கு அழிவிலார் பரிபாடல் வித்திடுகிறது. ஆனால் பெண் தான் குளிக்கப்போகும் நிலையில் இருக்கும்போது ஆணால் பார்க்கப்படுகிறோம் என்ற பயத்தை அனுபவிக்கவில்லை. பரத்தை என்பதால் அப்படி ஒரு மனநிலை உடையவள் என்று சொல்லி விட முடியுமா?

பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது. அழகிய சிறிய நூலான திருப்பாவையில் ஆண்டாள் பழைய நீராடல் ஒன்றைப் புதுப்பிக்கிறாள். ஆனால் ஆண்டாளின் நீராடலில் ரகசியம் நுழைகிறது. பாதுகாப்பற்ற உணர்வும் எழுப்பப்படுகிறது. பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடைபெறுகிறது. பரிபாடலில் குளியல் ஒரு புனல் விளையாட்டு.


ஆண்டாளின் நீராடல் ஒரு நோன்பு. பரிபாடலில் தோழிகள் பொய் சொல்கிறார்கள். அது கண்டனத்துக்குரியதாக காட்டப்படவில்லை. ஆனால் ஆண்டாளின் நீராடல் பொய் சொன்ன பாவம் நீங்கவும் பயன்படுகிறது. பரிபாடலின் தோழியர்கள் பரத்தையின் சகவாசிகள். ஆண்டாளின் தோழிகள் பக்தைகள், நீராடல் பற்றி ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைக் காட்டிலும் அவர் இயற்றிய ‘கண்ணனிடம் புடவைகளைத் திரும்பக் கேட்டல்’ என்பது பற்றிய பாசுரங்கள்தாம் நம்மைக் கவர்கின்றன ஆண்டாளின் பாட்டு.

கோழி அழைப்பதன் முன்னம்
குடைந்து நீராடுவான் போந்தோம்

என்று தொடங்குகிறது. முதல் அடியே பெண்கள் குளிக்கப்போகும் நேரத்தைக் குறிப்பிடுகிறது. கோழி கூவும்முன்- அதாவது இன்னும் இருள் பிரியாத நேரம். ஆண்டாளின் ‘கோபிகைகள்’ தாமரைப் பொய்கைக்குப் போகிறார்கள். அது அவர்களுடைய ஊருக்குக்குத் தொலைவில்தான் இருக்கிறது. ‘கங்குல் கனைசுடர் கால் கீயாடுன்’ என்று இளங்கோவடிகள் வருணித்த ஒரு பொழுதில் புறப்பட்டுப் போய் நன்றாகப் புலர்வதற்கு முன் ஊருக்குத் திரும்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டுத்தான் கோபிகையும் அவளது தோழிகளும் புறப்படுகிறார்கள். இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட பாதுகாப்பின்மையை உணர்த்துகிறது.

கோபிகை பயந்தது போலவே இவளுக்கு முன்பாக அங்கே கண்ணன் போய்விட்டான். தங்கள் சேலைகளைக் கழற்றி வைத்துவிட்டுத் தண்ணீரில் குளித்துத் துறையேறிய பின்புதான் கோபிகைகள் தங்களது சேலைகள் காணாமல் போய்விட்டதைத் தெரிந்து கொள்கிறார்கள். அந்தச் சேலைகளைக் குருந்த மரத்துக் கிளைகளில் மறைத்து விட்டுக் கண்ணனும் அங்கே இருக்கிறான் என்பதையும் கோபிகையர்கள் தெரிந்து கொள்கிறார்கள். கண்ணனிடம் சேலைகளைத் தந்துவிடச் சொல்லிக் கெஞ்சும் கோபிகையின் கூற்றில் சில வதந்திகளை ஆண்டாள் கூறுகிறார். பொய்கை ஆணுக்கே உரியது போன்ற நிலைமை உள்ளதை இந்த வதந்தி சொல்கிறது.

‘இனி என்றும் பொய்கைக்கு வாரோம்’ என்கிறாள் கோபிகை. தோழியும் நானும் வாரோம் என்று வாக்குறுதி செய்கிறாள். இனி வரமாட்டோம் என்பதால் வந்தது தவறென்று ஒப்புக்கொள்கிறாள். இப்பொய் கைக்கு எவ்வாறு வந்தாய் என்று கேட்கிறாள். என்னுடைய தாய் முதலியவர்கள் எங்களை இப்படிக் கண்டால் தாங்க மாட்டார்கள் என்கிறாள். ‘நீ கேட்டதையெல்லாம் தருவோம்’ என்று சொல்கிறாள். ‘யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறோம்’ என்கிறாள். ஒரு கட்டத்தில் கண்ணனைக் ‘குரங்கு’ என்றும் திட்டுகிறாள். மகிமை இல்லாதவன் என்றும் திட்டுகிறாள்.

கோபிகையர் கெஞ்சுதல்களின் இடையே ‘நீ வேண்டியதெல்லாம் தருவோம்’ என்னும் வாக்கு திடுக்கிட வைக்கிறது. ஆணுக்கே உரிமை உடையது போன்ற நீர்நிலையில் அவனது அனுமதியில்லாமல் பெண் இதைப் பயன்படுத்தக்கூடாது என்பது போல் ஆண்டாள் பாசுரத்தில் தொனிக்கிறது. எனவே பெண் ஆணுக்குத் தெரியாமல் குளிக்க வேண்டியுள்ளது போலும். பெண்ணின் குளியல் ஒரு கள்ளக்குளியல். எனவே பயப்படுகிறாள். இதை மறைக்கும் முயற்சியாகப் பெண் தன் குளியலைப் பிறர் பார்த்தால் தன் மானம் போய்விடும் என்ற குரலை எழுப்புகிறாள். பெண் ஏற்படுத்திக்கொண்ட சிக்கலை விடுவிக்க முடியவில்லை. அவள் மானமும் கள்ளத்தின் வெளிப்பாடும் கலந்துவிட்டன.

பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
பலர்குடைந்தாடும் சுனையில்

என்கிறாள் கோபிகை. இந்த வரிகளில் ஆண்டாள் ஒரு பொருள் மயக்கத்தை அல்லது தெளிவின்மையை ஒரு யுக்தியாகச் செய்கிறார் என்று தோன்றுகிறது. ‘பலர்’ என்பதற்குப் பல ஸ்திரீகள் என்று வைணவ உரையாசிரியரான பெரியவாச்சான் பிள்ளை உரை எழுதியிருக்கிறார். பலரோடு வந்ததால் கோபிகை பலர் என்று குறிப்பிட்டது தோழிகளைத்தான். எனவே பலர் எனப்பட்டவர் பெண்கள்தான் என்பது தெளிவாகிறது. ஆனால் ‘பலர்’ என்ற பன்மை ஒரு நொடியில் பால்பாகுபாட்டை விட்டுவிட்டு ஆண்களையும் காட்டி மறைகிறது. முன்னமே கண்ணன் என்ற ஆணால் பார்க்கப்பட்டு விட்டார்கள் அல்லவா? ஒரு ஆணாலும் பார்க்கப்படாத பெண் ஒரு ஆணால் பார்க்கப்பட்டாலும் பார்க்கப்பட்டிராமை என்ற நிலையிலிருந்து விலக்கப்பட்டவள் தானே! இதற்கு அடுத்து இந்த வரியில் இடம்பெறும் ‘சுனை’ என்ற சொல்.

‘சுனை’ என்ற சொல்லைக் கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது குன்றுகளில் காணப்படும் நீர்நிலைதான். ஆனால் இங்கே ஆண்டாள் கோபிகை குளிக்க வந்த தாமரைப் பொய்கையை சுனை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ஆண்டாள் காலத்தில் சுனை இந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டது போலும். ஆனால் பெரியவாச்சான் பிள்ளை ஒரு விஷயத்தை சுனை பற்றிக் குறிப்பிடுகிறார். ‘தமிழர் கலவியை சுனையாடல் என்று பேரிட்டுப் போருவார்கள் என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. இந்தப் பொருளை இந்தப் பாடலின்போது நினைவு கூரவில்லை. அர்த்தப்படுவதும் அப்படி ஒரு விபத்து ஏற்படுவதைக் கவிதை காட்டுகிறது. நீராடல் விஷயமாக ஆண்டாள் இந்தக் கவிதையில் எடுத்துக் காட்டியிருக்கும் பயம் நியாயமானது.


தண்ணீரில் மூழ்கிவிட்ட பெண்ணுக்கு எப்படிப்பட்ட முதலுதவியை ஆண்கள் செய்கிறார்கள் என்பதைத் தமிழ்த் திரைப்படங்கள் காட்டுவதும் இங்கு நினைவுக்கு வருகிறது.


ஆண்டாள் பாடலில் சுட்டிக்காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது.


இதற்கு முன்பும் இதற்குப் பின்பும்’ என்ற மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பில் ‘பிரக்ஞை’ என்ற கவிதை திணை இலக்கியம், பக்தி இலக்கியத்தைத் தொடர்ந்து, குளிக்கும் பெண்ணையும் பற்றி எழுதுகிறது. கவிதைக்கு ‘பிரக்ஞை’ என்ற தலைப்பு தவிர்க்க முடியாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். முன்னே சொன்ன பரிபாடல், ஆண்டாள் பாடல் இரண்டிலும் விழிப்புணர்வு இருக்கிறது. மனுஷ்ய புத்திரன் கவிதையில் விழிப்புணர்வுக்குப் பிரக்ஞை என்று பெயர். பரிபாடல் கவிதையில் நாடகம் நினைவுகூரப்படுவதால் ஆசைக் கனவாகவும் கொள்ளலாம். ஆண்டாள் கவிதையில் கனவுப் பண்பு இல்லையென்றாலும் அந்தக் கோபிகையின் மனம் பயத்தில் பிறழ்கிறது என்பதை அவளது நினைவு கூரலைக் கொண்டு சொல்லலாம். மனுஷ்ய புத்திரன் கவிதையில் இறுதியில் துர்க்கனவு வெளியிடப்படுகிறது.

இரவெல்லாம்
துர்க்கனவு கண்டு விழித்தெழுகிறாள்
மனம் பிறழ்ந்த நங்கையொருத்தி

என்று கவிதையின் இறுதி வரிகள் சொல்லும்போது கதை கண்டவளின் பதற்றத்தை வாசகன் உணர முடிகிறது.

பாதுகாப்பான வீடுகளின்
தாழிடப்பட்ட குளியலறை
சாவித் துவாரங்களில்
தன்னை உற்றுநோக்கும்
கண்களைப் பற்றி
இரவெல்லாம்
துர்க்கனவு கண்டு விழித்தெழுகிறாள்
மனம் பிறழ்ந்த நங்கையொருத்தி

உற்றுப் பார்ப்பவனின் கண்கள்; அவற்றைத் தன்னுடைய கனவில் கண்டு விழித்தெழுந்த கண்கள் இவற்றை இக்கவிதை படம்பிடிக்கிறது. ஆண்டாளின் கவிதையில் வரும் கோபிகை ஒரு அசம்பாவிதத்தைக் கற்பனையாக எதிர்பார்த்துப் பயப்படுகிறாள். இதைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பு மொழியால் சொல்கிறார். தமிழர் கலவியை சுனையாடல் என்று பெயரிடுவார்கள் என்னும் அவரது தகவல் இந்த அசம்பாவிதக் கற்பனையைக் கிளறுகிறது. பரிபாடல், ஆண்டாள் கவிதைகளில் பெண்கள் இரு வகைப்பட்டவராகின்றனர். பரிபாடலின் பரத்தையை ஆண்டாள் கவிதையும் மனுஷ்ய புத்திரன் கவிதையும் விலக்கிவிடுகிறது. பரிபாடலிலேயே அதன் முற் பகுதியில் கனவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில் வரும் பெண்ணையே ஆண்டாள் தன் கவிதையில் உருவாக்குகிறாள்.

ஆண்டாள் கவிதையில் குடும்பம், அந்தக் குடும்பம் பின்பற்றும் சம்பிரதாயம், கடவுள், அதன் புராணம் எல்லாம் பேசப்படுகின்றன. மனுஷ்ய புத்திரன் கவிதையிலும் குடும்பம்தான் களமாக இருக்கிறது. ஆனால் அது துர்ப்பாக்கியமாக அமைந்துள்ளது. ஆண்டாளின் கவிதையில் வீட்டுக்கு வெளியே நடக்குமென பயந்த ஒன்று மனுஷ்ய புத்திரன் கவிதையில் வீட்டுக்குள்ளேயே நடக்கிறது. இந்தக் கவிதையின் இரண்டாம் பகுதியை ஒரு நிதானமான வாசிப்புக்கு உட்படுத்தினால் வாசகனின் மனம் குழம்பக் கூடும்.


மனுஷ்ய புத்திரனின் ‘பிரக்ஞை’ கவிதை நவீன காலத்துக் கவிதையின் குறியீடுகளைக் கொண்டுள்ளது. பிரக்ஞை என்ற சொல்லே 1970க்குப் பிறகு பொருட் செறிவுடன் உலா தொடங்கிய சொல்லாகும். ‘மனப் பிறழ்வு’ என்ற பெயரிடுகையும் நவீன காலத்தை உணர்த்துவதே. இக்கவிதையின் முதல் பகுதியும் அப்படியே. நவீனமான ஒன்றை நவீனம், நவீனம் என்று பரபரப்பாகப் பேசாமல் இயல்பாக்கிக் கொண்டு இயல்பாகப் பேசுவது நவீன கவிதை இயலில் ஒரு கூறு. ‘பிரக்ஞை’ கவிதையில் மனுஷ்ய புத்திரனிடம் இப்பண்பு காணப்படுகிறது. கவிதையின் முதல் பகுதி இது.

நதிகள்
குளங்கள்
ஓடைகளோரப் பயணங்களில்
நூறு நூறு
கண்பட்டு விலகும்
குளிக்கும் கோபியர்களின்
ஈர உடல்கள்
அச்சமற்று கூச்சமற்று
வெட்டவெளிகளில்
சுடர்ந்து கடக்கின்றன

குளிக்கும் கோபியர்கள்! குளிக்கும் பெண்கள் கோபியர்களாகி விடுகிறார்கள். கோபியர்களைக் குளிக்கும் பெண்களாக மட்டுமே காட்டப்பட்டது தமிழ்நாட்டில்தான். வேறொரு நவீன கவிஞரின் கவிதைத் தொகுப்பின் பெயர் ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’. குளத்திலேயே அவர்கள் இருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரனின் கவிதையும் கோபியர்களை நினைவு கூர்கிறது. அவர்களது ‘ஈர உடல்கள் அச்சமற்று கூச்சமற்று’ உள்ளன என்கிறது கவிதை. இந்த ஈர உடல்கள் நதிகள், குளங்கள், ஓடைகளோரப் பயணங்களில் தென்படுகின்றன. ‘ஓடைகளோரப் பயணங்களில்’ என்ற அமைப்பு உரைநடையை விலக்கிக்கொண்டு கவிதை நடையில் சிக்கனப்பட்டிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.

இப்பகுதியில் அச்சம், கூச்சம் இரண்டையும் இணைத்திருப்பது கவனிப்புக்குரியது. அச்சம், நாணம் இரண்டும் பெண்ணியல்புகளாகப் பேசப்பட்டு வருகின்றன. அச்சம் இல்லாத சமயத்திலும் கூச்சம் இருக்கும் அல்லவா. மறுபடியும் பரிபாடல் பக்கம் போகலாம். இந்தப் பரிபாடல் நல்லழிசியாரால் எழுதப்பட்டது. இதுவும் வைகையில் புனலாடல் பற்றிதான்.

நீர்த்துறையில் வரிசையாக நின்றவர்களுடைய மொழிகள் ஒன்றை உணர்ந்து ஒவ்வாமற் பலவாக ஒரே காலத்தில் எழுந்தன. புல்லாங்குழலின் இசை எழ முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுனி ஆகிய இவற்றின் தாளத்தை ஆடல் மகளிர் தன் கையால் அளந்து நிற்ப உண்டாகும் ஓசையே அங்ஙனம் கேளாமைக்குக் காரணம். ஆயினும் யாம் கேட்டன சில:

‘பலர் கூடியிருக்கிற இடத்திலே நின்று
அப்பூங்கொம்பு போன்றவருடைய நகங்களை
ஒருவன் நோக்கினான். அவன் இளநெஞ்சன்.
திண்மை அற்றவன் என்றார் சிலர்’

‘அவன் இப்பெண் பூண்ட முத்துமாலையின்
அழகைப் பார்த்து இதற்குப் பொருத்த
மாயிருக்கின்றன இவள் நகங்கள் என்று
அவற்றைப் பார்த்தான். இதற்கு அவள்
நாணமடையவில்லை’ என்றனர் சிலர்.


இந்தப் பகுதியில் உடல் திறக்க பெண் இருப்பதும், அந்த உடல் பார்க்கப்படும்போது பயமும் வெட்கமும் இல்லாதிருப்பதும் கண்டிக்கப்படுகிறது. சமுதாய விதிகளுக்கு வெளியே வைக்கப்பட்ட மக்களின் பண்பாடு வேறாகக் காட்டப்படுகிறது. ஆனால் அவர்கள் நீராடலில் ஒரே துறையில் எதிர்ப்படுகிறார்கள். பயப்படாதவர்கள், வெட்கப்படாதவர்கள் என்பதை நினைவில் கொண்டு மனுஷ்ய புத்திரனின் பிரக்ஞை கவிதையில்

குளிக்கும் கோபியர்களின்
ஈர உடல்கள்
அச்சமற்று கூச்சமுற்று

இருப்பதை ஆராய்ந்தால் இவர்கள் குலப் பெண்கள்தாம் என்பதும் ‘பொதுமகளிர்’ அல்லர் என்பதும் தெரியவருகிறது. ஏனெனில் அவர்கள் கோபிகையர்கள் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். இது கவசம்போல் அமைகிறது. ஆண்டாள் பாட்டில் கோபிகையர்களுக்கு இருந்த பயம் கூட அவர்களிடம் இல்லை. இவர்கள் குளிக்கும்போது இவர்களைப் பார்க்கும் ‘நூறுநூறு கண்களில்’ இவர்கள் எவ்வளவு விரைவாக மறைந்து விடுவார்களோ அவ்வளவு விரைவாக அவர்களது நிர்வாண பிம்பமும் மாறாது விடுகிறது. அவர்களை யாரும் உண்மையில் பார்க்கவில்லை. பயமில்லை. வெட்கமில்லை.

பரிபாடல் கவிதையிலும், ஆண்டாள் கவிதையிலும், மனுஷ்ய புத்திரன் கவிதையிலும் புராணம் இடம்பெறுகிறது. முன் இரண்டு பேர் கவிதைகளில் பெண் திறந்த வெளியில் குளிக்கிறாள். மனுஷ்ய புத்திரன் கவிதையின் முதல் பகுதியில் பெண் திறந்த வெளியில் குளிக்கிறாள். இரண்டாம் பகுதியில் பெண் வீட்டில்தான் குளிக்கிறாள். வீட்டுக் குளியலிலும் பெண்ணுக்குப் பாதுகாப்பில்லை என்ற செய்தியை மனுஷ்ய புத்திரன் கவிதை பதிவு செய்கிறது. மனுஷ்ய புத்திரனின் மற்றொரு கவிதையான ‘யாரோ கவனிக்கும் போதில்’ மீண்டும் மனப் பிறழ்வு கொண்ட மங்கையைப் பார்க்கிறோம்.

மனப் பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்

பிரக்ஞையில் சொல்லப்பட்ட பெண் ‘மங்கை’ என்று சுட்டப்பட்டாள். இங்கே அவள் வெறுமனே ஒருத்திதான். இவள் எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள். இவள் நிலைமை மோசமாகி விட்டிருக்கிறது. நூறு நூறு கண்களால் இல்லாத பயம் இரண்டே கண்களில் ஏற்படும் என்பதை அவள் அறிந்துகொண்டுவிட்டாள்.

பழைய தமிழ்நாடு, இடைக்காலத் தமிழ் நாடு, நவீனகால தமிழ்நாடு ஆகிய மூன்றிலும் ஒரு பெண் உடம்பு தோற்றப்படுவதைப் பார்த்தோம்.


குறிப்புகள்

1. பழங்காலத்தில் நீர் நிலைக்குக் காவல் போடப்பட்டிருந்தது கரை காவலர்கள் அடிக்கும் பறையின் ஓசையைப் பரி பாடல் குறிப்பிடுகிறது. ஒரு நீர்
நிலைக்குக் காவலனாக ஒரு யட்சன் இருந்ததை மகாபாரதம் சொல்கிறது. குளிக்கவும் குடிக்கவும் விலங்குகளைக் கழுவவும் தனித்தனி நீர்நிலைகள் இருந்தன. பெண்கள் எதற்காகக் குளிக்கிறார்கள் என்பது கண்காணிக்கப்படாவிட்டாலும், அவர்களது மனசாட்சிக்கு விடப்பட்டது.

2. நீர்நிலைகளில் யதார்த்தமாகக் கண்ணில்படும் பெண் உடல்களை வெறிப்பவர்களை ‘ஓட்டை மனதினர்’ என்கிறது பரிபாடல்.

கோட்டியு கொம்பர்
குவிமுலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரமிலி.

3. ஆண்டாளின் கன்னிமார் நீராடல் பற்றிய பாசுரங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை எழுதியுள்ள உரை கவிதைக்குப் பொருள் கொள்ளும் முறையொன்றைக் காட்டுகிறது.

4. ஆண்டாளின் கோபிகைகள் கன்னிப் பெண்கள். பரிபாடல், மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் பெண்கள் பற்றி விவரம் சொல்ல முடியவில்லை. மூன்று கவிதைகளும் தங்கள் தங்கள் வகையில் ஓவியம் வரைகின்றன. ‘பெண்கள் பால் வைத்த நேயம்’ கம்பரின் வாக்கு. ‘பிழைப்பரோ சிறியர் பெற்றால்’ என்பவை மற்ற சீர்கள்.

5. குளியல் பெண்களின் பரிபாஷையில் கர்ப்பம் தரிப்பதைக் குறிப்பிடுகிறது.


(கட்டுரை : கவிஞர் ஞானக்கூத்தன், உயிர்மை பதிப்பகம்)

Saturday, October 17, 2015

"வேதாளம்" மெகாஹிட் , அடுத்தது "கபாலி"

"வேதாளம், தூங்காவனம் ட்ரைலர் விமர்சனம் ரெடியாயிருக்குமே" என்று திரு.கேபிள் சங்கர் அவர்கள், தனது இணையதளத்தில், கொத்து பரோட்டா -12/10/15 பகுதியில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன் பாதிப்பில், வேதாளம் படத்தின் டீசர் மற்றும் ஸ்டில்கள் சிலவற்றை வைத்து, நான் எழுதிய வேதாளம் - திரைவிமர்சனம்  என்ற பதிவுதான் இன்றைய இணையம் மற்றும் வாட்ஸ் அப்பில் 'ஹாட் டாபிக்' என்றாகி இருக்கிறது.

இந்த பதிவை எழுதி முடித்தவுடன், ப்ளாகின் லிங்கை திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன். அதை அவர் படித்துவிட்டு
"Interesting”  என்று ஒரே வரியில் பதில் அனுப்பினார். அவருக்கு என் நன்றிகள்.

நான் கற்பனையில் உருவாக்கிய இந்த பதிவை, பல பதிவர்கள் அப்படியே 'காப்பி' செய்து, தங்களது தளங்களில் பதிவேற்றம் செய்ய,
"ஆவி அஜித் " வேதாளம் படத்தின் கதை இணையத்தில் லீக் - திரைத்துறையினர் அதிர்ச்சி ! - என்று எழுதி இருக்கிறார் தனது முக நூலில்
நண்பர் பத்திரிக்கையாளர் திரு.அருண்குமார்.


தொடர்ந்து, இந்த பதிவு நூற்றுக்ணக்கானோரால் ஷேர் செய்யப்பட்டு, "வேதாளம் பேய்ப் படமா? இணையத்தைக் கலக்கும் கதை" என்று சினிமா விகடன்  உட்பட பல்வேறு இணையதளங்கள் தனியாக பதிவு வெளியிடும் அளவுக்கு அசுரவேகத்தில் வளர்ந்து விட்டது.

இணையத்தில் ஒரு செய்தி வந்தால், அதன் அடிப்படை உண்மை பற்றி ஆராயமல், அது அப்படியே இணையவெளியெங்கும் பரப்பபடுகிறது.

இதுவே ஒரு தனிமனிதரை பற்றிய தவறான செய்தியாகவோ இல்லை சாதி/மத உணர்வுகளை தூண்டும் செய்தியாகவோ இருந்தால்.....
அது எத்தகைய விளைவுகளை ஏற்ப்படுத்தும்???

எதை பற்றி படித்தாலும், அதை பகிரும்முன் சில நிமிடங்களாவது சிந்தியுங்கள்...சிந்திப்போம்(எனக்கும்தான்) என் அருமை இணைய நண்பர்களே.

(குறிப்பு : வேதாளம் கதை மெகாஹிட் ஆகிவிட்டதால், அடுத்து "கபாலி" கதையை(!) வெளியிட இருக்கிறோம்)

-இன்பா

தினமலர் :

http://cinema.dinamalar.com/tamil-news/38777/cinema/Kollywood/Is-Vedalam-story-leaked-in-Online.htm

தினத்தந்தி :

http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/10/19144410/The-resources-will-Websites-Ajiths-vedhalam-Story.vpf

 
Follow @kadaitheru