Sunday, May 13, 2012

தேசிய வியாதியில் படுத்த இந்திய ராணுவம்

"இந்திய ராணுவத்திற்கும் , பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. அது என்ன தெரியுமா?"

-இப்படி என்னிடம் கேட்டவர் நமது எல்லைப்படையில் பணிபுரியும் எனது நண்பர்.

நான் எதோ அது அணு ஆயுதம் அல்லது ஏவுகணை சம்பந்தப்பட்டது என நினைக்க, அவரே சொன்ன விளக்கம் அதிர வைத்தது.

"நம் இந்திய ராணுவத்தில் வீரர்கள் நல்லவர்கள்.  ஆனால், அதிகாரிகள் மிகவும் மோசமானவர்கள்.  பாகிஸ்தான் ராணுவத்தில் வீரர்கள் மோசமானவர்கள். அங்குள்ள ராணுவ அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் நேர்மையானவர்கள்."

ராணுவம் என்பது நமக்கு தெரிந்தவரை அர்ஜுன் அல்லது விஜயகாந்த் படங்களில் பார்த்ததுதான். ஆனால், யதார்த்தம் அதுவல்ல என்கிறார் என் ராணுவ நண்பர்.

"தனக்கு கிழே உள்ள அதிகாரிக்கு  அழகான மனைவி அமைந்துவிட்டால்,  அவரது மேல் அதிகாரிகள் அவரது மனைவியை அடைய எதுவேண்டுமானாலும் செய்வார்கள் " என்றும் மேலும் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறார்.

"கார்கில் யுத்தத்தின் போது,  வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை அதிகமாக்க, அனுபவமே இல்லாத ஒரு வீரர்களின் அணியை 
முன்னால் போர்களத்திற்கு வேண்டுமென்ற அனுப்பினார்கள்.அந்த அளவுக்கு அரசியலின் பிடியில் இருக்கிறது நமது ராணுவ அதிகார வர்க்கம்"  என்று வேதனையோடு சொன்னார் நண்பர்.

நமது ராணுவம் குறித்து என் நண்பருடன் நான் மேலும் விவாதித்த ,  காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் அங்குள்ள பெண்கள் மீது ராணுவம் நடத்திய/ நடத்தி கொண்டிருக்கும் பாலியல் வன்முறைகளை,  அப்பாவி மக்கள் மீதான வன்முறைகளை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

தேச பக்தியோடு,  நாட்டுக்காக விரும்பி ராணுவத்தில் சேருபவர்கள் வெகு குறைவே.  வேலை இல்லாதிண்டாட்டமே , ராணுவத்தில் இளைஞ்சர்கள் சேர காரணமாக அமைந்து இருக்கிறது. 


அரசியல் சாக்கடை பெருக்கெடுத்து, ஊழலில் திளைத்து கொண்டிருக்கும் ராணுவ  அதிகாரிகளின் போலித்திரைகளை முதல் முறையாக கிழித்து இருக்கிறார் ராணுவ தளபதி வி.கே.சிங்.

"நாட்டில் பிற துறைகளில் காணப்படுவதுபோல், ராணுவத்திலும் ஊழல் நடக்கிறது"  என்று வெளிப்படையாக தெரிவித்தார் சிங்.


"நாட்டில் பிற துறைகளில் காணப்படும் முறைகேடுகள், ஊழல்களைப்போல் ராணுவத்திலும் நடக்கிறது.

இதை தவிர்க்க, இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜன்டுகளின் உதவி இல்லாமல், முறைகேடுகளின்றி, ராணுவத்திற்கான ஆயுதங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜன்டுகள் போன்றோர் அகற்றப்படுவர். ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டுகளை களையவேண்டும். தரமற்ற ஆயுதங்களை ராணுவத்தினர் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியை ஏற்படுத்தவேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவேண்டும்.

- இவ்வாறு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ராணுவ தளபதி வி.கே.சிங்

ஊழல் நமது தேசிய வியாதி  என்று சொன்னார் சுஜாதா.

"ஆமை புகுந்த வீடு உருப்படாது" என்பது பழைய காலத்து மூட நம்பிக்கை.  "அரசியல் புகுந்த துறை உருப்படாது" என்பது இந்த காலத்து நிதர்சனம்.
( உ தா . நமது இந்திய ராணுவம்). 

-இன்பா

Monday, May 7, 2012

தாகூர் நினைவுகள்

"குறையிலா அன்பினிலே, கொடுப்பதனை ஏற்பதனால் குறைவதும் வாராது' கொடுப்பதனை எடுத்துக் கொள்"

 The sky is overcast with clouds
வானத்தை மேகம் கப்பிக் கிடக்கிறது

Where tireless striving stretches its arms towards perfection&
முழுமையை அடைவதற்கு முட்டாமல் முயன்றிடுவார்  "

- ரவீந்திரநாத் தாகூர்

இன்று வங்காள கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள்.  ஆம் ஆண்டு "கீதாஞ்சலி" என்ற தனது கவிதை நூலுக்காக நோபெல் பரிசு பெற்றவர். இப்பரிசினை பெற்ற முதல் ஆசிய நாட்டவர். இவர் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

அவரது மிகவும் புகழ் பெற்ற  வங்காள கவிதை எஸ்.ஏ.பி அவர்களின்  தமிழ் மொழிபெயர்ப்பில்  இங்கே...



கோடைக் காலத்தின் திக்குத் தெரியாத பறவைகள்
என் ஜன்னலுக்கு வந்து பாடிவிட்டுப் பறந்து செல்லும்.
இலையுதிர்காலத்து மஞ்சள் இலைகள்
பாடல்களில்லாமல் சிறகடித்துப்
பெருமூச்சுடன் வீழ்கின்றன

ஓ! உலகின் ஊர்சுற்றிக் கூட்டமே
எனது வார்த்தைகளில் உங்கள்
காலடித்தடங்களை விட்டுச் செல்லுங்கள்

உலகம் தனது காதலருக்காக
பரந்துவிரிந்த முக மூடியைக்
கழற்றிக் காட்டுகிறது.

அது ஒரு பாடலைப் போலச் சிறிதாய் வருகிறது
ஆதியும் அந்தமுமற்ற ஒரு முத்தம் போல.

பூமியின் கண்ணீர்த் துளிகள் அவளது
புன்னகையை மலரச் செய்கிறது.

வல்லமை கொண்ட பாலைவனம் எரிகிறது
நீண்ட புல்லின் காதலுக்காக,

அது தனது தலையை ஆட்டிச் சிரித்து
விட்டுப் பறந்தோடும்.

நீ கண்ணீர் விட்டால்
சூரியனைக் காண முடியாது

மேலும் நட்சத்திரங்களையும் கூட.
உன் வழியில் கிடக்கும் மணல்வெளி
உன் பாடலையும் சிறகடிப்பையும்
நாட்டியமாடும் வெள்ளத்தையும்
யாசகம் கேட்கிறது

மணலின் செயலற்ற சுமைகளை
நீ சுமந்து செல்வாயா?

அவளின் பெருஆவலுடைய முகம்
இரவு மழைபோல எனது கனவுகளை
அடிக்கடி தூண்டுகிறது

ஒரு காலத்தில் நமது கனவில்
அந்நியமாய் உணர்ந்தோம்
கண்டுபிடிக்க நாம் கண்விழித்தோம்
நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோம்

அமைதி மரங்களுக்கிடையே
மாலைநேரம் தவழுதல் போல்
கவலைகள் என் இதயத்தில்
அமைதியாய் அடங்கிவிட்டன

சில கண்காணா விரல்கள்
சோம்பேறித் தென்றலைப் போல்
என் இதயத்தின் மீது சிற்றலைகளாய்
கீதமிசைக்கின்றன.

உன்மொழி என்ன, ஓ! கடலே?
“ஆதியும் அந்தமுமற்ற மொழி”
உன்மொழி என்ன, ஓ! வானமே?
“ஆதியும் அந்தமுமற்ற மௌனம்.”

என் இதயமே,கவனி
உன்னிடம் காதலை உருவாக்கும்
உலகின் கிசுகிசுப்பை

கடவுள் நமக்கு அனுப்பும் மலர்களுக்கு
விடைகளை எதிர்பார்க்கிறார்
சூரியனுக்கும் பூமிக்கும் அல்ல

அவன் ஆயுதங்களையும் கடவுள்களையும்
படைத்துக் கொண்டான்
அவனது ஆயுதங்கள் வெல்லும்போது
அவனே தோற்றுப் போகிறான்

கடவுள் தானே படைக்கப்பட்டதை
தானே உணருகிறார்


-இன்பா  

Saturday, May 5, 2012

"ஆ"தீனங்கள் - சில கேள்விகள்

"குரு மகா சன்னிதானத்திற்கு ஒரு சிறு காணிக்கையாக ஒரு கோடி ருபாய் பணமும், தங்க சிம்மாசனமும் கொடுத்து இருக்கிறோம்"  என்கிறார்  நித்தியானந்தா.

"பீடதி ஆசிரமத்தில் இளம் பெண்கள் நடனமாடியபடி ஜாலி மூடில் இறைவனை வழிபடுவது எங்களுக்கு பிடித்து இருந்தது. கொட்டிய  மழையையும் பொருட்படுத்தாது இளம் பெண்கள் நடனமாடினார்கள்.  அடடா...அதை காண கண் கோடி வேண்டும் "

- மேற்கூறிய விளக்கத்தை தந்து இருப்பவர் தவத்திரு முன்னாள் மதுரை ஆதினம் அருணகிரி.   நித்தியானந்தாவை 293 வது ஆதீனமாக முடி சூடியதற்கு அவர் தந்த விளக்கமே மேற்சொன்னது.


மேற்கண்ட இரண்டு அறிக்கைகளையும் படித்த பின்,  நமக்குள் எழுந்த  கேள்விகள் இங்கே..... பதில்கள் எங்கே?????

பீடதி ஆசிரமத்தில் ஏன் இளம் பெண்கள் மட்டும் இருக்கிறார்கள்?  இந்த ஆசிரமத்தில் சேருவதற்கு "இளம் பெண்"  என்கிற தகுதி(?) வேண்டுமா?
 

ஏன் இளம் ஆண்கள் அங்கு இல்லை?  

வயதான பெண்கள் நடனம் ஆடினால் அதை ரசிக்க முடியாது என்பதால்தான் இளம் பெண்களை நடனமாட அனுமதி வழங்கபடுகிறதா? 

 நித்தியின் வாக்குப்படி ஒரு கோடி ருபாய் சிறு காணிக்கை என்றால்,  பீடதி ஆசிரமத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?  இத்தனை கோடி பணம் பீடதிக்கு எங்கிருந்து, எப்படி வந்தது? சுவிஸ் நாட்டில் பணம் பதுக்கி இருக்கும் அமைச்சர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் கூட ஒரு நாள் மாட்டுவார்கள் என்கிற சிறு நம்பிக்கை நமக்கு  வருகிறது. 

ஆனால், இந்த மடாதிபதிகளின், ஆதீனங்களின்  அயோக்கியத்தனங்களுக்கு எப்போது ஒரு முடிவு கிடைக்கும்??

நித்தியானந்தா போல பணம் கொடுத்து, ஒரு ஆதீனத்தின் பதவியை வாங்கும் அளவுக்கு பழம்பெரும் ஆன்மிக மடங்கள் தரம் தாழ்ந்து போனதற்கு யார் காரணம்?
 
நித்தியானந்தா போன்றவர்கள் போலி என்று தெரிந்தும் ஐ. டி துறை உட்பட பல படித்த மக்கள் அவர்கள் பின்னால் போவது ஏன்?  


வெளிநாட்டுகாரர்கள் இவர்களை நம்புவதும், இவர்களிடம் டாலர்களை கொட்டுவதும் ஏன்?

மாதம்தோறும் உழைக்கும் சம்பளக்காரர்களிடம் TDS பிடிப்பதற்கு என்னை போன்ற சாமான்யனிடம் ஆயிரம் கேள்விகள் கேட்கும்  வருமானவரி துறை,  பல கோடிகளை சேர்த்து வைத்து  இருக்கும் மடாதிபதிகளை,ஆசிரமங்களை ஏன் எந்த கேள்வியும் கேட்பதில்லை? ??

 
-இன்பா

Tuesday, May 1, 2012

மகாகவியின் மொழிபெயர்ப்பு பணிகள் - ஒரு அறிமுகம்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளில் மகாகவி பாரதியாரின் மூலம் வேர்விடத்தொடங்கிய நவீன இலக்கிய மறுமலர்ச்சி அடுத்த இரு பத்தாண்டுகளில் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., க.நா.சு. போன்றோரால் தீவிரமடைந்து ‘மணிக்கொடி காலமாக’ப் பரிணமித்து வளர்ந்திருக்கிறது.

தமிழில் இலக்கிய மொழிபெயர்ப்பு என்பதைப் பற்றித் தீர்க்கமான பார்வையின்றி, குழப்பமான, மேம்போக்கான கருத்தாக்கங்களே நிலவிவந்த காலகட்டத்தில் மொழிபெயர்ப்பைப் பற்றித் தெளிவான, இலக்கியப் பிரக்ஞை கொண்ட பார்வையை முன்வைத்தவர் எனப் புதுமைப்பித்தனைத்தான் கூற வேண்டும். அவர் தொடங்கிவைத்த இவ்விவாதத்தின் பலனாக மொழிபெயர்ப்பு மார்க்கத்தின் மீது கவிந்திருந்த மேகமூட்டங்கள் கலைந்து நவீன மொழிபெயர்ப்பு ஓர் இயலாகப் படைப்பிலக்கியத்திற்கு இணையான ஒரு ஸ்திதியைத் தற்போது அடைந்திருக்கிறது.

ஆனால் இத்தகைய கோட்பாடு, விவாதங்கள் தொடங்குவதற்கு முப்பதாண்டுகள் முன்னதாகவே பரிபூரண இலக்கியப் பிரக்ஞையோடு பாரதி மொழிபெயர்ப்பை அணுகியிருப்பது அந்த அதிகலைஞனின் மற்றொரு ஆச்சரிய பரிமாணம்.

இலக்கிய மொழிபெயர்ப்பு ஒரு கலையாக வளர்ச்சியுற்ற பிறகு தூய மொழிபெயர்ப்பாய்வு என்றும் பயன்முறை மொழிபெயர்ப்பாய்வு என்றும் ஜேம்ஸ் எஸ். ஹோம்ஸால் வகைப்படுத்தப்பட்டு, இன்று பல்வேறு மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் கிளைத்திருக்கின்றன. அத்தகைய பகுப்பாய்வுக்குள் செல்லாமல் மூலப்படைப்பிற்கும் படைப்பாளிக்கும் அப்படைப்பு உருவான கலாச்சாரத்திற்கும் மொழிபெயர்க்கப்படும் பிரதி விசுவாசமாக இருத்தல் என்ற அடிப்படையளவில் எளிமைப்படுத்தி பாரதி,  மொழிபெயர்ப்புகளை இங்கு விவாதிக்கலாம் எனக் கருதுகிறேன்.

தேசியக் கவிஞர் என்னும் ஒற்றைப் பரிமாணத்திலேயே பெரும்பாலும் தரிசிக்கப்படும் பாரதியின் மொழிபெயர்ப்புகள் இலக்கியரீதியாகப் போதிய கவனம் பெறப்பட்டவையோ ஆய்விற்குட்பட்டவையோ அல்ல. ஒரு கலைஞனை holy cow ஆக ஆக்கி, அவனைப் பற்றிய அதிபிம்பங்களை மட்டுமே தரிசித்துக் கொண்டிருப்பது அவனை மறைமுகமாகப் புறக்கணிப்பதுதான். பாரதி கணிசமான அளவில் மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறாரா என்பது இப்போது உருவாகும் கேள்வி. பத்துக் கவிதைகளையும் தாகூரின் எட்டுச் சிறுகதைகளையும் (அவற்றில் ஒன்று குறுநாவல்),பகவத் கீதை மற்றும் பதஞ்சலி யோக சூத்திரத்தையும் அவரது இலக்கிய மொழிபெயர்ப்புகளாகச் சேர்க்கலாம்.

ஒரு பத்திரிகையாளராக, தாதாபாய் நௌரோஜி, திலகர், விபின் சந்திரபால், ஜகதீச சந்திரபோஸ் ஆகியோரது சொற்பொழிவுகளையும் காங்கிரஸ் மகாசபையின் சரித்திரத்தையும் பற்பல செய்திக் கட்டுரைகளையும் மொழி பெயர்த்திருப்பதை அவற்றின் செய்தி மதிப்பிற்காகக் கணக்கில்கொள்ளாமல் அவரது இலக்கிய மொழிபெயர்ப்புகளைப் பற்றி மட்டும் இங்கே பேசலாம்.

‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர
மொழிந்திடுதல், சிந்திப் பார்க்கே
களி வளர உள்ளத்தில் ஆனந்தக்
கனவு பல காட்டல், கண்ணீர்த்
துளி வர உள்ளுருக்குதல்...’

ஆகியவை வேண்டுமென வாணியிடம் பாரதி வேண்டுவது அவரது பகவத் கீதை மொழிபெயர்ப்பில் சித்தி ஆகியிருக்கும். அவரது பகவத் கீதையை ஆன்மிகத் தேவையேதுமின்றி வெறும் வாசிப்பு ரசனைக்காக மட்டுமே பயில்வது ஒரு மகத்தான அனுபவம்.

பகவத் கீதையின் சுலோகங்கள், மிகக் கச்சிதமான வாக்கிய அமைப்புகளில் அவரது உரைநடைகளில் வழக்கமாகக் காணப்படும் சமஸ்கிருத வார்த்தைகள் கூட மிக மிகக் குறைவாக, தெளிவான நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் பாரதியின் பகவத் கீதை அளவிற்கு முழுமையான, அதே நேரத்தில் ரத்தினச் சுருக்கமான மொழிபெயர்ப்பு வேறெதுவும் கிடையாது.

 மொழிபெயர்ப்பின் நடுவில் எந்த விளக்கவுரையையோ வியாக்கியானத்தையோ கொண்டு வராமல் ஒரு நீளமான முன்னுரையில் பட்டினத்தார், தாயுமானவர், திருநாவுக்கரசர் ஆகியோர் மேற்கோள்களோடு பகவத் கீதையின் சாராம்சம், அது முன்வைக்கும் தத்துவம், வேதம்-உபநிடதங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகள், வேதங்கள் மிக மிகப் பழைய சமஸ்கிருத மொழியிலும், காலத்தால் பின் தங்கிய உபநிடதங்கள் பிற்காலத்திய சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டிருப்பது குறித்த விளக்கங்கள், கீதை குறித்த மேம்போக்கான தப்பபிப்பிராயங்கள் போன்றவற்றை விளக்குகிறார்.

அவரது மொழிபெயர்ப்புகளில் முதலிடம் பெற வேண்டியது அதன் மொழி அந்தஸ்திற்காக, பகவத் கீதை மொழிபெயர்ப்பேயாகும்.

‘எதனையெதனை உயர்ந்தோன் செய்கிறானோ, அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.... பார்த்தா, மூன்றுலகத்தில் எனக்கு யாதொரு கடமையுமில்லை, நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலே இயங்குகிறேன்... பார்த்தா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில்செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில்செய்ய வேண்டும்.’

பகவத் கீதைக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்பு தாகூரின் எட்டுக் கதைகளின் தமிழாக்கம். பாரதி தேர்ந்தெடுத்த இக்கதைகளில் ‘மானபங்கம்’, ‘நள்ளிரவிலே’, ‘ஸமாப்தி’ ஆகிய கதைகள் மிக அற்புதமானவை.

சௌந்தர்யங்களில் மனமுருகி பாரதி புனைந்திருக்கும் பல கவிதைகளைக் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் கண்டிருப்போம். மானபங்கம் என்னும் தாகூரின் இந்தக் கதையை பாரதி மொழிபெயர்க்கையில், யௌவனத்தின் சோபை ததும்பும் வர்ணனைகள் அற்புதமான வரிகளைச் சமைக்கின்றன. இக்கதையின் முதல் ஐந்து பத்திகள் நமக்கு ஏற்படுத்தும் மனவெழுச்சியும் களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டலும் கண்ணீர் வர உள்ளுருக்குதலும் வங்க மொழி வாசகனுக்குத் தாகூரின் மூலத்தை வாசிக்கையில் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். இதே கதையில் கணவன் மனைவியை அடித்து, கட்டாயப்படுத்தி அவளது நகைகளை அபகரித்துக்கொண்டுசெல்லும் கொந்தளிப்பான கட்டத்தில் பாரதியின் மொழி லாவகம் பிரமிப்பேற்படுத்துகிறது.

‘வீட்டில் யாரும் துயில் கலையவில்லை. நிலா அமைதியாக வீசிற்று. இரவின் மோனம் குலையவில்லை. இத்தனை சாந்திக்கிடையேகூட மனிதர் திரும்ப சொஸ்தமாக இடமில்லாதபடி நெஞ்சுடைந்து போதல் ஸாத்யமாகிறது.’

தாகூரின் மூன்று சிறுகதைகளை இணைத்து சத்யஜித் ரே இயக்கிய ‘தீன் கன்யா’வில் இடம்பெறும் கதையான ‘ஸமாப்தி’யை பாரதியின் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது, ஒவ்வொரு வரியிலும் அந்த அற்புதமான திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதே வேகத்தில், அதே அழுத்தத்தில், அதே உணர்ச்சி நுட்பத்தோடு நம்முன் விரிகின்றன.

சத்யஜித் ரேவின் ‘ம்ருண்மயி’யும் பாரதியின் ‘ம்ருண்மயி’யும் ஒரே ஜாடையில், ஒரே விதமான மருட்சி கண்களில் தெரிய, ஒரே மாதிரியான துள்ளல் நடையில் ஒன்றுபோலவே தெரிகின்றனர். ‘தீன்கன்யா’வைப் பார்த்தவர்களுக்கு இக்கதையைப் படிக்கும்போது அதன் திரைக்கதைப் பிரதியை வாசிக்கும் உணர்வுதான் ஏற்படும்.

பாரதியின் மற்றொரு பிரபலமான மொழிபெயர்ப்பான பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்’ இருமுறை தமிழாக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாகச் செய்த ‘இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை’ என்ற கவிதை மிகச் சிறப்பானது.

‘வெண்ணிலாக் கதிர் மகிழ விரித்திடுமிரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரன் பல செறிந்தனை!

எனச் செறிவான மொழியில் இயற்றப்பட்ட பாடலை மீண்டும் ஒருமுறை ‘நளிர்மணிநீரும் நயம்படு கனிகளும்’ என்று மொழிபெயர்த்திருப்பதற்கு அவர் கூறும் காரணம் கவனிக்கத்தக்கது. ‘வந்தே மாதரம்’ பாடல் பக்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ நாவலில் சாமியார்கள் பாடும் வழிநடைப்பாடலாக இடம்பெறுகிறது. முதலில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு முழுவதும் அகவலாக மொழிபெயர்த்தது பாடுவதற்கு நயப்படாததால் இப்போது பல சந்தங்கள் தழுவி மொழிபெயர்த்திருப்பதாக இரண்டாம் பாடலுக்குமுன் விளக்கமளிக்கிறார்.

‘பதஞ்சலி யோக சூத்திர’த்தைப் பாரதி மொழிபெயர்க்கையில் மூலத்தின் சூத்திர வரிகள் நேரடியாக மொழிபெயர்க்கப்படுகின்றன. இதற்கான பொருள் விளக்கம், சூத்திரத்தை விரித்துச் சொல்வது மட்டுமின்றி வேறுபல மொழிபெயர்ப்புகளை, சாத்திரங்களை, கூற்றுகளை மறுக்கவும் உடன்படவும் செய்யும் விவாதமாக மாறுவது புதிய அணுகுமுறை.

பாரதிக்குத் தேச சுதந்திரப் போராட்டமும் சமூக விடுதலையை ஏற்படுத்தும் போராட்டமும் ஒன்றாகவே கலந்திருந்ததனால்தான் இந்து மதவெழுச்சியை ஆங்கிலேயே ஆதிக்க சக்திக்கு எதிர்ப்பாக மாற்ற பகவத் கீதையையும் பதஞ்சலி யோக சூத்திரத்தையும் தமிழில் கொண்டுவந்திருக்கிறார் எனலாம். அவர் மொழி பெயர்க்கத் தேர்ந்தெடுத்த அயல் மொழிக் கவிதைகளைக் கவனிக்கும்போதும் இதே முனைப்புதான் வெளிப்படுகிறது.

 லாங்ஃபெலோவின் ‘மேலோர் புகழ்’, பைரனின் ‘சுதந்திரம்’, அரவிந்தரின் ‘கடல்’, ஃபுளோரா ஆண் ஸ்டீலின் ‘கலியுக முடிவு’, மாட்ரால் ஸ்டன்ஷர்மனின் ‘இந்தியாவின் அழைப்பு’, தாகூரின் ‘நாட்டுக் கல்வி’, ஜான் ஸ்கர்ரின் ‘கற்பனையூர்’, சியூசீனின் ‘பெண் விடுதலை’ ஆகிய பாரதி மொழிபெயர்த்த இதர கவிதைகளுக்கிடையே சமூக விடுதலை என்ற பொதுச்சரடுதான் காணப்படுகிறது.


(நன்றி :  காலச்சுவடு )

-இன்பா 

Thursday, April 26, 2012

பகவத் கீதையும், அலெக்சாண்டரும்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்?

எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.

-பகவத் கீதையின் சாரம்

மாமன்னன் அலெக்சாண்டர், உலக நாடுகள் அனைத்தையும் தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசன். தனது வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினான். தன் தாயின் முகத்தை பார்க்க ஆவலுடன் விரைந்தான்.

ஆனால்,கிரீக்கு போகும் வழியிலேயே நடக்கவும் இயலாத அளவுக்கு கொடும்நோய்க்கு ஆளானான். தனது பணம்,படைகள், கொள்ளையடித்த சொத்துக்கள் யாவும் அர்த்தமற்று போனதை அவன் உணர்ந்த அந்த நிமிடம்.....

அலெக்சாண்டர் தி கிரேட் ஞானம் பெற்ற அந்த நிமிடம்...அவனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமிக்கது...அவனது வெற்றிகளை காட்டிலும் மகத்தானது.

மரணத்தின் அழைப்பை உணர்ந்த அவன்,அப்போது அவனது உதவியாளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை மூன்று கட்டளைகளாக பிறப்பித்தான்.

ஒன்று, தான் இறந்த பின் தனது சவப்பெட்டியை தனது உடற்ப்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப்பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.

இரண்டு, கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும், அவன் தனது நாடுகளை வென்றதின் மூலம் சம்பாதித்த தங்கம்,வெள்ளி,வைரம் போன்ற கற்களை புதைக்க வேண்டும்.

மூன்று, அவன் தனது கடைசி ஆசையாக கூறியது "எனது திறந்திருக்கும் இரண்டு கரங்களும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு தொங்க விட படவேண்டும்".

தனது இந்த விசித்தரமான மூன்று கடைசி ஆசைகளுக்கு அவன் சொன்ன காரணங்கள்..."இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள்..எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்" என்றான் அவன்.

முதலில் சொன்ன ஆசைக்கு காரணம்...."இந்த உலகில் மனிதனின் நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது".

இரண்டாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...."எவ்வளவோ செல்வத்தை குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது".

மூன்றாவதாக சொன்ன அவன் ஆசைக்கு காரணம்...."வெறுங்கையோடு வந்தேன் வெறுங்கையோடு செல்கிறேன் என்ற எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்".

இதே தத்துவத்தை அவன் காலத்துக்கு முன்பே பகவத்கீதையின் சாரம் சொல்லி இருப்பது இப்போது உங்களுக்கு புரிகிறதா??

மாவீரன் அலெக்ஸாண்டரின் தனது வாழ்வில் இருந்த கற்ற பாடங்களும், பகவத் கீதையின் சாரமும் ஒன்றாகவே இருக்கிறதே.



-இன்பா

Sunday, April 22, 2012

ஒதுக்கப்பட்ட ஓமந்தூர் பெருமாள்

இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமம். அங்கு ஒரு பரந்த, கோடையிலும் நீர் நிரம்பிய ஒரு அழகான ஏரி. அந்த ஏரியின் நீர்த்திவலைகள் மோதி விளையாடும் கரையில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய பெருமாள் கோவில்.

இதுதான் இந்த பதிவின் படங்களில் நீங்கள் பார்க்கும் சிதிலம் அடைந்து, இன்றோ நாளையோ விழுந்து விடும் நிலையில் இருக்கும் இந்த பாழடைந்த கோவில்,
ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில்.

இத்திருத்தலம் அமைந்து இருக்கும் ஊர் திண்டிவனம் அருகே புதுச்சேரி சாலையில் உள்ள ஓமந்தூர். தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊர் இது.

ஓமந்துரில் ராமசாமி ரெட்டியாருக்கு தற்போது ஒரு பிரமாண்டமான மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

ஆனால், கண்டுகொள்ள படாமல் இருக்கிறார் அதே ஊரில் ஆயிரம் வருடங்களாக சுமார் பத்து அடி உயரத்தில் மூலவராக வீற்றி இருக்கும் வைகுண்ட பெருமாள்.

'அந்த' கோவிலை சுற்றிலும் பான்பராக்/புகையிலை கறைகள். சிதறிகிடக்கும் சிகரெட் துண்டுகள் மற்றும் உடைந்த மதுபான பாட்டில் துண்டுகள். சிறுநீர் கழிக்கும் சிறுவர்கள். கிராமத்துபக்கம் இருக்கும் 'கவர்மெண்டு ஆஸ்பத்திரி' போன்று கேட்பார்அற்று இருக்கும் 'அந்த' இடத்தை பார்க்கும்முன் 'அவரை' பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

'நினைமின் மனமே சிவபெருமானை' என்று பாடிய பட்டினத்தார் கி.பி.10 அல்லது 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, பதினெண் சித்தர்களில் ஒருவர். பூம்புகாரில் பெரும் செல்வந்தராக பிறந்த இவருக்கு, சிவனே மகனாக பிறந்து, செல்வத்தின் நிலையாமை குறித்த தத்துவத்தை ' காதற்ற ஊசியும் வாராது காண்கடை வழிக்கே' என்ற ஒரு வரி மூலம் உணர்த்தி யோகி ஆக்கியதாக இவர் வரலாறு கூறுகிறது, (அந்த ஒரு வரியின் அர்த்தம் : கையில் என்ன கொண்டு வந்தோம்.. கொண்டு செல்ல .. நன்றி : படையப்பா ).

அப்படிப்பட்ட பெருமைகளை உடைய பட்டினத்தார் முக்தி அடைந்த சமாதியின் இன்றைய நிலையை அறிய முந்தைய பத்திக்கு முதல் 'பாரா' வை மீண்டும் படிக்கவும். சமாதி,சென்னை திருவொற்றியூரில் இருக்கிறது.


புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் இருக்கும் பெருங்களூர் வம்சோத்தாரர்-மங்களாம்பிகா அம்மன் கோவிலுக்குப் போக வாய்ப்பு வந்தது. கோயில் குருக்கள் சொன்னது: “இக் கோயில் புதுக்கோட்டை மன்னரால் பராமரிக்கப்பட்டு அரசின் இந்து சமய போர்டு அதிகாரத்துக்கு மாற்றப்பட்டபின்னர், கோயிலுக்கு தினமும் தரப்படும் நிவேதனப் பொருள்: 200 மி. எண்ணெய், 200 மி. அரிசி".

அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் சிங்கவனம் எனப்படும் ஜமீன் கிராமத்துக்கும் போயிருந்தேன். அங்கு மிகவும் பழமையான் (500 ஆண்டுகளுக்கு முன் மராத்திய மன்னரால் கட்டப்பட்டு) பட்டாபி ராமன் கோயிலில் வழிபடலாம் என்று. கோயில் சிதிலமடைந்து, இன்றோ நாளையோ சாகக்கிடக்கும் கிழவனார் போல் காட்சியளித்தது.

கும்பகோணம் அருகே உள்ள கிராமங்களில் புராதன கோவில்கள் பல சிதிலமடைந்து உள்ளன (உ.தா : ஆதனூர்).


சமிபத்தில் வேலூர் அருகே சிறுகரும்பூர் சிவன் கோவிலில் உள்ள 300 வருட பழைமையான மரகத சிலை திருடுபோய்விட்டது. பூட்டிகிடந்த இந்த புராதன கோவிலின் பெருமைகள் சிலைதிருடபட்டதற்கு பின்புதான் 'சன் டிவியால்(?)' உள்ளூர் மக்களுக்கே தெரியவந்திருக்கிறது.

வெற்றி பெற்ற வேட்பாளரை நம்பும் வாக்காளர் போல, பாவங்களை தீர்ப்பதற்கு திருப்பதி கோவிலை மட்டுமே நம்புகிறார்கள் நம் 'பெரிய' மனிதர்கள்.

தமிழக சுற்றுலாதுறை இது போன்ற இடங்களை பட்டியல் போட்டு பராமரித்தால். வரலாற்று தடங்கள் பாதுகாக்கபடுவதோடு, புதிய சுற்றுலா மையங்களை உருவாக்கலாம். செய்வார்களா?

சீரமைக்கவேண்டிய விஷயங்கள் இப்படி நிறைய இருக்கையில், தமிழ்நாட்டில் அங்கங்கே 'ஹைடெக்' கோவில்கள் பல முளைத்து வருகின்றன.

திண்டுக்கல் அருகே ஒரு கோடிசெலவில் கண்ணகி கோவில் அமைக்கப்பட என்ன அவசியம்?

சில வருடங்களுக்கு முன்பு 600 கோடி செலவில் வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில் உருவாக்கப்பட்ட 'மர்மம்' என்ன? கேட்டால் கனவு, புதையல் என்று 'விடாதுகருப்பு' பாணியில் கதை சொல்கிறார்கள். கணக்கு,வழக்கு இல்லாமல் சொத்துவைத்திருக்கும் பல 'பெரும்' புள்ளிகளின் 'மாஸ்டர்ப்ளான்' இந்த பொற்கோவில். வேலூரில் ஒரு 'தொழில்' புரட்சி ஏற்படும்அளவுக்கு இந்த கோவிலை பக்காவாக மார்கெட்டிங் செய்துவிட்டார்கள்.இதன் டிரஸ்ட் மதிப்பு இன்று இரண்டு ஆயிரம்கோடி ரூபாய் என்கிறார்கள். இதற்கெல்லாம் பணம், யாருக்கு, எங்கிருந்து, எப்படி வந்தது??

மொசைக் தரைகள், ஏசி, நவீன கன்ஸ்ட்ரக்க்ஷன் கூடவே டிவி உட்பட மீடியாக்களின் உதவியோடு "மார்க்கெட்டிங்" இவை அனைத்துமே கோவிலை பிரபலமாக்க 'கடவுளுக்கும்' இன்றைக்கு அவசிய தேவைகளாகி விட்டன.

"இந்த பெருமாளை சேவிக்கும்போது, நாம் தாய், தந்தை, பாட்டனார்,முப்பாட்டனர்களை இந்த பெருமாள் மூலம் நாம் பார்க்கிறோம்.

அவர்கள் பலப்பல வருடங்களாக இந்த பெருமாளின் முக விலாசத்தை பார்த்து பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.இவன் பாதங்களை சென்று அடைந்து இருக்கிறார்கள். நம் வாழ்வுக்கு இடைவெளி அற்ற தொடர்பை இவனே ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறான்".

ஸ்ரீரங்கம் பெருமாளை சேவிக்கும் போது, அந்த திவ்விய ரூபத்தில் தன் தாய் - தந்தையரை உணர்வதாக சுஜாதா கூறுகிறார்.

இப்படி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் குறிப்பிட்ட புராதான கோவிலிகளில் கிடைக்கும் ஆத்ம திருப்தியை எப்பொழுது மக்கள் உணரப்போகிறார்கள்.?

இப்படியாக கண்டுகொள்ள படாமல், ஊர்களின் ஒதுக்குபுறங்களில், சிதிலம் அடைந்து சிதைந்து போன "பெருமாள்கள்" எத்தனை, எத்தனையோ??


"இந்தியாவுக்கு நெடிய வரலாறு உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு அறவே இல்லை" - ஒரு மேற்கத்திய அறிஞர்.


-இன்பா

Friday, March 2, 2012

நம்ம கிராமம் - தேசிய விருது பெற்ற கதை

மோகன் சர்மா - கோலங்கள், குலவிளக்கு, முந்தானை முடிச்சு போன்ற, மெகா தொடர்களில்,  முக்கியமான பாத்திரங்களில் நடித்து வருகிறார்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்த, முதல் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் என்ற சாதனையை செய்திருப்பவர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மோகன் சர்மா. 150 படங்களுக்கு மேலாக, ஹீரோ மற்றும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் மோகன் சர்மா, தேசிய அளவில், சமீபத்தில் ஒரு சாதனை படைத்திருக்கிறார்.

இவர் கதை வசனம் எழுதி, டைரக்ட் செய்து, தயாரித்த, நம்ம கிராமம் தமிழ்ப்படம், இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறது.

இப்படத்தில் நடித்ததற்கு, 2010 ம் ஆண்டுக்கான சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது, நடிகை சுகுமாரிக்கும், சிறந்த உடை அலங்காரத்துக்கான விருது, இந்த்ரன்ஸ் ஜெயனுக்கும் அளிக்கப்பட்டன.

இதைத் தவிர, கேரள அரசின், 2010 க்கான திரைப்பட விருதுகளில், கிராமம் (மலையாளம்) படத்தின் கதையை, சிறந்த திரைப்படக் கதை என்று தீர்மானித்து, அதற்கான பரிசை, மோகன் சர்மாவிற்கும், அப்படத்தில், ஒரு பாட்டு பாடிய, எம்.பாலமுரளி கிருஷ்ணாவிற்கு, சிறந்த பின்னணி பாடகர் விருதையும் அளித்திருக்கிறது.


தேசிய விருதுகள் மற்றும் கேரள மாநில விருதுகள் பெற்றிருக்கும் மகிழ்ச்சியில், நம்ம கிராமம் படம் உருவானது பற்றிய சுவாரசியமான தகவல்களை, நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மோகன் சர்மா:

கேரளாவிற்கு குடிபெயர்ந்த, தமிழர்களின் கலாசாரத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கும் கதையே, நம்ம கிராமம் படத்தின் கதை. எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை விளக்குகிறது. அப்போது, பாலக்காடு
குதிகள், மதராஸ் மாகாணத்தில் இருந்தன. அங்கு வசிக்கும் பிராமண சமுதாயத்தை சுற்றி வரையப்பட்ட கதை. இது, 1935 முதல், 1947 வரை குறிப்பாக, இந்தியா சுதந்திரம் பெறுகிற தினத்தன்று படம், முடிவது போல் அமைக்கப்பட்டது.

பத்து வருடத்திற்கு முன், நான் இந்தக் கதையை உருவாக்கினேன். திரைப்படத் துறையைச் சேர்ந்த, பல நண்பர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இக்கதையை படமாக்க கேட்டனர். நான் ஒப்புக் கொள்ளவில்லை, முடியும் போது, நானே டைரக்ட் செய்து, தயாரிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

இக்கதை, அதில் வரும் முக்கியமான பாத்திரங்கள், என்னோடு ஐக்கியமானவர்கள். திரைப்படத் துறையில், என் முப்பது வருட சம்பாத்தியத்தை, சேமிப்பை வைத்து, இந்த படத்தை தயாரித்தேன். கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும், செதுக்கி, மெருகூட்டி உருவாக்க, மூன்று வருட உழைப்பு தேவைப்பட்டது.

மணி அய்யர் என்று அழைக்கப்படும், ராவ் பகதூர் சுப்பிரமணிய சர்மா, பாலக்காடு அருகே உள்ள, அந்த கிராமத்தின் அக்ரஹாரத்தில் பெரிய மனிதர்; ஆச்சாரமான பழைய சம்பிரதாயங்களில் ஊறிப் போனவர்.

அவரது ஒரே மகன் கிருஷ்ணசுவாமி என்ற கண்ணன். சமூகத்தில், முற்போக்கான மாற்றங்கள் கொண்டு வர துடிக்கும் இளைஞன். தேசப்பற்று, அவன் மூச்சு. தாய் லட்சுமி மீது பாசமிக்கவன். கண்ணனின் அத்தை மகள் துளசி, பத்து வயதிலேயே திருமணமாகி, உடனே கணவனை இழந்த இளம் விதவை. விதவை என்பதால், வீட்டுக்கு பின் பக்கமே, துளசி இருக்க வேண்டும்; வெளியில் வரக் கூடாது என்பது மணி அய்யரின் கட்டுப்பாடு.

பெரிய கூட்டுக் குடும்பத்தில், கண்ணனும், துளசியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கின்றனர். துளசிக்கு இசை மீது உள்ள ஆர்வத்தை, ஊக்குவிக்கிறான் கண்ணன். மணி அய்யருக்கு, அவரது அந்தஸ்துக்கு ஏற்றவாறு, கிராமத்திற்கு வெளியே, பார்கவி என்ற பெண்ணோடு தொடர்பு உண்டு.

மணி அய்யரின் தாய், அம்மணி பாட்டி சுகுமாரி. இளம் வயதிலேயே கணவரை இழந்து. அந்த பெரிய வீட்டின் பின்புறத்திலேயே இருந்து, வீட்டு வேலைகளையும், மாடுகளையும் பராமரித்து வருபவர். தன் மகனுக்கு வெளியே, ஒரு தொடர்பு இருப்பதை, அறவே வெறுத்தாலும், மணி அ#யர், அதை சட்டை செய்வதில்லை.

வீட்டில் ஒரு கைம்பெண், தலையை மொட்டை அடிக்காமல் இருப்பது, ஆச்சார குறைவு. அதனால் தான், உன் மகனுக்கு இன்னும் திருமணம் நடக்காமல், தள்ளிப் போகிறது என்று, மணி அய்யரிடம், குடும்ப ஜோசியர் சொல்கிறார். இளம் பெண் துளசிக்கு, மொட்டை அடித்துவிட அவர் முடிவு செய்கிறார்.

துளசிக்கு இந்த அநியாயம் நடக்கக் கூடாது என்று, அம்மணி பாட்டி, எவ்வளவோ முயற்சித்தும், மகன் கேட்கவில்லை.

அந்த சடங்கை நடத்தக் கூடாது என்பதற்காகவும், இளம் பெண்ணை, அந்த அவலமான கோலத்தில் பார்க்க விரும்பாத கண்ணன், துளசிக்கு குங்குமம் இட்டு, அவளை தன் மனைவியாக்கிக் கொள்கிறான்.
எதுவும் செய்ய முடியாமல், உறைந்து போகிறார் மணி அய்யர். கண்ணனும், துளசியும் புது வாழ்வைத் தேடி வெளியேறுகின்றனர். அன்று தான், நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. புது விடியல், இந்தியாவிற்கு மட்டுமல்ல, அந்த இளம் ஜோடிக்கும் தான்! இது தான், இப்படத்தின் கதை.

நெடுமுடி வேணு, ஒய்.ஜி.மகேந்திரா, நளினி, பாத்திமா பாபு, ரேணுகா, ப்ரியா ஆகியோரும், முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

"சுக்கம்மா (சுகுமாரியை அப்படித்தான் நெருக்கமாக இருப்பவர்கள் அழைக் கின்றனர்). "உங்களுக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருப்பது, பற்றி மிகவும் மகிழ்ச்சி. அதற்கு மிகவும் தகுதியானவர் நீங்கள்...' என, முதல்வர் ஜெயலலிதா மனதார பாராட்டியுள்ளார்.

பாலக்காடு அருகே, தத்தமங்கலம் என்ற சிறிய கிராமத்தில் தான், நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படத்தில் வரும் வீடுகள், இன்றும் அப்படியே இருப்பவை; செட் போடவில்லை. கிராமத்தில் இருக்கும் வீடுகள், குளம், தெரு, ஆகிய இடங்களில், படப்பிடிப்பு நடத்தினோம்.

கிளைமாக்ஸ் காட்சி படமாக்கும் போது, ஆக., 15ல், 1947ல், இந்தியா சுதந்திரம் பெறும் நாள் என்பதால், அதை கொண்டாடும் வகையில், தெரு முழுவதும் ஆயிரக்கணக்கான கொடிகள், தோரணங்கள் கட்டினோம்.
அப்போது, ஒரு பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் ஷூட்டிங் நடத்திய சமயம், இங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து கொண்டிருந்தது. "காங்., கட்சியின் கொடிகளை கட்டி, ஷூட்டிங் செய்கின்றனர்.

இது காங்கிரசார் செய்யும் சதி. இந்த படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம்'... என்று, கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.

அசோக சக்கரத்தை மையமாகக் கொண்ட மூவர்ண கொடி, நம் நாட்டின் தேசிய கொடியாக அறிவிக்கப்படுவதற்கு முன், கை ராட்டினம் பதித்த கொடிதான், தேசிய கொடியாக இருந்தது என்பது, சரித்திரம் கூறும் உண்மை. இதை, நாங்கள் எடுத்துச் சொல்லியும், அந்த தொண்டர்கள் சமாதானம் அடையவில்லை.

கேரள மாநிலத்தின், கல்வி கலாசார அமைச்சர் எம்.ஏ.பேபியை, எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும்; மதிப்புக்குரிய நண்பர். அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினேன். பிரச்னையையும், என் விளக்கத்தையும், உடனே புரிந்து கொண்டு, கம்யூனிஸ்ட் தொண்டர்களிடம் உடனே பேசி, அவர்களுக்கு விளக்கினார். சில மணி நேர தாமதத்திற்கு பின், படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினோம். அந்தக் காலகட்டத்தில் இருந்தது போன்று, சில மாட்டு வண்டிகளை, இந்தப் படத்திற்காக புதியதாக உருவாக்கினோம்.

-என்று கூறி முடித்தார், மோகன் சர்மா.


(நன்றி : எஸ்.ரஜத், தினமலர்)

 
Follow @kadaitheru