Friday, March 4, 2011

தனியாவர்த்தனம் - ஒரு மலையாள திரைக்கவிதை

உலக தரமான படங்கள் என்றால் நாம் உடனே கொரிய மொழி அல்லது இரானிய மொழி படங்களை பற்றி பேசுவோம். மிஞ்சிப்போனால்,சத்யசித்ரே என்று பழைய வங்காள மொழி படங்களை பற்றி பேசுவோம்.

தமிழில் என்று மிக தரமான படங்கள் என்று பார்க்கபோனால், அவரவர்க்கு என்று சில படங்களை சொல்வோம். உதாரணதிற்கு. என்னை பொறுத்தவரை நான் குறிப்பிடுவது, சலங்கை ஒலி, மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பெரும்பான்மையான படங்கள், சமிபத்தில் என்று பார்த்தால், தங்கரின் அழகி, பருத்திவீரன் என்று சொல்வேன்.

ஆனால், நம் அண்டை மாநிலமான கேரளாவில், சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை, அதி அற்புதமான, உலக தரம் என்று சொல்லத்தக்க படங்கள் வந்து இருப்பது பலருக்கு தெரியாமல் போனது ஏன் என்றே தெரியவில்லை.

அமரம்,பரதம், மணிசித்திரதாழ், தாளவட்டம் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. மறைந்த எழுத்தாளர் லோகிததாஸ் மற்றும் எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரை பின்னணியில் வைத்து கொண்டு, இயக்குனர்கள் சிபி மலயில் தந்து இருக்கும் படங்களில் சிலவற்றை கலைபொக்கிஷம் என்றே கூறலாம்.

அந்த வகையில், லோகிததாஸ் எழுதி, சிபி மலயில் இயக்கிய "தனியாவர்த்தனம்" பற்றி, உயிர்மை பத்திரிக்கையில் திரு.ஜி. ஆர். சுரேந்தர்நாத் எழுதிய விமர்சனம் இங்கே தருகிறேன்.

1987ல் இப்படம் வெளிவந்தது. அப்போது எனக்கு இப்படத்தின் இயக்குனர் யாரென்று தெரியாது அற்புதமான அந்தக் கதைக்கும், திரைக்கதைக்கும் சொந்தக்காரரான லோஹிததாஸ் யாரென்றும் தெரியாது. எந்த முன்தீர்மானங்களும் இல்லாமல் நான் பார்த்த அப்படம், அன்று ஏற்படுத்திய பாதிப்பு அலாதியான ஒன்று. வாழ்வில் மறக்கமுடியாத சில படங்களுக்குள் ஒன்றாக மனதில் தங்கிவிட்ட படம் அது.

ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு கேரளா சென்றிருந்தபோது அந்தப் படத்தின் ஸிடி, ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைத்தது. மீண்டும் பார்த்தேன். பல ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து பேசப்பட்டும், எழுதப்பட்டும் வரும் படங்களே காலத்தை வென்ற படைப்புகளாகத் திகழும். அத்தோடு அப்போது ரசித்த ஒரு படத்தை, பிறகு பல ஆண்டுகள் கழித்து, நமது ரசனையெல்லாம் உயர்ந்த பிறகு பார்த்தாலும், அதே அளவுக்கோ அல்லது அதை விடக் கூடுதலாகவோ அந்தப் படத்தை ரசிக்க முடியவேண்டும்.

உதாரணத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு, வண்ணநிலவனின் நாவல்களை நூலகத்திலிருந்து எடுத்து மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். சமீபத்தில் முடிந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வண்ணநிலவனின், ;ரெயினீஸ் ஐயர்த் தெரு’, ‘கம்பா நதி’ மற்றும் ‘கடல் புரத்தில்’ ஆகிய நாவல்களை வாங்கினேன். மூன்றுமே ஏற்கனவே படித்ததுதான். ஆனாலும் மூன்றே இரவில், ஒரே அமர்வில், ஒவ்வொரு நாவலாகப் படித்து முடித்துவிட்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட அதே பிரமிப்புடன் இப்போதும் அவற்றைப் படிக்க முடிந்தது. இன்னும் சொல்லப்போனால், அப்போது என்னால் கவனிக்கமுடியாத சில நுணுக்கமான விஷயங்களை இப்போது கவனித்து ரசிக்க முடிந்தது.

ஒரு மகத்தான படைப்பு என்பது இவ்வாறுதான் இருக்கவேண்டும்.

அதே போல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தபோதும், சிபிமலயிலின் ‘தனியாவர்த்தனம்’ படம் மனதிற்குள் ஏற்படுத்திய அதிர்வும், கொந்தளிப்பும் சிறிதளவும் குறையவில்லை. சிபிமலயில், எனது மனபீடத்தில் இன்னும் உயரத்தில் ஏறி அமர்ந்துகொண்டு, ‘நான் காலத்தை வென்ற கலைஞனடா’ என்பது போல் அமைதியாகப் புன்னகைத்துக்கொண்டிருக்கிறார்.

தனியாவர்த்தனம், ஒரு பாரம்பரிய மலையாளக் குடும்பத்தில் நிலவும் மூடநம்பிக்கைப் பற்றிய கதை. ஒரு பள்ளியில் ட்ராயிங் மாஸ்டராகப் பணிபுரியும் மம்முட்டி, தனது மனைவி, குழந்தைகள், தாய், பாட்டி, தம்பி, தங்கை என்று கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

அவருடைய மாமா, பைத்தியமாக வீட்டு மாடியறையில் சங்கிலியால் கட்டி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் குடும்பத்தில், பரம்பரை பரம்பரையாக யாராவது ஒரு ஆணுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்ற மூடநம்பிக்கை இருக்கிறது. அதற்காக மம்முட்டியின் பெரிய மாமா திலகனின் மேற்பார்வையில்;, அவ்வப்போது பூஜைகளும், சடங்குகளும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை மம்முட்டியின் தம்பி முகேஷ் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். மம்முட்டியின் தங்கைக்கு இந்தக் குடும்ப சாபம் காரணமாக திருமணமாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் மம்முட்டியின் மாமா, ஒரு நாள் தனது சங்கிலியை அவிழ்த்து விடச் சொல்கிறார். மம்முட்டி அவிழ்த்து விடுகிறார். அன்றிரவு மாமா வீட்டுக் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்(படத்தில் நேரிடையாக அவர் தற்கொலை செய்வதைக் காட்டுவதில்லை. மறுநாள் அவருடைய உடல் குளத்தில் மிதக்கிறது). மரண வீட்டுக்கு வந்துள்ளவர்கள், அடுத்து இக்குடும்பத்தில் யாருக்குப் பைத்தியம் பிடிக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். தான் அவிழ்த்து விட்டதால்தான் மாமா இறந்து விட்டார் என்ற குற்ற உணர்விலிருக்கும் மம்முட்டி ஒரு நள்ளிரவில் கெட்ட கனவு கண்டு, அதிர்ச்சியில் கத்திக்கொண்டு எழுகிறார். வீட்டில் அனைவரும் அவரை சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

மறுநாள் ஜோசியரை அழைத்துக் கேட்கின்றனர். இன்னும் சாபம் போகவில்லை என்று கூறும் ஜோசியர் 41 நாட்கள் விரதமிருந்து சோட்டானிக் கரை அம்மன் கோயிலுக்குச் செல்லுமாறும், பூஜைகள் செய்யுமாறும் கூறுகிறார். ஜோசியர் ஊரில் விஷயத்தைக் கசிய விட... மம்முட்டியை அனைவரும் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

இதனால் மம்முட்டி கோபப்பட, அவையும் பைத்தியத்தின் அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றன. குழந்தைகள், அப்பா, "உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா? ’’ என்று கேட்கின்றனர். வீட்டில் ஜோசியர் பரிகாரப் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யச் சொல்ல... அங்கு வரும் மம்முட்டி என்னையும் பைத்தியக்காரனாக்கி, சங்கிலியில் கட்டி அறையில் அடைக்காமல் விடமாட்டீர்களா?’’ என்று அனைவரிடமும் சத்தம் போடுகிறார். இப்பிரச்சினைகளால் இரவில் தூக்கமின்றித் தவிக்கும் மம்முட்டிக்கு லேசான மனச்சிதைவு உருவாகிறது. தானும் பைத்தியமாகிவிடுவாமோ என்ற அச்சம் உருவாகிறது. தனது மாமாவின் அறைக்குச் சென்று, அவருடைய உடுக்கையை சிந்தனையுடன் பார்க்கிறார்.

இந்நிலையில் மம்முட்டியின் தம்பி முகேஷ், அவரைப் பக்கத்து நகரத்தில் உள்ள மனநல மருத்துவரின் வீட்டில் தங்க வைக்கிறார். விஷயத்தைக் கேள்விப்பட்ட மம்முட்டியின் மாமனார், தனது பேரக்குழந்தைகளையும், இந்தக் குடும்பத்தின் சாபம் பீடிக்கக்கூடாது என்று, மம்முட்டியின் மனைவியையும், குழந்தைகளையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். மம்முட்டி இருப்பதையே மறைத்துவிட்டு, மம்முட்டியின் தங்கைக்குத் திருமணப் பேச்சு வார்த்தை நடக்கிறது. அந்த சமயத்தில் நகரிலிருந்து திடீரென்று வீட்டுக்கு வரும் மம்முட்டியை, மாப்பிள்ளை வீட்டாரிடம் பக்கத்து வீட்டுக்காரர் என்று மம்முட்டியின் குடும்பத்தினர் கூறிவிடுகின்றனர்.

நொந்து போகும் மம்முட்டி, மனைவி, குழந்தைகளும் சென்றுவிட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டு, ஆதங்கத்துடன் மாமனார் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு வீட்டில் நுழையவிடாமல் தடுக்கும் மாமானருடன் கைகலப்பாகிறது. வேலைக்காரர்கள் மம்முட்டியை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மம்முட்டி கற்களை எடுத்து அடிக்க முயற்சிக்கிறார்.

அப்போது அங்கு வரும் முகேஷும், திலகனும் மம்முட்டிக்குப் பைத்தியம் முற்றிவிட்டதென்று, மருத்துவமனையில் சேர்த்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கின்றனர். பின்னர் வீட்டுக்குத் திரும்பும் மம்முட்டி, அவருடைய மாமா இருந்த அறையில் அடைக்கப்படுகிறார். மனம் பொறுக்காத மம்முட்டியின் தாய், மகனுக்கு விஷம் கலந்த உணவை அளித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிடுகிறார்.

படத்தின் இறுதிக்காட்சியில், சடங்கு தெய்வம் ஆடிக்கொண்டிருக்க... அருகில் நின்றுகொண்டிருக்கும் மம்முட்டியின் மகனைக் காண்பித்து படத்தை முடிக்கும்போது, நடுநெஞ்சில் யாரோ கத்தியால் குத்தியது போல் வலிக்கிறது.

படத்தைப் பார்த்துவிட்டு, சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தேன். படத்தில் யார் மீதும் கோபம் கொள்ள முடியவில்லை. பாரம்பரியமாக அடிமனதில் ஊறிப்போன நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்தினர் மீதோ, ஊரார் மீதோ, மகளை அழைத்துக்கொண்டு சென்ற மாமனார் மீதோ, கடைசியில் மகனை விஷம் வைத்துக் கொன்ற அந்தத் தாய் மீதோ, யார் மீதும் கோபம் வரவில்லை.

ஏன்? கடவுளோ அல்லது விதியோ அல்லது சந்தர்ப்பங்களோ ஸ்ட்ரைக்கரால் குறி பார்த்து அடுத்தடுத்து வெள்ளை, கறுப்பு, காய்களைக் குழிக்குள் தள்ளிக்கொண்டே இருக்கும்போது, யார் இங்கு என்ன செய்துவிடமுடியும்?
சமிபத்தில், படத்தை நானும் பார்த்தேன். ஒரு வரியில் சொல்வதானால்,தனியாவர்த்தனம் - ஒரு மலையாள திரைக்கவிதை.

1 comments:

மைதீன் said...

சிறந்த அறிமுகம்

 
Follow @kadaitheru