Tuesday, October 6, 2009

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - காங்.,பாஜக கூட்டணி

இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக,நம் தமிழகத்தில் அகதிகளாய் வாழும்(?) இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் விவகாரத்திற்கு இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒருமித்த கருத்தை, நிலைபாட்டை எடுத்து இருக்கிறார்கள்.


காங்கிரஸ்

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் யோசனைக்குக் காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.


இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பாவிடின் மஹிந்த ராஜபக்ஷவுக்குத்தான் மகிழ்ச்சி அளிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நாள் விழாவில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசிடமும் இது குறித்து நேரில் வலியுறுத்தப்பட்டது. முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசியபோதும் இது குறித்து வலியுறுத்தப் பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. யான சுதர்சன நாச்சியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு

இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமையான யாழ்ப்பாணம் தமிழர் பகுதியாக உருவாக்கப்படுவதை ஒவ்வொரு தமிழரின் லட்சியமாக இருக்க வேண்டும்.ராஜராஜசோழன், பல்லவர்கள் ஆட்சிக் காலங்களில் முல்லைத்தீவு வரை முழுமையான தமிழர்களின் பகுதியாக உருவாக்கப்பட்டதை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துச் சொல்லுகின்றன. 7 லட்சம் ஈழத்த மிழர்களில் சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

மேலும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். இம் மக்களின் சொத்துக்கள், வீடுகள், விவசாய நிலங்கள், வியாபாரம், தொழிற்கூடங்கள், பாடசாலைகள் போன்றவை அவர்களுடைய பொறுப்பிலேயே மீண்டும் நடத்தப்பட வேண்டும்.

இதில் எவ்வளவு மக்கள் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் செல்லாமல் அவர்கள் இருக்கின்ற நாடுகளிலேயே வாழ்கிறார்களோ அந்த அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ வுக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகமாகும். அந்தளவிற்கு சிங்களவர்களை ஈழப் பகுதியில் குடியமர்த்த முயற்சிப்பார்கள்.

இதைக் கவனத்தில் கொண்டு இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் சார்பில் கூறி இருக்கிறார் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்.


பாஜக


"தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் வழங்கக் கூடாது" என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் இலங்கைக்கு துணை போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் அங்கு கூறியதாவது:

இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை இந்திய மத்திய, மாநில அரசுகள் அமைத்துத்தர வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாக தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது.


இலங்கையில் முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிய பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி. குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சதீவை இந்தியா மீட்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் செயற்குழுவில் எடுக்கப்பட்டுள்ளன என்றார் பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா.


பதிவு : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru