Monday, September 5, 2011

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

இன்று இந்திய ஆசிரியர் தினம்.

ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

நமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே இருக்கிறார். ஆனால், அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை விட பணம் மற்றும் பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .

இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.

ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார் திரு.ஆபிரகாம் லிங்கம்.

மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,

ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.

அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கம்.




அனைவருக்கும் நமது இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

-இன்பா

Saturday, September 3, 2011

மாறிவரும் கல்வி முறைகள்


"பொதி சுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா?"
- இது ஒரு பாடல் வரி.

மாணவர்கள் கல்வி கற்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருவதாக பின்வரும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் திரு.பொன்.குமார்.

பொன்.குமார், ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராகப் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) பணிபுரிகிறார்.

தமிழகக் கல்வித் துறை புதிய கட்டத்தை எட்டியுள்ளது என்பதற்குத் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக்கற்றல் படைப்பாற்றல் கல்விமுறையை உதாரணமாகச் சொல்லலாம். செயல்வழிக்கற்றல் முறை அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு ஒரு தனிப்பண்பை ஊட்டத் தொடங்கியுள்ளது.

காலந் தோறும் கல்விமுறை என்பது மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் முன்பாகக் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் சொல்லக்கூடியவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வுகளில் முறைபிறழாமல் எழுதுவது என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இத்தகைய படைப்பூக்கமற்ற கல்விமுறையை மாற்றும் முயற்சிதான் செயல்வழிக்கற்றல் முறை.

தொடக்கக் கட்டச் சுணக்கத்தைக் கடந்து தற்போது நம் கல்விமுறையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த முறை.

கற்பதில் புதிய அணுகுமுறைகள்

வசீலி கெம்லன்ஸ்கியின் ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்னும் ரஷ்யப் புத்தகம் குறிப்பிடுவதைப் போல் குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் ஒரு கல்விமுறையாகக் கல்விச் செயல்பாடுகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. ஆசிரியர்களிடையே கற்பிப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. வகுப்பறைகளில் அந்த மாற்றத்தின் எதிரொலி கேட்கத் தொடங்கியிருக்கிறது.

பள்ளிக்கு வந்தவுடன் வானவில் செயல்பாடு என அழைக்கப்படும் ஓர் அட்டையை எடுத்துவந்து ஒன்றாகக் கூடி அதிலுள்ள பாடல்களைப் பாடத் தொடங்குகின்றனர் மாணவர்கள். கற்றல் இப்படித்தான் ஒரு கொண்டாட்டமாகத் தொடங்குகிறது. பிறகு அவர்களுக்குரிய குழுவில் அமர்கின்றனர். ஒவ்வொரு குழுவுக்கு முரிய பாடங்கள் அட்டைகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அவரவர் தேவைக்கேற்றபடி பாடங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர்.

பழைய கல்விமுறையில் ஆசிரியர் தன் திட்டப்படி ஒரு பாடத்தை நடத்தத் தொடங்குவார். மாறுபட்ட ஏற்றத் தாழ்வான கற்கும் திறன்களைக் கொண்ட அனைத்துக் குழந்தைகளும் அந்தப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருப்பர். கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும்போது ஆசிரியரும் மேம்பட்ட கற்றல் திறன் கொண்ட குழந்தைகளும் அடுத்த பாடத்துக்கு நகர்ந்து சென்றிருப்பர். செயல்வழிக்கற்றல் முறை இதிலிருந்து முற்றாக வேறுபட்டது. மேம்பட்ட கற்றல் திறன்கொண்ட குழந்தைகள் அடுத்த பாடத்தைக் (அதாவது அட்டையை) கற்கத் தொடங்குவர்.

மெதுவாகக் கற்பவர்கள் பதற்றமின்றி, தமக்கான பாடங்களைக் கற்பர். ஆசிரியர்கள் இவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். முன்னர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதும், ஆசிரியர் அடுத்த பாடத்துக்குச் சென்றுவிடுவார். இப்போது கற்பிக்கும் முறை கற்றல் திறனில் குழந்தைகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைச் சமன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. குறைவான கற்றல் திறன் கொண்ட மாணவனுக்காக ஆசிரியர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்பதே இதன் பொருள்.

முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் ஒரே குழுவாக உட்காரவைக்கப்படுகிறார்கள். இதேபோல்தான் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களும். இது அவர்களுக்குள் தோழமையுணர்வையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்கிறது.

மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முறைகளும் மாறியுள்ளன.

வகுப்பறையில் நான்கரை அடி உயரத்திற்குத் தாழ்மட்டக் கரும் பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமக்கென ஒதுக்கப்படும் பகுதிகளில் மாணவர்கள் சாக்கட்டிகளைக்கொண்டு எழுதிப் பழகுகின்றனர். தாள்களில் எழுதிப் பழகியவர்கள் கரும்பலகையில் எழுதும்போது கையெழுத்து சரியாக வராது. இப்பயிற்சி அந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கு உதவுகிறது. புதிய கல்விமுறையில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஓவியப் பயிற்சி குறிப்பிடத்தகுந்தது. மாணவர்கள் தமக்குப் பிடித்த படங்களை வெள்ளைத்தாள்களில் வரைகின்றனர். அது ஒரு கிளியாக இருக்கலாம். கரடியாகவோ நாயாகவோ நரியாகவோ நிலவாகவோ இயற்கைக் காட்சியாகவோ அல்லது அவர்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒன்றாகவோ இருக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு வரைந்த படங்கள் வகுப்பறையின் குறுக்கே கம்பிகளால் அமைக்கப்பட்ட பந்தல்களில் தொங்கவிடப்படுகின்றன. மாணவர்கள் வரையும் படங்களை ஆசிரியர்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சரிபார்க்கின்றனர். செயல்வழிக் கல்விமுறை என்பது ஒருவகையில் விளையாட்டின் கூறுகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. விளையாட்டுகளின் மீது இயல்பான ஆர்வம்கொண்ட குழந்தைகளுக்குக் கற்றல் ஓர் இனிய அனுபவமாக இருக்க வேண்டுமென்பதே இதன் நோக்கம்.

கணிதம் பயிற்றுவிக்கும் முறைகள்

தொடக்கக் கல்வியின் இன் னொரு முக்கிய அம்சம் கணிதம் கற்பிக்கும் முறைகள். ஒவ்வோர் அரசுப் பள்ளிக்கும் ஒரு கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கணிதப் பயிற்சிப் பெற்றுவருகின்றனர். முக்கோணம், செவ்வகம், சதுரம், மணிச்சட்டங்கள், ஒன்று, பத்து, நூறு இலக்கங்கள் எளியமுறையில் இதில் போதிக்கப்படுகிறது. இத்தகைய உப கரணப் பெட்டிகள் தனியார் மழலையர் பள்ளிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்க வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம் முதலான கலைச் செயல்பாடுகள் பாட அட்டையிலேயே இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் வில் இசைத்துப் பாடுகின்றனர். பொம்மலாட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களது நினைவாற்றலை, ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுகிறது. குறுந்தகடுகள் மூலம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் நடைமுறை பல பள்ளிகளில் இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதில் பல அரசுப் பள்ளிகள் பின்பற்றி வரும் நவீன அணுகுமுறை அந்த மொழியின் பயன்பாடுகளை விரிந்த அளவில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்றாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடியும்.

புத்தகப் பூங்கொத்துத் திட்டத்தின் கீழ் கதைகள், பாடல்கள், அறிவியல் வினா விடைகள், வரலாற்றுச் செய்திகள், பொது அறிவுத் துணுக்குகள் முதலான அரிய உள்ளடக்கங்களைக்கொண்ட நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. தனியார் பள்ளிகளில் இந்தப் புத்தகப் பூங் கொத்துத் திட்டம் இல்லை.

இவற்றின் சில தலைப்புகள் யுரேகா- யுரேகா, கோட்டை, ஆவணக் காப்பகம், சித்தன்ன வாசல், இந்திய அறிவியல் அறிஞர்கள், இளம் பருவத்தில் விஞ்ஞானிகள், காலநிலை, கடல்கள், செவ்வாய் கிரகம் முதலானவை. இப்புத்தகங்களின் வண்ணமும் தாளின் தரமும் தற்போது வெளி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடுகளின் தரத்தோடு ஒப்பிடத்தக்கவை. மாலை நேரக் கற்றல் செயல்பாடுகள் என்பவை மாணவர்களுக்கிடையே நடைபெறும் குழு விளையாட்டுகள்தாம். ஆசிரியர் மேற்பார்வையில் அல்லது அவரும் இணைந்து பிற்பகலில் விளையாட்டுகள் தொடங்குகின்றன. மாணவர்களின் உற்சாகம், ஆளுமைப் பண்பு, மகிழ்ச்சி, கூட்டுமுயற்சி, தோல்வியை ஏற்கும் பண்பு ஆகியவை இதன் மூலம் பேணப்படுகின்றன.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புகள்வரை பயிலும் குழந்தைகளுக்குப் பாட வாரியாகப் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டுள்ளன. பாட அட்டைப் பயிற்சியை முடித்தவுடன் அந்தப் பயிற்சி ஏட்டை எழுதி முடிக்கின்றனர். அவர்களின் அடைவுத்திறன் மாணவர் வாரியாக அட்டையில் குறிக்கப்படுகிறது. மாதவாரியாகவும் அட்டையில் அடைவுத்திறன் குறிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது தனிக் கவனம் செலுத்திச் சிறப்புப் பயிற்சிகள் மூலம் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (Simplified Active Learning Method) அறிமுகப்படுத்தப்பட்டு அது ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையிலும் ஒன்பதாம் வகுப்பில் (Active Learning Method) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தைப் படிக்கும்போது அதிலுள்ள கடினமான வார்த்தைகளை இனங்கண்டு உரிய அர்த்தத்துடன் முதலில் ஒரு பக்கத்தில் எழுதுகின்றனர். அதைத் தொடர்ந்து படம் வரைகின்றனர். கடின வார்த்தைகள், கடினப் பகுதிகளையும் சேர்த்துப் படங்களாக வரைகின்றனர். பிறகு இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் தொகுத்து மூன்றாம் பக்கத்தில் எழுதுகின்றனர். இறுதியாக மதிப்பிடுதல் என்று வினா விடை பகுதியாக எழுதுகின்றனர்.

இதன் வாயிலாக மாணவர்கள் ஒரு பாடத்தை நான்கு வழிகளில் கற்கின்றனர். இதனால் அவர்கள் மனத்தில் சிறப்பான கருத்துகளும் கடின வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் பதிவதுடன் இது பின்னாளில் அவர்களுக்கு நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. மேலும் கணிதப் பாடத்திற்கு ஜிமிநிணிஸி முறை என்னும் வகையில் கணிதம் எளிமையாகக் கற்பிக்கப்படுகிறது. இதுவும் கணிதச் செயல்பாடு கற்பிக்கும் முறையில் ஒரு புதிய முயற்சி.

கணினிக் கல்வி

மாறி வரும் சூழலுக்கேற்பத் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்குக் கணிப்பொறிகளும் மடிக் கணினிகளும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகவும் தொடக்கக் கல்வித் துறை மூலமாகவும் வழங்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படுகிறது. கணினி வழிக் கல்வி மையங்கள் (Computer Aided Learning) பெரும்பான்மையான பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தொலைதூர மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும்-உதாரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாணவர்களையும் - கணிப்பொறிக் கல்வி எட்டியுள்ளது. இது தொடக்கக் கல்வித் துறையில் மிகப் பெரிய சாதனை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், தளவாடச் சாமான்கள் தேவையான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 900 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டம்.

வழக்கமாகத் தரப்படும் கையெ ழுத்துப் பயிற்சி, கட்டுரைப் பயிற்சி, அறிவியல் செய்முறைப் பயிற்சி முதலானவை ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்குத் தொழிற்கல்வி அளிக்கப்படுகிறது. ஆபரண நகை செய்தல், காளான் வளர்ப்பு, வண்ண ஓவியங்கள் தீட்டுதல், பூக்கூடை, மேட், மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (SC, ST) குழந்தைகளுக்குச் சிறப்பு ஆளுமைத்திறன் பயிற்சி தரப்படுவதுடன் இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் புத்தகப் பை, கணித உபகணங்கள், அகராதி போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. இப்பயிற்சிகள் அனைத்தும் உணவுடன் கூடிய உறைவிடப் பயிற்சியாகும். பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் என்னும் முறை செயல்படுத்தப்பட்டு அதன் வாயிலாகப் பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டப்பயிற்சி, தையல் பயிற்சிகளைப் பள்ளி வளாகத்திலேயே மேற்கொள்கின்றனர். இடைநின்ற மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய பகல் நேரப் பராமரிப்பு மையங்கள், பயிற்றுவிக்க சிறப்புக் கல்வித்தகுதிபெற்ற சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கு வராத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சென்று தசைப்பயிற்சி, புலன் பயிற்சி அளித்துக் கல்வியும் கற்பிக்க வசதி என இந்தத் திட்டம் பள்ளியின் வளாகத்தைத் தாண்டி விரியும் ஒன்று. பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் மூலம் மாற்றுத் திறன் குழந்தைகளுக்குக் கல்வியுடன் தசைப்பயிற்சியும் அளிக்கின்றனர். இங்கே குழந்தைகளை விட்டுவிட்டுக் காத்திருக்கும் பெற்றோருக்கும் தையல் பயிற்சி மற்றும் கைவினைப் பொருள்கள் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி (ஷிஸிஙிசி) மையங்கள் அமைக்கப்பட்டு உண்டு உறைவிடப் பயிற்சியாகச் சிறப்பாசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.

இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு கஸ்தூர்பா காந்தி பாலிக வித்யாலயா (ரிநிஙிக்ஷி) என்னும் சிறப்புப் பள்ளி ஏற்படுத்தப்பட்டு, தொண்டு நிறுவனம் மூலம் 6-8 பெண் குழந்தைகளுக்கு எட்டாவது முடித்து முறையான பள்ளியில் 9ஆம் வகுப்பு சேர்ப்பதுவரை கல்வி அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவிகள் 9ஆம் வகுப்பில் சேர்வது உறுதிப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைச் சூழல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கற்கும் முறைகள் மாறியுள்ளதால் கற்பிக்கும் முறைகளும் மாறியுள்ளன. அறிவியல் மாற்றம்தான் வாழ்க்கை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய கல்விச் செயல்பாடுகளை எல்லாம் தனியார் பள்ளிகள் இழந்துவிட்டன. தனியார் பள்ளிகள் வணிக நோக்கத்திற்காக வகுப்பறைச் சூழலையோ கல்விச் சூழலையோ மாற்றிக்கொள்ளாமல் மனப்பாட முறைகளைப் பின்பற்றி பழைய மரபு சார்ந்த முறையிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளில் உயிரோட்டமுள்ள வகுப்பு (Smart Class) என்பது இல்லை. ஆனால் அது (Smart Class) அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ளது.

கற்பித்தலின் புதிய அணுகுமுறைகள்

கற்பித்தல் என்பது ஒரு ஆசிரியர், ஒரு பிரம்பு, ஒரு சாக்பீஸ், ஒரு பழைய கரும்பலகை, ஒரு புத்தகம் என்பது பழைய நடைமுறை. இப்போது ஆசிரியர்கள் கையில் பிரம்பில்லை. வகுப்பு முழுக்க தாழ்மட்டக் கரும்பலகைகள். சாக்பீஸ் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கைகளில் வந்துவிட்டது. வண்ணமிகு பல்வேறு தலைப்புள்ள புத்தகங்கள், கற்பிக்கும் முறைகள் ஆசிரியர் சக மாணவராகக் குழந்தைகளுடன் அமர்ந்து கற்பிக்கிறார். பழைய குருகுலமுறையிலும் குருவுக்கு உட்கார மனைப்பலகை இருந்தது. ஆனால் இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுடன் பாயில் அமர்ந்து கற்பிக்கின்றனர். நவீன யுக்திகள் ஆசிரியருக்குத் தெரிந்திருப்பதுடன். கணினி இயக்கப் பயிற்சியும் பெற்றுள்ளனர். ஜிக்ஷி, ஞிக்ஷிஞி, லிசிஞி இயக்கப் பயிற்சி பெற்றுள்ளனர். பொதுவாக அனைத்துப் பள்ளிகளிலும் இந்த வசதி ஜிக்ஷி, ஞிக்ஷிஞி உள்ளது. மாணவர்கள் வரைந்த படங்களைத் தனி உற்சாகத்துடன் கம்பிப் பந்தலில் மாட்டி ஆசிரியர்கள் அழகுபடுத்துகிறார்கள். மாணவர்களின் குழு விவாதங்களில் பங்கேற்கின்றனர். கூடி விளையாட்டு என்கிற மாலைச் செயல்பாடுகளில் இவரும் மாணவர்களோடு விளையாடுகிறார்.

ஆசிரியர்களின் கல்வித் திறன்கள் மேம்படப் பல்வேறு பயிற்சிகள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் குறுவளப் பயிற்சி மையம் மூலம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்குத் தொழிற்கல்வி, பயிற்சிகள், ஆபரண நகை செய்தல், மெழுகுவர்த்தி, சாம் பிராணி, சாக்பீஸ் செய்தல், கண்ணாடி ஒளிகள், முகமூடிகள், பர் பொம்மைகள் செய்யப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதுடன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் ஆங்கிலம் போதிக்கும் முறைகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அறிவியல் உபகரணங்கள் கையாளும் பயிற்சியும் மாணவர்கள் உடல் நலம் பேணும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கற்பித்தலை ஓர் இனிமையான செயலாக ஆசிரியர்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தனியார் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் எதுவும் தனியார் பள்ளிகள் மூலம் அளிக்கப்படுவதில்லை. இளைய தலைமுறை ஆசிரியர்களுக்குக் குழந்தைகள் மனவியல் பற்றிய சிந்தனையை இப்பயிற்சிகள் வளர்க்கிறது. கற்பதை நிறுத்திவிடுபவர்கள் ஆசிரியர்களாகத் தொடர முடியாது என்ற கல்வி மேதை ராதாகிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு இப்போது பயிற்சிகளின் மூலம் பலன் கிடைத்திருப்பதுடன் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனோபாவம் ஆசிரியர்களிடம் உருவாகத் தொடங்கியுள்ளது. கிராமக் கல்விக் குழு மூலம் குழந்தைகளின் பெற்றோர்களுடன் நேரடித் தொடர்புகொண்டு குழந்தைகளின் சிக்கல்களைக் களைய முற்படுகின்றனர். பள்ளிக்கு வராத குழந்தைகளின் வீடு தேடிச் சென்று அவர்களை அழைத்துவருகின்றனர்.

எளிமையான கதைகள், சுவை மிக்க உரையாடல்கள், நல்லொழுக்க மிக்க செயல்பாடுகள், சுகாதாரத்தைப் போற்றும் நடைமுறைகள் ஆகியவை ஆசிரியர்களின் முதல் பணியாக மாறிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நல்ல வார்த்தைகளைக் குழந்தைகள் கேட்க விரும்புவதுபோல் மக்கள் கூறும் நல்ல சொற்களை ஆசிரியர்களும் கேட்க விரும்பத் தொடங்கிவிட்டனர். ஆசிரியர்கள் பள்ளிகளின் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கின்றனர். கழிப்பிட வசதி, கட்டட வசதி போன்றவற்றை நேரடியாக உயரதிகாரிகளிடம் சென்று கேட்டுப் பெற்றுப் பள்ளியை மேலும் சிறப்பாக வைத்திருக்கும் ஆர்வம் வளர்ந்திருக்கிறது. ஆசிரியர்கள் சிலர் கற்பித்தல் முறையின்மீதும் பயிற்சிகள்மீதும் ஆர்வத்தைக் காட்டுவதில் சுணக்கமாக இருந்தாலும் அதன் சதவிகிதம் மிகமிகக் குறைவே.

மலைப்பகுதி, தொலைதூரப் பகுதிகளுக்குத் தற்போது அவர்களே சொந்த வாகனத்தில் சென்றுவிடுகின்றனர். அந்தியூரில் உள்ள பர்கூர் மலைப் பகுதியில் ஆசிரியர்களே தனி ஜீப்புகளில் பல குழுக்களாகப் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆசிரியர் வராமை குறைந்துள்ளது. பள்ளிகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

புதிய உத்திகளுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப மாணவர்களைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் உருவாகிவருகின்றனர். அரசுப் பள்ளிகளின் முகம் மாறத் தொடங்கிவிட்டது. அரசுப் பள்ளி என்பது நல்ல கட்டடம், சுகாதாரமான கழிப்பிடம், சுத்தமான குடிநீர், கணினிமையம், தொலைக்காட்சிப் பெட்டிகள், புத்தகப் பூங்கொத்துடன் கூடிய நூலகம், பாதுகாப்பான சுற்றுச்சுவர், நவீன வசதிகளுடனான வகுப்பறை என மாறத் தொடங்கிவிட்டது.



தற்போது ஆர்வம் மிகுந்த குழந்தைகளும் செயலாற்றத் துடிக்கும் ஆசிரியர்களும் சமூக நலமிக்க அலுவலர்களும் நவீன ஆலோசனை தரும் வட்டார வளமையர்களும் அதிகரித்துள்ளனர். பொதுக்கல்வி சார்ந்து நிலவிவரும் அவநம்பிக்கைகளை இந்தப் போக்கு மதிப்பிழக்கச் செய்துவருகிறது எனலாம்.

(நன்றி : திரு.பொன்.குமார் மற்றும் காலச்சுவடு பதிப்பகம்).

Monday, July 25, 2011

6-ஆம் அறிவு

அன்பு வாடிக்கையாளர்களே,தவிர்க்க இயலாத சில பணிகளால், கடைதெருவில் சரக்குகளை கடந்த சில வாரங்களாக வெளியிட இயலாமல் போய்விட்டது.

இதோ, மீண்டும் நமது சிறப்பு தொடரான "6-ஆம் அறிவு " தொடருடன் சரக்குகள் இனி தொடரும்.



அறிவு சரக்குகள் :

உலகிலேயே அதிக மக்கள் பேசும் மொழி தெரியுமா? அது உலகிலேயே அதிக மக்களை கொண்ட சீனா நாட்டின் சீன மொழிதான்.

உலகிலேயே அதிக மொழிகளை கொண்ட நாடு...வேற என்ன சார். நம் இந்திய நாடுதான். நம் நாட்டில் பேசப்படும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை....1652 . அதில் ஆட்சி மொழியாக இருப்பவை மொத்தம் 18 மொழிகளே.

Acoustics - இதுதான் ஒளியை பற்றிய அறிவியல் துறையின் பெயர்.

Hygrometor - காற்றின் ஈரப்பதத்தை அளவிட உதவும் கருவியின் பெயர் இது.

Lactometor - இது நாம் குடிக்கும் பாலின் அடர்த்தியை அளவிட இருக்கும் கருவி.

லேசரை கண்டுபிடித்தவர் பெயர்...கார்டன் கௌல்ட். வருடம் 1957 .

நீல் ஆம்ஸ்ட்ராங் , நிலவில் முதலில் காலடி வைத்தவர் என்பது எங்களுக்கு தெரியும்தானே? நிலவில் அவரை தொடர்ந்து இரண்டாவதாக காலடி எடுத்துவைத்தவர் பெயர்... எட்வின் ஆல்ட்ரின்.

பூமியின் வயது 4.6 பில்லியன் வருடங்கள். பரப்பளவு :415,120.000 சதுர கிலோமீட்டர்.

3900 தீவுகளை கொண்ட நாடு...ஜப்பான். உலகின் மிகபெரிய தீவு...கிரீன்லாந்து. உலகில் விவசாய நிலங்களை அதிகம் கொண்ட நாடு...இந்தியா இல்லை...ஜெர்மனி.

சராசரி மனிதனின் மூளையின் எடை : ஒன்றரை கிலோ. அளவு : ஒன்றரை லிட்டர்.

"ஜகானோஸ் கோப்" என்றால் என்ன தெரியுமா? அதுதான் நமது மூளையை தினசரி மழுங்கடித்து கொண்டிருக்கும் டிவி.

அறிவுக்கு விருந்து :

ஒரு ஜென் கதை :

ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.

தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.

ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.

மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.

இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.

கதையின் நீதி :
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

அறிவுக்கு அழகு :



-இன்பா

Thursday, June 30, 2011

ஜூலை மாதம் - சிலிர்க்கவைக்கும் வரலாற்றுச் சுவடுகள்



1806 ஜூலை 10.

அன்று - சரியாக இருநூறு வருடங்களுக்கு முன்பு - வேலூர்க் கோட்டையின் மதில் சுவர்களுக்கு மேல் நிலவு பிரகாசித்துக்கொண்டிருக்க, அதிகாலை 2 மணிக்கு இந்தியச் சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் காவல் படையுடன் கோரமான கிளர்ச்சி ஒன்றில் இறங்கினார்கள். அலறல்களும் துப்பாக்கிச் சூட்டின் சத்தமும் அமைதியைச் சிதைக்க, அவர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டார்கள்; ஆங்கிலேயரின் பாசறைகளுக்குள் சுட்டார்கள்; அவர்களது மருத்துவமனையில் இருந்த நோயாளிகளைக் கொன்று குவித்தார்கள். அத்தாக்குதலில் 14 பிரிட்டிஷ் அதிகாரிகளும் 100 சிப்பாய்களும் இறந்தார்கள்.

14 மைல் தள்ளி ஆற்காட்டிலிருந்து விரைந்து வந்த கர்னல் ராபர்ட் ராலோ கில்லெஸ்பியின் படையினர் காலை 9 மணிக்கு ஏவிய எதிர்த் தாக்குதலில் 350 இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். சில பிரிட்டிஷ் தகவல்களின்படி, இறந்த இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கை 800.

வரலாற்றுப் பதிவுகளில் அதிகம் இடம்பெறாத இந்த நிகழ்வுதான் காலனிய இந்தியாவில் வளர்ந்துவந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக நடந்த முதல் பெரும் கிளர்ச்சி. இந்த நிகழ்வால் சென்னை மாகாண கவர்னர் வில்லியம் பென்டிங்க் பிரபுவுக்கு வேலை போனது.

14ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர சாம்ராஜ்யம் ஐரோப்பிய வடிவமைப்பில் கட்டிய, முதலைகள் நிறைந்த அகழியுடன்கூடிய வேலூர்க் கோட்டையை 1677இல் சிவாஜி கைப்பற்றினார்;

1768இல் அதைக் கிழக்கிந்தியக் கம்பெனி தனது ராணுவத் தளமாக்கிக்கொண்டது. கிளர்ச்சி நடந்த சமயத்தில் அந்தக் கோட்டையில் மேன்மை தங்கிய மன்னரின் 69ஆம் ரெஜிமென்ட், 1ஆம் பட்டாலியனின் ஆறு கம்பெனிகள், 1ஆம் ரெஜிமென்ட், 2ஆம் பட்டாலியனின் மொத்தப் படையினர், 23ஆம் ரெஜிமென்ட் எல்லோரும் சேர்ந்து 1,500 இந்தியச் சிப்பாய்களும் 370 ஆங்கிலேயர்களும் இருந்தார்கள்.

மோசமாக நடத்தப்பட்டது, முன்பிருந்த அந்தஸ்தை இழந்தது, மிகச் சுமாரான சம்பளம் ஆகியவற்றால் தக்காணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்களுக்கு ஏற்கனவே அதிருப்தி எழுந்துகொண்டிருந்தது. ஆனால் திடீரென நடந்த அந்த ஆக்ரோஷத் தாக்குதலுக்கு வேறு சில தூண்டுதல்கள் இருந்தன.

சிப்பாய்களுக்காகச் சர்ச்சைக்குரிய புதிய தலைப்பாகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியர்கள் அதை வெள்ளைக்காரன் தொப்பியாகத்தான் கருதினார்கள். நெற்றியில் ஜாதி அடையாளங்களை வரைந்துகொள்ளுதல், கடுக்கன் அணிதல், தாடி, மீசை வைத்துக்கொள்வது ஆகியவை பற்றிப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ராணுவக் கட்டுப் பாட்டு நெறிமுறைக்குச் சென்னை ராணுவத்தின் (Madras Army) தலைவர் சர் ஜான் க்ராடாக் 1806 மார்ச் 13 அன்று ஒப்புதல் வழங்கினார்.

திப்பு சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் - 12 மகன்களும் 8 மகள்களும் - கிளர்ச்சிக்கு அரசியல் மற்றும் வரலாற்று ரீதியான பலத்தைக் கொடுத்தார்கள். 1799இல் ஸ்ரீரங்கப்பட்டினம் கைவிட்டுப் போனதிலிருந்து இவர்கள் வேலூர்க் கோட்டையின் பல்வேறு மஹால்களில் தங்கியிருந்தார்கள். தங்கள் உன்னத அந்தஸ்தை இழந்துவிட்டிருந்தாலும் வெளித் தொடர்பு இல்லாமல், அரண்மனைச் சுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

இக்கிளர்ச்சியைப் பதிவுசெய்த முதல் வரலாற்றாசிரியர் எஸ்.எஸ். ஃபர்னெல் என்பவர். த ம்யூட்டினி ஆஃப் வேலூர் என்னும் அவரது புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராஸ் ஆர்க்கைவ்ஸில் இன்றும் எஞ்சியிருக்கின்றன.

3,000க்கும் மேற்பட்ட மைசூர்க்காரர்கள் (பெரும்பாலும் 'முகம்மதியர்கள்') வேலூர் இளவரசர்களின் இருப்பிடமான பின், வேலூரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் குடியேறினார்கள் என்று ஃபர்னெலின் பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் கர்நாடகப் போர்களில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பின் கிழக்கிந்தியக் கம்பெனி பல 'உள்நாட்டுச் சிப்பாய்களை' வேலையில் சேர்த்துக் கொண்டது. இவர்களில் திப்புவின் முன்னாள் சிப்பாய்கள் - குறிப்பாக அதிகாரிகள் - கணிசமான எண்ணிக்கையில் இருந்தார்கள். திப்புவின் வாரிசுகள் வேலூர்க் கோட்டையில் இருந்தது அவர்கள் தங்கள் முன்னாள் எஜமானர்களின் போராட்டத்தில் இணைந்துகொள்ள ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

கிளர்ச்சி தொடங்கச் சில மாதங்களுக்கு முன் மைசூரிலிருந்து வந்த முகம்மதியப் பக்கிரிகள் சிலர் வேலூரின் தெருக்களிலும் கடைவீதிகளிலும் வெள்ளையர்களுக்கு எதிராகக் கோஷமிட்டபடி திரிந்துகொண்டிருந்தார்கள். நாடோ டிகளாக வாழ்ந்த அவர்களுக்கு 18ஆம் நூற்றாண்டிலிருந்து ஹோல்கர்கள், சிந்தியாக்கள், ஜெய்ப்பூர் மன்னர்கள் ஆகிய பல்வேறு இந்திய ராணுவங்களுடன் வரலாற்று ரீதியான தொடர்பு இருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் கூலிப்படையாகச் செயல்பட்ட பக்கிரிகளுக்குக் கட்டுப்பாடோ டு இயங்கிய பிரிட்டிஷ் ராணுவத்தில் இடமிருக்கவில்லை. 1805லிருந்து வேலூரில் காணப்பட்ட பக்கிரிகள் கிளர்ச்சியைத் தூண்டினார்கள்.

திப்புவின் முன்னாள் கூட்டாளிகளான அப்துல்லா கான், பீர்ஜாதா ஆகியோரின் தலைமையில் பக்கிரிகள் வேலூரில் ஆங்கிலேயர்களைக் கேலிசெய்தும் அவர்களுக்கு அழிவுக் காலம் நெருங்கிவிட்டதாகப் பிரகடனம் செய்தும் பொம்மலாட்டங்களை நடத்தினார்கள்; புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்காக, ஜாதி மற்றும் மத "மாசுபாட்டிற்கு" வழிவகுக்கும் வகையில் தோலாலான தலைப்பாகைப் பட்டையும் (cockade) மார்பில் சிலுவை போலிருந்த turnscrew ஒன்றையும் அணிந்ததற்காகப் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஏளனம்செய்தார்கள். இதனால் காலப்போக்கில் எல்லாச் சிப்பாய்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று பக்கிரிகள் அறிவித்தார்கள். மத மாற்றத்தை இந்துச் சிப்பாய்களைவிட முன்பு ஆளும் வர்க்கமாக இருந்த முகம்மதியச் சிப்பாய்கள் வெறுத்ததுபோல் தெரிந்தது.

லண்டனின் இந்தியா ஆஃபீஸ் நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் பெருமளவு அடிப்படையாகக் கொண்ட மாயா குப்தாவின் ஆராய்ச்சிப்படி, 1806 மே 6 அன்று 4ஆம் ரெஜிமென்ட்டின் இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த 29 சிப்பாய்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தார்கள். தங்கள் எதிர்ப்பை மறுநாளும் தொடர்ந்த அவர்கள், தலைப்பாகை அணியாமல் கைக்குட்டை போட்டுக்கொண்டார்கள்; ஆங்கிலேய அதிகாரிகளை 'நாய்கள்' என்று ஏசினார்கள்.

கீழ்ப்படியாத சிப்பாய்கள் சென்னையில் சிறைவைக்கப்பட்டு ராணுவ விசாரணை செய்யப்பட்டார்கள். வருத்தம் தெரிவித்து எதிர்ப்பைக் கைவிட்ட சிப்பாய்களுக்குத் தண்டனை இல்லை. ஆனால் பிடிவாதமாக இருந்த இரண்டு ஹவில்தார்கள் - (ஒருவர் முஸ்லிம், ஒருவர் இந்து) - 900 கசையடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஜூன் மாதம் வேலூர் அருகிலுள்ள வாலாஜாபாதிலும் தலைப்பாகையை எதிர்த்துப் பெரும் போராட்டம் ஒன்று நடந்தது.

ஜூன் 17 அன்று 1ஆம் ரெஜிமென்ட் சிப்பாய் முஸ்தஃபா பெக் கிளர்ச்சி நடக்கத் திட்டம் தீட்டப்படுவது பற்றித் தலைமை அதிகாரி லெப். கர்னல் ஃபோர்ப்ஸிடம் போய்ச் சொன்னார். ஃபோர்ப்ஸ் இந்திய அதிகாரிகளிடம் அது குறித்துக் கருத்துக் கேட்க, அவர்கள் அது சாத்தியமில்லை என்று சொன்னதோடு பெக்கிற்குப் புத்தி பேதலித்துவிட்டதாகச் சொன்னார்கள். பெக் இடமாற்றப்பட்டுச் சிறைவைக்கப்பட்டாலும், பிறகு அவருக்கு 7,000 ரூபாய் சன்மானமும் ஒரு சுபேதாருக்குரிய ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. கிளர்ச்சியாளர்கள் - குறிப்பாக அதிகாரிகள் - மைசூர் ஆட்சியை மீண்டும் நிறுவும் நோக்கத்தில் போலிகர்கள் (தக்காண நிலப் பிரபுக்கள்), ஹோல்கர்கள், மராட்டியர்கள், ஆட்சியை இழந்த ஹைதராபாத் மன்னர்கள் ஆகியோர் மட்டுமின்றிப் பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடனும் தொடர்புவைத்திருந்ததாகப் பின்னாளில் கணிக்கப்பட்டு சீக்ரெட் சண்ட்ரீஸ் (Secret Sundries) என்னும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகளில் பெரும் பாலானவற்றில் குறிப்பிடப்படுகின்றன. அவர்கள் ஜூலை 14ஐத்தான் ஒருங்கிணைந்த கிளர்ச்சிக்கான தேதியாகக் குறித்திருந்தார்கள்; ஆனால் பெக்கின் துரோகம் கிளர்ச்சியை அதற்கு முன்பே நடத்தச் செய்தது.

திப்புவின் மூன்றாம் மகன் மொஹியுதீன், நான்காம் மகன் மொய்ஸுதீன் தவிர மூத்த மகன் ஃபத்தே ஹைதரும் அந்தக் கிளர்ச்சியைச் சிந்தித்து உருவாக்கிச் செயல்படுத்திய முக்கியமான நபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஜூலை 10 அன்று கிளர்ச்சியாளர்கள் வேலூர்க் கோட்டையைக் கட்டுக்குள் கொண்டுவந்த சில நாள்களில் கோட்டையில் திப்பு சுல்தானின் கொடியை ஏற்றினார்கள். கிளர்ச்சி நிறைவு பெற்ற பின் சிப்பாய்களின் சம்பளம் இரண்டு மடங்காக்கப்படும் என்று மொய்ஸுதீன் உறுதியளித்தார்.

வேலூர்க் காவல் படையின் தலைமை அதிகாரி கர்னல் ஃபேன்கோர்ட்டும் 23ஆம் ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கெராஸும் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட, பல அதிகாரிகள் தப்பித்துச் சென்று ஒளிந்துகொண்டார்கள்; மிக அருகில் ஆற்காட்டில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத் தளத்திற்குத் தகவல் அனுப்பினார்கள்.

படுகொலை முடிந்து கோட்டையைக் கைப்பற்றியதும் சிப்பாய்கள் திருடுவதில் இறங்கினார்கள். ஆங்கிலேயர் வசிப்பிடத்தையும் (paymaster's) அலுவலகத்தையும் அவர்கள் சூறையாடினார்கள். சுமார் 7 மணியளவில் பொது மக்கள் பலரும் கோட்டைக்குள் நுழைந்திருந்தார்கள்.

ஒரு பிரிட்டிஷ் மதிப்பீட்டின்படி அந்தக் கிளர்ச்சியில் 5,48,429 பகோடாக்கள் (தங்க நாணயங்கள்) திருடப்பட்டன. சிப்பாய்களும் பொது மக்களும் சூறையாடிக்கொண்டிருக்கையில் ஆற்காட்டிலிருந்து கர்னல் கில்லெஸ்பியின் தலைமையில் 19ஆம் டிராகூன்ஸும் 7ஆம் குதிரைப் படையும் கோட்டைக்குள் நுழைந்தன.

கோட்டையின் நான்கு வெளி வாயில்களில் மூன்று கவனிப்பாரற்று இருந்ததால் ஆங்கிலேயப் படைகளுக்குக் கோட்டைக்குள் நுழைவது சிரமமாக இருக்கவில்லை. கர்னல் கென்னடி கூடுதல் படையினருடன் வந்ததாலும் இந்தியச் சிப்பாய்களின் ஆயுத பலம் குறைந்துவந்ததாலும் கிளர்ச்சியாளர்கள் கோட்டையை எவ்வளவு சுலபமாகக் கைப்பற்றினார்களோ அவ்வளவு சுலபமாக ஆங்கிலேயப் படைகள் கோட்டையை மீட்டன. எட்டு மணி நேரத்திற்குள் அத்தனை அமர்க்களமும் முடிந்துவிட்டிருந்தது. கில்லெஸ்பியும் அவரது ஆட்களும் இளவரசர்களையும் திப்பு குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பிழைத்துப் போக விட்டார்கள்; 1807 ஜனவரி வாக்கில் இளவரசர்களின் மொத்தப் பரிவாரமும் தொலைதூரத்திலிருந்த கல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தது.

787 சிப்பாய்கள் தப்பித்துப்போனதாகவும் 446 சிப்பாய்கள் பெரும்பாலும் சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கைப்பற்றப்பட்டார்கள் எனவும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகள் சொல்கின்றன. "தண்டனை விதிக்கப்பட்ட ஆறு கிளர்ச்சியாளர்கள் பீரங்கிகளால் சிதறடிக்கப்பட்டனர், ஐவர் மஸ்கெட்களால் சுடப்பட்டனர், எட்டு பேர் தூக்கிலிடப்பட்டனர்" என்று சீக்ரெட் டெஸ்பேட்ச்சஸ் என்னும் ஆவணத்தின் 33ஆம் தொகுதி தெரிவிக்கிறது. இந்தத் தண்டனைகள் கோட்டையின் வடக்குப் பகுதியில் நிறைவேற்றப்பட்டன.

வட ஆற்காடு மாவட்டக் கையேட்டில் [Manual of the North Arcot District (1898)] மாஜிஸ்திரேட் ஆர்தர் சி. ஃபாக்ஸ் அடக்க முடியாத சந்தோஷத்துடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"சிப்பாய்களைப் பீரங்கிகளால் சிதறடித்து மரண தண்டனை நிறைவேற்றியது மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு ஏராளமான பருந்துகள் வந்தன; அந்த ரத்தக் களறியான விருந்திற்கு ஆவலுடன் காத்திருந்ததுபோல் சிறகடித்துக் கிறீச்சிட்டன; பிறகு பெருத்த வெடியோசை எழுந்து அவர்களது உடல்கள் துணுக்குகளாகச் சிதற, கழுகுகள் பல துணுக்குகள் தரையைத் தொடுவதற்கு முன் பாய்ந்து கொத்திச் சென்றன. பணியில் இருந்த உள்நாட்டுத் துருப்புகளும் தண்டனையைப் பார்க்கத் திரண்டிருந்த கூட்டமும் இந்தக் காட்சியைப் பார்த்துப் பீதியில் கூவினார்கள்."

இது போன்ற காட்சிகள் தென்னிந்தியர்களின் மனத்தில் ஏற்படுத்திய பயங்கரப் பாதிப்பில்தான் அவர்கள் 1857 கிளர்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார்கள்.

"வேலூர்க் கிளர்ச்சியை வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் வர்ணித்த 'ஆதி தேசியவாதம்' (proto-nationalism) என்ற அடிப்படையில் புரிந்துகொள்ளலாம். ஆதி தேசியவாதத்தில் மொழி, இனம், பழக்க வழக்கங்கள், உடை முதலானவற்றில் உள்ள வேறுபாடுகளால் எதிர்ப்பு கிளம்புகிறது" என்கிறார் அதிகாரபூர்வமற்ற வேலூர் இருநூறாண்டு நினைவுக் குழுவிற்காக வேலூர்க் கிளர்ச்சியைப் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்துவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. மணிகுமார்.

இந்தச் சம்பவம் ஏன் நாட்டு மக்கள் மனத்தில் ஓர் ஓரத்திலேயே இருந்திருக்கிறது என்று சென்னை வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி கூறுகிறார்:

"தமிழ்நாடு எப்போதுமே தேசியவாத வரலாற்று நூல்களில் ஓர் ஓரத்தில்தான் இருந்துவந்திருக்கிறது. வடக்கும் வங்காளமுமே பெருமளவு இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. 1920களில் பெரியார் தலைமையில் தமிழ்நாடு மேற்கொண்ட "தேசிய எதிர்ப்பு"ப் போக்கு, அதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம், தி.மு.க.வின் எழுச்சி ஆகியவை அப்படி ஓரங்கட்டப்படுவதற்கு ஒரு நியாயத்தைக் கொடுப்பது போலிருந்தன. வேலூர்க் கிளர்ச்சி பற்றிய மௌனத்தை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும்." வேலூர்க் கிளர்ச்சி முழுக்க முழுக்க ஒரு ராணுவக் கிளர்ச்சியாகவே இருந்தது என்கிறார் வேங்கடாசலபதி.

"அது பாசறைகளில் தொடங்கிப் பாசறைகளில் மட்டுமே நடந்தது. ஆனால் 1857 சம்பவம், ஒரு கிளர்ச்சியாகத் தொடங்கி வட இந்தியாவில் பல இடங்களில் பரவி ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியானது" என்கிறார் அவர்.



வேலூர்க் கோட்டையில் கிளர்ச்சிக்கான திட்டம் தோன்றிய இடமான திப்பு மஹால்,இப்போது இந்த இடம் போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் ஒரு பகுதி ஆகியிருக்கிறது. முன்பு இங்குத் தமிழகக் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி பெற்றுவந்தார்கள் - ஒரு காலத்தில் மன்னர்கள் வாழ்ந்த இடத்தில் இவர்கள் குளித்துக்கொண்டும் மலம் கழித்துக்கொண்டும் இருந்தார்கள்.


வேலூர்க் கோட்டையில் இன்னொரு கிளர்ச்சியும் நடந்தது. திப்பு மஹாலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளில் 43 பேர் 1995 ஆகஸ்ட் 15ஆம் தேதி அகழி வழியாக 153 அடி நீளச் சுரங்கம் ஒன்று தோண்டித் தப்பித்தார்கள். தமிழகக் காவல் துறை அதில் அவமானப்பட்டுத் திப்பு மஹாலில் யாரும் நுழைவதற்குத் தடை விதித்திருக்கிறது.

வேலூர்க் கிளர்ச்சியின் இருநூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டமின்றித் தொடங்கும் இந்தத் தருணத்தில், வரலாறு படைக்கப்பட்ட அந்த இடத்தை எட்டிப் பார்க்கக்கூடத் தமிழகப் பொதுமக்களுக்கு வாய்க்காமல் போகலாம்.

(நன்றி : அவுட்லுக் மற்றும் திரு.திவாகர் ரங்கநாதன்)

Saturday, June 25, 2011

6 - ஆம் அறிவு

கடைத்தெருவின் சிறப்பு தொடரான "6 - ஆம் அறிவு" தொடரின் இன்றைய மூன்றாம் பகுதியில்,உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான Emma Maersk பற்றிய சில குறிப்புகளை காண்போம்.



அறிவுச் சரக்கு : Emma Maersk - படத்தில் இருக்கும் கப்பலின் பெயர். இன்று உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இதுதான்.

இந்த கப்பல் பற்றிய சில குறிப்புகள்.

Emma Maersk கப்பல் உருவான நாடு, டென்மார்க்.

5000 பேர் பயணம் செய்யக்கூடிய அமரிக்க விமானம்தாங்கி கப்பலை விட,இந்த கப்பல்
பெரியது.

15000 கொள்கலன்கள்(containers), 13 பணிக்குழுக்கள் (crew) ஆகியவை இதன் கொள்ளளவு.

இதன் கொள்ளளவு காரணமாக, பனாமா மற்றும் சுயஸ் கால்வாய் வழியாக பயணம் செல்லமுடியாது. உயர்மட்ட கடல் வழி மட்டுமே இக்கப்பலால் செல்லமுடியும்.

கப்பலின் கட்டுபாட்டு அறைக்கு மொத்தம் 10 தளங்கள்(floors) உள்ளன.

ஒரே சமயத்தில் இந்த கப்பலில் 11 பளுதூக்கி கருவிகளால்(Cranes), சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ முடியும்.

இந்த கப்பலின் நீளம் : 1302 அடிகள்...அதாவது 396.85 மீட்டர்கள்.அகலம் : 207 அடிகள்...அதாவது 63.1 மீட்டர்கள்.

இந்த கப்பலின் சரக்குகள் கொள்ளளவு 123,200 டன்கள்.

இந்த கப்பலை இயக்கம் இயந்திரம் 108 920 குதிரை சக்தி கொண்டது. இந்த இயந்திரத்தின் அளவு : 26.7 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் உயரம்.
இதன் எரிபொருள் கொள்ளளவு : மணிக்கு 6,275 லிட்டர்கள்.

இந்த கப்பலின் அடிப்பரப்பில் சிலிகான் பெயிண்ட்டை பூசி இருக்கிறார்கள். இது கப்பலுக்கு கடல் நீருக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 317,000 கேலன்கள் வரை டீசலை சேமிக்கமுடிகிறது.

இந்த சிறப்பு இயந்திரத்தை ஒரு மீட்டர் சுற்றளவை கொண்ட பிஸ்டன் தண்டுகளை(rods) கொண்டு செய்து இருக்கிறார்கள்.


ஒரு கப்பலின் வேகத்தை Cruise Speed என்பார்கள். இதன் அளவுகோல் நாட்(knot).ஒரு சிறந்த சரக்கு கப்பலின் Cruise வேகம் 18 - 20 நாட். ஆனால், இந்த கப்பலின் நாட் 31 .

இந்த கப்பலின் அதிகபட்ச வேகம்...மணிக்கு 55.80 கிலோமீட்டர்.

சீனாவில் இருந்து கலிபோர்னியா துறைமுகத்தை இந்த கப்பலால் நான்கே நாட்களில் சென்று சேர்ந்துவிட முடியும்.

கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கிய வருடம், செப்டம்பர் 8 , 2006 .

இந்த கப்பலின் கட்டுமான செலவுகள் :145,000,000 அமெரிக்க டாலர்கள்.

Emma Maersk - சோமாலிய கொள்ளையர்கள் கையில் சிக்காமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

அறிவுக்கு அதிர்ச்சி:

மனிதன் மனம் விட்டு சிரிக்கும்போதெல்லாம், அவனது ஆயுட்காலம் கூடுகிறது என்பது அறிவியல் உண்மை.

ஆனால், சமிபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

அது, ஒரு குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 400 முறைகள் வரை சிரிக்கின்றது. ஆனால், வயது வந்த மனிதன் நாளொன்றுக்கு வெறும் 15 முறைகளே சிரிக்கிறான் என்கிறது.

இதைதான் கவிஞர் கண்ணதாசன் "பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லையடா" என்றானோ.

அறிவுக்கு அழகு:




-இன்பா

Thursday, June 23, 2011

தள்ளாமை,இயலாமை,முடியாமை


சென்ற வாரத்தில் ஒரு விடுமுறை நாள்.

என் நண்பர்கள் அறைக்கு சென்று இருந்தேன். அவர்கள் ரூம் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில், ஒரு சித்த வைத்திய டாக்டர் என்று ஒருவர் இவ்வாறு பேசினார்.

"என்னுடைய முப்பாட்டானர் சத்யராஜ் இமயமலையில் தவம் செய்தவர். பின்னர் சேலம் வந்து, பல வருடங்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த வைத்திய சாலையை தொடங்கினார். பின்னர் எனது பாட்டனார் ராமராஜ் அவரது ஓலைச்சுவடிகளை (!?) கொண்டு, ஆராய்ச்சியை தொடர்ந்து நவீன படுத்தினார். பின்னர் எனது தந்தையாரும், நானும் மக்கள் சேவையே பெரிது என மருத்துவ சேவையை செய்து வருகிறோம்" என்கிற ரீதியில் பேசினார்.

ஆராய்ச்சி, ஓலைச்சுவடிகள், மக்கள் சேவை...முடியலடா சாமி.

வரிசையாக முப்பாட்டனார்,பாட்டனார்,தந்தையார் என படங்களை காட்டினார்கள். இந்த டாக்டரே வெவ்வேறு கெட்டப்புகளில் இருக்கிறாரா என்று ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.

இவர் பேசப்பேச,கஜுரஹோ காமகோவில் சிற்பங்கள் 'கிராபிக்ஸ்' மூலம் பின்னணியில் நகர்வதாக செட்டப் வேறு.

இவர்களுக்கு ஏற்றதுபோல சித்த வைத்திய சாலைகளுக்கு,மலையடிவார பகுதிகளை எப்படித்தான் வளைத்துபோட்டார்களோ?.

அதற்க்கு பின்னர் அழாதகுறையாக அவர் "தமிழ்நாட்டில் உள்ள என் குழந்தைகள் எல்லாம் என்னிடம் வந்து அழுகிறார்கள். மகன்களே, என்னிடம் வாங்க. உங்க குறையை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார்.

"ஒண்ணும் புரியலையே. என்ன சொல்றார்?" என்றேன் என் நண்பனிடம்.

அவன் சிரித்தபடி சொன்னான்.

"குழந்தைகள் என்று இவர் சொன்னது திருமணமான பெண்களை. குறைபாடு உள்ள மகன்கள் என்று குறிப்பட்டது திருமணமான ஆண்களை. இப்போது புரிகிறதா?".

"டாக்டரின் விஜயம்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும், ஏதாவது ஒரு லாட்ஜில் மக்களை சந்திப்பதாக விளம்பரங்கள் வேறு.

விட்டால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எங்கள் சித்த வைத்திய சாலைகளுக்கு கிளைகள் இருக்கிறது என்று சொல்வார்கள் போல.
(என்ன ஒரு வாழ்க்கை. என்ன ஒரு வேலை. நாமும்தான் வாழறோம்!)

நிகழ்ச்சியின் முடிவில்,ஒரு தம்பதி நம் டாக்டருக்கு அருகே அமர்ந்து கொண்டு, தங்களின் "சாதனை(?)" கதையை ஒப்பித்துகொண்டு இருந்தார்கள்.

டிவி தொடர்களுக்கு இணையாக, எல்லா சேனல்களிலும் குறிப்பிட்ட நேரங்களில், இவரை போன்று ஏதாவது ஒருவர், தான் ஒரு சித்த வைத்திய நிபுணர் என்று சொல்லிக்கொண்டு, என்னமோ ஒரு 'சின்ன வாத்சயனார்' என்று தன்னையே நினைத்துகொண்டு ஆண்மைகுறைபாடுகளுக்குக்கும், தாம்பத்திய பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

போதாகுறைக்கு, பத்திரிக்கைகளிலும் ஒரு பக்க விளம்பரம்....திருக்குறள் போன்று, தள்ளாமை,இயலாமை,முடியாமை என்ற தலைப்பில்.

அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, ஜூவி, நக்கீரன் போன்ற அரசியல் பத்திரிக்கைகளில்தான் இது போன்ற விளம்பரங்கள் அதிகம் வருகின்றன. பெரும்பாலும் அவற்றை ஆண்கள் படிப்பதாலா, இல்லை, அரசியல்வாதிகள் எல்லாருமே ஆண்மையை(?) அடிக்கடி பயன்படுத்துவதாலா?
-என்று ஆராய வேண்டும். (அட, நானும் ஒரு ஆராய்ச்சியாளன்).

இந்த டாக்டர் அடிக்கடி குறிப்பிட்டு, பார்ப்பவர்களை(ஹி ஹி என்னையும்தாங்க!) பயமுறித்திய வார்த்தைகள், அதாவது இதுபோன்று சித்தா டாக்டர்களின் பிசினஸ் டெக்னிகல் வார்த்தைகள்...

'சொப்பன ஸ்கலிதம்', 'கைபழக்கம்', 'சுயஇன்பம்' போன்றவை.

"தமிழ் நாட்டு இளைஞர்கள் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். சுய இன்பம் அனுபவிப்பதால், ஆண்மை இழப்பு ஏற்படும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது. உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவிழக்கும்"

-இதைபோல இவர்கள் பேசுவதெல்லாம் எந்த அளவுக்கு நிஜம்??

இது பற்றிய கேள்விகளுக்கு, முறைப்படி படித்து டாக்டர் பட்டம் பெற்று, செக்ஸ்சாலாஜிஸ்ட் ஆக பணிபுரியும் ஒரு மருத்துவர் சொன்ன விளக்கங்கள் இங்கே..

முதலில் சுயஇன்பம்,

சுய இன்பம் என்பது ஒரு வியாதி அல்லது குறைபாடு இல்லை. அதற்க்கு அடிமையாக இருக்க கூடாது. அவ்வளவே என்கிறார் இவர்.

"Masturbation is a Healthy Sexual Behaviour. நீ சுய இன்பம் செய்யவில்லை என்றால்தான் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகளுண்டு. செய்கிறாய் என்றால் You are sexually perfectly alright. 95% ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியானால் 100க்கு 95 பேருக்குக் குழந்தை பிறக்காமல் அல்லவா போக வேண்டும். அப்படி இல்லையே. துணையுடன் வாரமிருமுறை உறவு கொண்டால் தீங்கில்லை என்று சொல்லும் உன்னுடைய அந்த மருத்துவம் (சிவராஜ்), அதே செயலை திருமணத்துக்கு முன்பு துணையில்லாமல் செய்து கொண்டால் மட்டும் எப்படித் தவறென்று சொல்ல முடியும்? "

அடுத்ததாக சொப்பன ஸ்கலிதம்...அதாவது தூக்கத்தில் விந்து வெளியாதல்.

"வளரும் இளைஞனின் உடலில் குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தியாகத் தொடங்கும் உயிரணுக்கள், முதல் முறை வெளியாவதற்கு இயற்கையே ஏற்படுத்தியிருக்கும் ஒரு முறைதான் இந்த சொப்பன ஸ்கலிதம். சரியாகச் சொன்னால் பெண்கள் ருதுவாதலை ஒத்த ஒரு ஆண் பூப்பெய்தல். ஆங்கில மருத்துவம் இதை Nocturnal Emission என்கிறது. துளி கூட இதனால் உடல் நலத்திற்கோ, குழந்தை பெறுதலுக்கோ பாதிப்பில்லை. இளைஞன் உடலுறவுக்குத் தயாராகி விட்டதற்கு ஒரு alerting mechanism தான். முதல் முறை மட்டுமல்ல. வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் இது ஏற்படலாம். பயப்படத் தேவையே இல்லை".

அவர் குறிப்பிட்ட மருத்துவ விளக்கங்களை பின்வரும் சுட்டிகளில்(links) காணலாம்.

http://www.ayurvediccure.com/over_masturbation.htm
http://www.webmd.com/sex-relationships/guide/masturbation-guide
http://www.afraidtoask.com/masturbate/MedView.htm
http://en.wikipedia.org/wiki/Nocturnal_emission

அறிவியல் உண்மைகள் இப்படி இருக்க, நம் ராஜ் வகையாறக்கள் அனாவசியாமான பயங்களை மக்களிடம் வளர்த்துவிட்டு, 'துட்டு' பார்க்கிறார்கள். டிவி சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு இவர்களது டுபாக்கூர் நிகழ்சிகளை சமூக பொறுப்போ, அக்கறையோ துளியும் இல்லாமல் ஒளிபரப்பி வருகிறார்கள்.

"செக்ஸ் என்பது 90 சதம் மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி. மீதம் உள்ள வெறும் 10 சதம் மட்டுமே உடலின் பங்கு இருக்கிறது" என்கின்றன அறிவியலும் மனோத்தத்துவமும்.

புற்றீசல் போல ஆண்மை குறைபாடுகளை தீர்த்துவைக்கிறோம் என்று புறப்பட்டு இருக்கும் சித்தவைத்திய 'ராஜ்'கள் தொல்லையிடம் இருந்து பரமஹம்ச ரஞ்சிதானந்தா(!) சுவாமிகள்தான் மக்களை காப்பாற்றவேண்டும்.

சித்த வைத்தியத்தை பற்றி தவறாக கூறவில்லை. சிறப்பான முறைகள் கண்டிப்பாக சித்தவைத்தியத்தில் இருக்கின்றன. சித்தவைத்தியம் என்ற பெயரில் நம் சமுகத்தில்,டிவியில் உலா வரும் டுபாக்கூர் டாக்டர்களை பற்றியே நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.

சீரியசாக விவாதிப்போம்.

உலக அளவில் இன்று நடைபெறும் குற்றங்கள் 75 சதவீதம் செக்ஸ் சம்பந்தப்பட்டவை என்கிறது ஒரு சர்வே.

இன்னொரு சர்வே இதை விட அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும் பலமடங்கு அதிகரித்துவிட்டது என்பதே. குறிப்பாக, நம் இந்தியாவில்.

சில நாட்களுக்கு முன்னால் கூட, குமரி மாவட்டத்தில் ஒரு சிறுமியை அதிகாரிகள் சிலர் கூடி கற்பழித்துவிட்டனர் என்று செய்தி வெளியானது.

எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட, எது 'குட் டச் (good touch)' , எது 'பெட் டச் (bad touch)' என்று புரியவைக்கவேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.

டிவி, இன்டர்நெட் என்று நம் வீட்டுக்குளேயே உலகம் வரதொடங்கிவிட்டதால், பள்ளிகுழந்தைகளுக்கு கூட செக்ஸ் சம்பந்தப்பட்ட எக்ஸ்போஷர்(exposure) மிக எளிதாக
கிடைத்துவிடுகிறது.

செக்ஸ் குற்றங்களை கட்டுப்படுத்த, செக்ஸ் பற்றிய பயங்களை போக்க நாம் என்ன செய்யவேண்டும்??

செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை,புரிதலை வளரும் பருவத்தினருக்கு ஏற்ப்படுத்துவது அவசியம் அல்லவா?

இன்று நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல தீர்வு....மாணவர்களுக்கு பாலியல் கல்வி என்பதே.

-இன்பா

Tuesday, June 21, 2011

6 - ஆம் அறிவு

நமது கடைத்தெரு வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு தொடரான "6 - ஆம் அறிவு" தொடரின் இரண்டாம் பகுதி.



அறிவுச் சரக்குகள் :

நமது பூமியின் எடை 6500 மில்லியன் மில்லியன் மில்லியன் டன்கள்.

உங்களுக்கு தெரியுமா? நாம் ஒவ்வொரு முறை தும்மும்போதும், நமது இதயம் ஒரு நொடி நின்றுவிடுகிறது.

ஒரு அறிவியல் ஆய்வுப்படி, ஒரு மனிதன் ஆண்டுக்கு சாராசரியாக 1460 கனவுகள் காண்கிறான்.

தலையை வெட்டினாலும், ஒன்பது நாட்கள் வரை உயிரோடு வாழக்கூடிய ஒரே உயிரினம்....வேற என்ன...கரப்பான் பூச்சி.

எஸ்கிமோக்கள் எனப்படும் பனிமலையில் வாழும் மக்கள், 'பனி' என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில், சுமார் 100 வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், "ஹலோ" என்று பொருள்தரும் ஒரு வார்த்தை கூட அவர்கள் மொழியில் இல்லை.

ஆங்கில மொழியில், அதிக விளக்கங்களை கொண்ட வார்த்தை..."SET".

ஆங்கில மொழியில் ஒரு எழுத்து கூட திரும்பவும் வாராத ஒரே 15 எழுத்துக்களை கொண்ட வார்த்தை.... "uncopyrightable".

"Sixth Sick Sheik’s Sixth Sheep’s Sick” இந்த வார்த்தைதான் ஆங்கில மொழியில் உச்சரிப்புக்கு மிகவும் கடினமான வார்த்தை.

முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட இணைய முகவரி(Domain Name).... Symbolics.com.
பதிவு செய்யப்பட்ட வருடம் மார்ச் 15, 1985.

உலகிலேயே தற்போது அதிக விலைக்கு விற்கப்பட்ட இணையதள முகவரி....Business.com.
விற்கப்பட்ட விலை : 7 . 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அறிவுக்கு விருந்து :

அவன் ஒரு பெரிய தேவாலயத்தைப் பராமரிக்கிற வேலையில் இருந்தான்.

சிறு வயதிலிருந்தே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் வயோதிகப் பருவத்தையும் அடைந்து விட்டிருந்தான். அந்த தேவாலயத்திற்கு ஒரு பாதிரியார் புதிதாகப் பொறுப்பேற்று வந்தார். அவர் தேவாலயத்தைப் பராமரிக்கிறவன் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினார். ஆனால் இவனுக்கோ எழுதப்படிக்கத் தெரியாது.

அவர் அவனை அழைத்து ஆறு மாத காலத்திற்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லா விட்டால் அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் என்றும் கறாராகச் சொல்லி விட்டார்.

இந்த வயதில் இனி எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது கஷ்டம் என்று அவன் அவரிடம் மன்றாடிப் பார்த்தான். கல்வியறிவு மிக முக்கியம் என்று நினைத்த அவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கற்றுக் கொள் இல்லையேல் வேலை இல்லை என்று முடிவாகவே சொல்லி விட்டார். ஆனால் அவனால் கற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டான்.

அவனுக்கு அந்த தேவாலய வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. வேலையை இழந்து தேவாலயத்தை விட்டு வெளியே வந்த அவன் மனதில் இருந்த துக்கத்திற்கு அளவில்லை. பெரிய சேமிப்பும் கிடையாது. அவனை ஆதரிக்கிறவர்களும் இல்லை. கவலையுடன் அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்கையில் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் உள்ள அவனுக்கு சுருட்டுப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய பையில் துழாவினான். சுருட்டு இல்லை.

சரி கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி தேடி நடந்தான். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்தும் அந்தப் பகுதியில் அவனால் சுருட்டு விற்கும் கடை ஒன்றைக் கூடப் பார்க்க முடியவில்லை. தன்னைப் போல் எத்தனை பேர் இந்தப் பகுதியில் சுருட்டுக் கடை இல்லாமல் அவதிப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிய அவன் உடனடியாகத் தன்னிடம் இருந்த சிறிய சேமிப்பில் அந்தப் பகுதியில் சிறியதாக ஒரு சுருட்டுக் கடை வைத்தான்.

அந்தப் பகுதியில் சுருட்டுக் கடை வேறு எதுவும் இல்லாததால் அவனுக்கு வியாபாரம் நன்றாக நடந்தது. கடையை விரிவுபடுத்தினான். வேறு பொருள்களையும் சேர்த்து விற்றான். அவன் விரைவிலேயே பெரிய பணக்காரன் ஆகி விட்டான். வங்கியிலும் அவன் கணக்கில் பெரும் தொகையை வைத்திருந்தான்.

தன் வங்கிக் கணக்கை சரி பார்க்கிற விஷயமாக ஒரு நாள் அவன் வங்கிக்குச் சென்றிருந்த போது வங்கி அறிக்கை ஒன்றில் அவன் கையெழுத்து இட வேண்டி இருந்தது. அவன் தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லி அதைப் படித்துக் காட்டும் படி வங்கி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.

திகைப்படைந்த அதிகாரி “எழுதப்படிக்கத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்ன ஆகியிருப்பீர்களோ” என்று சொன்னார்.

"எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளனாகவே இருந்திருப்பேன்” என்றான் அவன்.


கருத்து : தேவாலயப் பணி போன போது அவன் வாழ்க்கையில் எல்லாமே தகர்ந்து போய் எதிர்காலமே கேள்விக் குறியாக நின்றது. படிக்கத் துவங்கும் வயதோ, அதற்குரிய திறமைகளோ இல்லாத அந்த முதியவன் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்திருந்தால் அது ஆச்சரியமல்ல. தேவாலயப் பணி தவிர வேறு வேலை தெரியாத அவனுடைய அந்த நேரத்து நிலைமை பரிதாபகரமானது தான். ஆனால் சுருட்டு பிடிக்க நினைத்து அதை வாங்க கடை ஒன்றும் அப்பகுதியில் இல்லாத போது ’இந்த சின்ன விஷயத்தில் கூட என் விதி எனக்கு சதி செய்கிறதே. எல்லாம் என் நேரம்” என்று வருந்தி நிற்பதற்குப் பதிலாக அந்த சூழ்நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாக அவன் பயன்படுத்திக் கொண்டது அவனுடைய புத்திசாலித்தனம்.

ஆகவே அருமை வாடிக்கையாள நண்பர்களே,இது போன்ற சூழ்நிலைகள் பலருக்கு வரலாம். நல்லதாக, சௌகரியமான ஒரு வேலையில் பல வருடங்கள் வேலை செய்து அதிலேயே வாழப் பழகிய பின் எதிர்பாராமல் அந்த வேலையைப் பறி கொடுக்க நேரிடலாம். அப்படி ஒரு நிலை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத போது அது ஏற்படுத்தும் எதிர்காலப் பயம் சாதாரணமானதல்ல. நின்று கொண்டிருக்கும் தரையோடு எல்லாம் தகர்வது போலக் கூட சிலர் உணரக்கூடும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் சில உண்மைகளை நினைவு வைத்திருப்பது நல்லது.

உலகில் நாம் பிறந்திருப்பது ஒரு வேலையை மட்டுமே நம்பி அல்ல. "ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான் இறைவன்" என உறுதியுடன் வாழ்வோம்.

அறிவுக்கு அழகு:



-இன்பா

 
Follow @kadaitheru