Tuesday, September 14, 2010

சிந்து சமவெளியில் ஒரு "சாத்தான்" சாமி


மாமனார் - மருமகள் காதல், மருமகன் - மாமியார் காதல் போன்ற புரட்சிகரமான செய்திகளை(!) தனது படங்களில் சொல்லி,முதன்முதலில் புதுமை செய்தவர் கே.பாலசந்தர். எதிர்நீச்சல்,உன்னால் முடியும் தம்பி என்று சில அற்புதமான படங்களை தந்த பெரிய இயக்குனர்தான், என்றாலும் தமிழ் சினிமாவில் அறிவுஜீவித்தனம் என்று நினைத்துகொண்டு அவர் போட்டிருக்கும் குப்பைகளும் பல. கல்கி,பார்த்தாலே பரவசம் என்று அடுக்கிக்கொண்டுபோகலாம். இரண்டு பொண்டாட்டிகாரன் கதைகள் பண்ணுவதில் அவருக்கும்,பாலு மகேந்திராவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது என்று சொல்லலாம்.

லூசுத்தனமான சேஷ்டைகளுடன் கேணத்தனமான கதாபாத்திரங்கள் இடம்பெறும் காட்சிகள் ஏதாவது தொலைகாட்சியில் பாரிக்க நேரிட்டால், அது கே,பாலச்சந்தரின் படம் என்று அடித்து சொல்லலாம்.

ஒரு வழியாக கே.பி out of form ஆகி விட்டார் என்று பார்த்தால், உறவுகளை கொச்சை படுத்துவதில் அவரையே மிஞ்சிவிடும் அளவுக்கு விஸ்வருபம் எடுத்து நிற்கிறார் இயக்குனர் சாமி.

இயக்குனர் சாமியின் இரண்டாவது படமான "சிந்து சமவெளி"யின் கதை இதுதான். மனைவியை பிரிந்து பல வருடங்களுக்கு பின் ஊருக்கு வருகிறார் ஒரு ராணுவ வீரர்.அந்த சமயத்தில் அவர் மனைவி பாம்பு கடித்து இறந்துவிட, பதினேழே வயதான தன் மகனுக்கு,அவன் விரும்பிய பெண்ணை மணமுடிக்கிறார். நான்கு நாட்கள் வாழ்ந்துவிட்டு,புதுமனைவியை அப்பாவின் பொறுப்பில் விட்டுவிட்டு, படிப்பை தொடர வெளியூர் செல்கிறான் அவன். இந்த 'கேப்'பில் ராணுவ வீரருக்கும்,அவர் மகள் போல இருக்கும் மருமகளுக்கும் இடையே கள்ளஉறவு மற்றும் காதல் ஏற்படுவதாக கதை போகிறது.

ஒரு ரஷிய நாவலை,தமிழுக்கு அல்லது தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றதுபோல,ஜெயமோகன் நாவல் வடிவம் தந்து இருக்கிறார். பின்,அதை படமாக எடுத்திருக்கிறார் சாமி.இத்தனைக்கும்,படத்தில் ஹை லைட்டான பகுதி , கதாநாயகன் காதலித்து திருமணம் செய்கிறார்.உறவுகளோடு,காதலையும் வாரிஇருக்கிறார் சாமி.

"விபச்சார தொழில் செய்யுறவங்க, திருடர்கள், கொலைக்காரங்க கூட நிம்மிதியா இருக்கணும்னுதான் நினைப்பாங்க. அவங்களே அப்படி நினைக்கும் போது நான் நினைக்க மாட்டேனா? நான் எங்க போனாலும் உயிர் மாதிரி படம் பண்ணிக் கொடுங்கன்னுதான் கேட்கிறாங்க. இந்த தயாரிப்பாளர்கிட்ட கூட நான் நாலு கதைகள் சொன்னேன். அவரு தேர்ந்தெடுத்த கதைதான் இது. " என்று தெரிவித்து இருக்கிறார் சாமி.

நான் ஒன்றும் அவர் கூறும் கலச்சார காவலன் என்று இதை எழுதவில்லை.படம் பார்த்ததும்,எனக்குள் எழுந்த கேள்விகள் சில.

1.எல்லாரும் பே(ஏ)சும் அளவுக்கு அதில் என்னதான் இருக்கிறது என்று ஒரு சாமானிய ரசிகனின் ஆவலே(??) என்னையும் படம் பார்க்க தூண்டியது என்று நினைக்கிறேன்.இதைபோலேவே, இப்படம் பற்றிய சர்ச்சையால் தூண்டப்பட்டு படம்பார்த்தவர்களே அதிகமாக இருந்திருக்கும் இல்லையா?.

2.உலகத்தில்,நம் சமுகத்தில் நடக்காததையா காட்டுகிறேன் என்று வேறு கூறுகிறார். ஏன் நல்ல விஷயங்கள் எதுவுமே உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா??

3.இந்த படம் பற்றிய சர்ச்சையை, முதலில் ஆரம்பித்துவைத்தது சன் டிவிதான்.

"உங்க கார்ல வீசப்பட்ட கல் ஒரு பப்ளிசிட்டிக்காகதான்னு போலீஸ் சொல்லுதே? " என்ற கேள்விக்கு சாமி தந்த பதில்.

"அப்படி ஒரு கேவலமான வேலைய நான் செய்ய மாட்டேன். சன் நியூஸ்ல அப்படி சொல்லப்பட்டதும் நான் அவங்களுக்கே போன் பண்ணி கேட்டேன். போலீஸ்லதான் சொன்னாங்கன்னு அவங்க பதில் சொன்னாங்க. போலீஸ்ல கேட்டப்போ நாங்க சொல்லல என்றார்கள். பிறகு நான் கொடுத்த விளக்கத்தையும் சன் டிவியில் ஒளிபரப்பினாங்க. என் வீட்ல கல் எறியுற வரைக்கு வர்ற போன் கால்களை குறிச்சு வச்சுக்கணும்னு நினைக்கலே. நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிய பிறகு இப்போ எந்த மிரட்டலும் வர்றதில்லை"

இதில் எது நிஜம் எது பொய்?
சன் டிவிக்கு வேறு உருப்படியான செய்திகள் கிடைக்கவில்லை என்றால் இப்பத்தான் வெறும் வாயில் அவல் மெல்வார்களா?.

4.இப்படத்தை தனது மனைவி மற்றும் தந்தையோடு பார்ப்பாரா இயக்குனர் சாமி?.அப்போது அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

5.இது போன்ற படங்கள், 'அது' மாதரி எண்ணங்கள் இல்லாதவரையும் 'அது' போல யோசிக்க தூண்டும் என்பது எத்தனை சதவிதம் உண்மை??

"சாத்தான்" பாணி கதைகள் செய்யும் "சாமி", தனது கதைகளால் பேசப்படுகிறாரோ இல்லையோ..ஒவ்வொரு முறையும் தனது படங்களுக்கு உருவாக்கப்பட்ட அல்லது உருவாகும் சர்ச்சைகள் மூலம் 'பூதா'கரமாக தமிழ் சினிமாவில் பேசப்படுவார் என்று தோன்றுகிறது.


-இன்பா

திரைகடல் ஓடியவர்கள்..


ஷார்ஜாவில் ஒரு தொழிற்ச்சாலையில் நான் பணியாற்றிய சமயத்தில்,அங்கு புதிதாக வேலைக்கு வந்த ஒரு தொழிலாளி, வேலைக்கு வாராமல் தீடிரென்று நின்று விட்டார். அவரை அழைத்து விசாரித்ததில், தனது இரண்டு வயது குழந்தையின் நினைவு வந்து விட்டதாக கூறி கதறி அழுதார்.

இப்படி, வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கானோர் பிரிவுதுயரிலும்,ஏக்கங்களிலும் தங்களின் வாழ்வை தொலைத்துவருகின்றனர்.அதுவும், லேபர் வேலையில் இருப்பவர்களின் வாழ்வு மிகவும் கொடுமை.நாள்தோறும் பன்னிரண்டு மணி நேர வேலை மற்றும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு செல்லமுடியும்.

சரி.ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் நிலை எப்படி இருக்கிறது. இது தொடர்பாக நான் படித்த ஒரு சர்வே இங்கே தந்து இருக்கிறேன்.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.

"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.

யாதும் ஊரே,யாவரும் கேளிர் என்று சொன்னாலும், தமிழ்நாட்டில் இருந்து போய்,வட மாநிலங்களில் வேலை செய்யும் தமிழர்களும் அல்லது வட மாநில நகரங்களில் செட்டில் ஆகிவிட்டவர்களுமே மன திருப்தியுடன் இல்லை என்கிறார் எனது நண்பர்.

வெளிநாடுகளில்,எந்த வேலையில் இருந்தாலும் குடும்பத்தோடு இருந்தாலும் அவர்கள் மன நிம்மதியோடு இல்லை.வருமானம் குறைந்து இருந்தாலும், கிடைத்த வருவாயில், உறவுகளும் நட்பும் சூழ,சொந்த ஊரில் வாழ்வதே நிம்மதியான வாழ்க்கை என்று நிரூபிக்கிறது இந்த கருத்துகணிப்பு.

திரைகடல் ஓடி திரவியம் தேடினாலும், சொந்த மண்ணுக்கு வந்து சேர்வதே அயல்நாடு வாழ்மக்களின் அன்றாட பிராத்தனை.

- இன்பா

Sunday, September 12, 2010

எந்திரன் - அமரர் சுஜாதாவின் திருவடிகளில்...


விண்வெளிக்கு அனுப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்து விடுகிறது. நாட்டுக்கு சேவை செய்யும் தன்னற ஆர்வத்துடன், தன் மனைவியை பிரிந்து,அந்த பழுதை சரிசெய்வதற்காக விண்ணுக்கு செல்கிறான் இளம் விஞ்ஞானி ஒருவன். செயற்கைகோளின் பழுதை வெற்றிகரமாக சரிசெய்துவிடுகிறான். அவ்வேளையில்,அவன் சென்ற விண்கலம் செயல் இழந்து விடுகிறது. அவனை காப்பாற்ற வேண்டுமானால், கோடிகளை செலவு செய்து, ஒரு விண்கலத்தை அனுப்பவேண்டும். ஆனால், அரசு அவனை தியாகி என்று அறிவித்து, கைவிட்டுவிடுகிறது.

நான் பள்ளி நாட்களில் படித்த என்னால் இன்றும் மறக்க முடியாத ஒரு விஞ்ஞான சிறுகதையின் கருதான் மேலே நான் குறிப்பிட்டு இருப்பது. அதை எழுதியவர் சாட்சாத் சுஜாதா அவர்கள்தான்.

சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "என் இனிய இயந்தரா" மூலம் நமது கிராமப்புறங்களில் கூட கம்ப்யூட்டர், ரோபோ போன்ற வார்த்தைகளை கொண்டு சேர்த்தார் சுஜாதா. அதில் வரும், ஜீனோ என்கிற ரோபோ நாய்க்குட்டி பல சிறுவர்களின் மனசுக்குள் குடிகொண்டதை மறக்க இயலுமா??

சைவ தமிழ்,சமய தமிழ் என்பது போல விஞ்ஞான தமிழ் என்று ஒரு புதிய பரிணாமத்தை தனது எழுத்துக்களால் கொண்டுவந்தவர் சுஜாதா.

எந்திரன் - ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழின் முதல் சயின்ஸ் பிக்க்ஷன் படமாக வருவதில், சுஜாதாவின் பங்கு நாம் அறிந்ததே. "மூன்று முறை நாங்கள் இந்த கதை பற்றி விவாதித்து இருக்கிறோம்.அவர் மறையும் முன்பாகவே ஸ்கிரிப்ட் முழுவதும் தயாராகிவிட்டது" என்று ஒரு பேட்டியில் சொன்னார் இயக்குனர் ஷங்கர்.

சுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த பரிச்சயமே ஷங்கர் இன்று இந்தியாவின் ஹைடெக் இயக்குனர் என்று உருவாக ஒரு காரணம்.

இந்தியன் படத்தின் இறுதிகாட்சி. லஞ்சம் வாங்கியதற்காக தனது சொந்த மகனையே கொள்ள துடிக்கிறார் இந்தியன் கமல்.

"அவனுக்காக மீசையை இழக்க துணிந்த சேனாதிபதி இன்னைக்கு அவனையே இழக்க தயாராகிட்டான்" என்று கமல் சொல்லும்போது, "புத்திக்கு தெரியுது.ஆனா, மனசுக்கு தெரியலையே" என்று சுகன்யா அவரை தடுக்கிறார். அப்போது கமல் சொல்லும் பதில், "எனக்கு புத்தி,மனசு எல்லாம் ஒண்ணுதான்".

மிகசுருக்கமான வசனங்களில் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்திவிடுவதில் சுஜாதாவுக்கு நிகர் அவரே.

"என் இனிய இயந்திரா" நாவலில் வரும் ஹோலோக்ராம் என்கிற கான்செப்ட்டைதான் தனது "ஜீன்ஸ்" படத்தில் வரும் "கண்ணோடு காண்பதெல்லாம்" பாடலின் கான்செப்டாக பயன்படுத்தினார் ஷங்கர். ஒரு எந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிழல் உருவம் நாட்டையே ஆட்சி செய்வதாக வரும் இந்த நாவலே "எந்திரன்" கதை உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.

"முதல்வன்" படத்தில் பஸ் ஊழியர் - மாணவர்கள் மோதல்,அதை தொடர்ந்து வரும் ட்ராபிக் ஜாம் காட்சிகள் இவை அனைத்தையும் சுஜாதா அவர்கள் முதலில் சிறுகதையாக எழுதிகொடுக்க, பின்புதான் அதை படமாக்கினார் ஷங்கர். முதல்வர் ரகுவரனை, அர்ஜுன் பேட்டிகாணும் படத்தின் ஹைலைட் காட்சிக்கு சுஜாதாவை விட வேறு யாரும் இத்தனை சிறப்பாக எழுதமுடியுமா?

பாய்ஸ் மற்றும் அந்நியன் போன்ற ஷங்கரின் ஏனைய படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம். "சிவாஜி"யில் ரஜினிகாந்துக்கு ஏற்றார்போல, "பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல" போன்ற வசனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கும் பேசப்படுபவை.

"நாங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்யும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான விஷுவல்தன்மையை, மிக சாதாரணமாக தனது எழுத்துக்களில் கொண்டுவந்து விடுகிறார் சுஜாதா" என்கிறார் ஷங்கர்.

கமல்ஹாசன் தனது முதல் இயக்கத்தில் வெளிவந்த "ஹே ராம்" படத்தை,அந்த தருணத்தில் மறைந்த திரு.அனந்து அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.

அதுபோலவே, தமிழின் முதல் விஞ்ஞான கதைகளின் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவர் முக்கிய பங்களிப்பு செய்து இருக்கும், விஞ்ஞான படமான "எந்திரன்" அவருக்கு சமர்ப்பிக்க படவேண்டும் என்பதே என்னை போன்ற சுஜாதா வாசகர்களின் தாழ்மையான வேண்டுகோள்.

என்னை போன்ற சாமான்யருக்கு எல்லாம் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையே அவரது கதைகளால் அல்லவா பரிச்சயம் ஆனது?

"எந்திரன்" படைப்பை அமரர் சுஜாதாவுக்கு சமர்பிப்பாரா இயக்குனர் ஷங்கர்??

-இன்பா

Saturday, September 11, 2010

தமிழக அரசியலில் ராஜராஜ சோழன்


தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன் என்று பள்ளியில் படித்ததோடு மாணவர்களுக்கு வேறு எதுவும் கற்பிக்க படவில்லை.அதன் பின்னர், எல்லாரும் அறிய விரும்புவது அந்த கோவிலின் அருமை,பெருமைகளை மட்டுமே. ராஜராஜ சோழனை பற்றி அல்ல.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால், நான் அந்த கோவிலுக்கு சென்று இருந்த போது,கருவறைக்கு மிகவும் அருகில் சென்றும், பிரகதீச்வரை தரிசனம் செய்ய இயலவில்லை. அந்த அளவுக்கு இருட்டு. நடிகர் எஸ்.வி. சேகர் கூட, தனது ஒரு நாடகத்தில் ஒளிந்து கொள்ள சரியான இடம் தஞ்சை கோவில் கருவறை என்று கிண்டல் செய்து இருக்கறார்.

ஆனால்,இன்று பெரிய கோவிலின் நிலை வேறு. கூட்டம் நிறைந்த,நன்கு பராமரிக்கபட்ட தஞ்சை மாவட்ட மக்கள் மட்டும் அல்லது சுற்றுலா பயணிகளின் முக்கியமான இடமாகி விட்டது அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம். கோவிலின் அறங்காவலராக இருக்கும் மராத்திய வம்சத்தை சேர்ந்த சரபோஜி மன்னரின் குடும்பத்திற்கும்,பெரிய கோவில் நிர்வாக கமிட்டிக்கும் இந்த தருணத்தில் நன்றிகள் பல நாம் தெரிவிக்க வேண்டும். ஆனால்,அதற்க்கு பதில், சர்ச்சைகள் முளைத்த வண்ணம் இருக்கின்றன.

சர்ச்சைகள் கோவிலை பற்றி அல்ல. அதை கட்டிய ராஜராஜ சோழன் பற்றி.

முதல் சர்ச்சை:

இதை ஆரம்பித்து வைத்தவர் இடதுசாரி கவிஞர் திரு.இன்குலாப் அவர்கள். சுமார் 40 வருடங்களுக்கு முன்னால், ராஜராஜ சோழன் சிலையை கோவிலின் முகப்பில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தபோது அவர் பின்வரும் ஒரு கவிதையை எழுதினார்.

ராஜராஜன் சிலைக்காக வருந்துகிறார்.
ராஜராஜன் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகும் முன்னர் ஜிவித்திருந்த இம்மன்னன்
எதை செய்து கிழித்து விட்டானாம்?
ஈழம் கொண்டானாம்...
சாவகம் வென்றானம்...

காலனி ஆதிக்க தொழுநோயின் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?
கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்.

பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்ப விளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்...

என்று காட்டமாக எழுதினார் இன்குலாப்.

கோவில் கட்டுவதற்கு மக்களை, ஏழைகளை அடிமைகளாக பயன்படுத்தியவர் ராஜராஜ சோழன்.அவருக்கு சிலை மற்றும் மரியாதையை எதற்கு என்பதுதான் கவிஞர் இன்குலாப் மற்றும் அவர் சார்ந்த இடது சாரிகளின் வாதம்.

"இன்று ராஜராஜ சோழனை முன்வைத்து விழா நடத்துவது தேவை இல்லாத ஒன்று. மன்னர் கால பெருமைகளை ஏற்க வைப்பதன் மூலம் 'ராஜராஜன் - கலைஞர்','ராஜேந்திரன் - மு.க.அழகிரி' , 'இளவரசர் - ஸ்டாலின்' என்று வாரிசுகள் ஆட்சி தொடர இந்த சிலை திறப்பை கலைஞர் பயன்படுத்தி கொள்கிறார்" என்றும் விமர்சிக்கிறார் இன்குலாப்.

இரண்டாம் சர்ச்சை:

இன்குலாபின் வாதத்தையாவது ஒரு விதத்தில் ஏற்று கொள்ளலாம் போலிருக்கிறது. தென் மாவட்டங்களில் இருக்கும் இரு பெரும் சாதிக்காரர்கள் ராஜராஜன் தங்களின் சாதியை சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடி அவ்வபோது போராட்டங்கள் வேறு நடத்தி வருகிறார்கள். முக்குலத்து அமைப்புகள் ராஜராஜன் தேவர் சமுகத்தை சேர்ந்தவர் என்றும், தேவேந்திர குல வேளாளர்கள் ராஜராஜன் தங்கள் இனத்தை சேர்ந்தவர் என்றும் மோதி வருகிறார்கள்.

நம் தமிழர்களின் வரலாற்று உணர்வு எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டி 1000 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அதை கட்டிய ராஜராஜ சோழனுக்கு நம் தமிழக அரசு விழா எடுத்தது சரியா? ராஜராஜனுக்கும், பெரிய கோவிலுக்கும் உள்ளே தொடர்புகள் என்ன?

பின்வரும் தனது 'தஞ்சை பெரிய கோவிலும் ராஜராஜனும்' என்ற கட்டுரையில் விளக்குகிறார் கி.ஸ்ரீதரன் அவர்கள்.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு 1,000 வருடங்கள் ஆகின்றன. ஒப்பற்ற இக்கோவிலுக்கு மன்னனும், அவனுடைய தேவியர்களும், உறவினர்களும், அதிகாரிகளும், மற்றவர்களும் தானம் அளித்து மகிழ்ந்தனர்.

இக்கோவில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்டதையும், கோவிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகளின் விவரங்கள் இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. திருக்கோவிலில் வழிபாட்டிற்காக அளிக்கப்பட்ட செப்புத் திருமேனிகள், நகைகள் மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றின் உயரம், எடை போன்ற விவரங்கள் மிகவும் துல்லியமாக குறிக்கப்பட்டுள்ளது சிறப்பானது.

இறைவன் வீதி உலா வரும் பொழுது ஒலிப்பதற்காக பொன்னாலான காளங்கள் (பாத்திரங்கள் ) அளிக்கப்பட்டன. அவற்றில் "சிவபாத சேகரன்', "ஸ்ரீராஜ ராஜன்' எனப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கோவிலில் வழிபாட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களிலும் இதே போன்று பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை அறிய முடிகிறது. இக்கோவிலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த (ஸ்ரீகார்யம்) பொய்கைநாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான் ராஜராஜ சோழன், அவனது தேவி லோகமகா தேவி ஆகியோரது பிரதிமத்தை செய்து அளித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இக்கோவிலில் காணப்படும் ஓவியங்களிலும் ராஜராஜ சோழனின் தோற்றத்தைக்கண்டு மகிழலாம்.

மேலும், திருவிசலூர், திருநாரையூர், விளநகர், கோவிந்த புத்தூர் போன்ற கோவில்களிலும் ராஜராஜ சோழனின் வடிவத்தை சிற்பங்களாகக் காண முடிகிறது.பண்டைநாளில்கோவிலை எழுப்பிய மன்னர்கள், சிற்பிகள் போன்றவர்களின் சிற்ப வடிவங்களை ஒரு சில கோவில்களில் காண முடிகிறது. உதாரணமாக, திண்டிவனம் - மரக்காணம் சாலையில் அமைந்துள்ள உலகாபுரம் என்ற ஊரில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் தலைமை தேவியான தந்திசக்தி விடங்கி என்னும் உலோகமாதேவி பெயரால் இவ்வூர் உலோகமாதேவி புரம் எனக் குறிக்கப்படுகிறது. இன்று அது மருவி உலகாபுரம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் அம்பலவன் கண்டராதித்தனார் என்பவரால் கட்டப்பட்டதைக் கல்வெட்டு குறிக்கிறது. கோவிலின் கருவறைக்கு அருகில் சுவரில் கோவிலை எழுப்பிய கண்டாரதித்தனார் சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை சிற்ப வடிவிலே காண முடிகிறது. ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது.

இதேபோன்று தஞ்சை பெரிய கோவிலிலும் தெற்குபுற அணுக்கன் நுழைவு வாயிலுக்கு (கருவறை அருகில்) அருகே உள்ள சக்கரதான மூர்த்தி சிற்ப வடிவத்திற்கு மேலே மகரதோரணத்தின் நடுவே ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானை வழிபடும் உருவத்தினை காணலாம்.


இவ்வடிவம் ராஜராஜ சோழனது உருவம் என அனைவராலும் கருத முடிகிறது. ஏனெனில், தனது குலநாயகமான ஆடவல்லான் வடிவத்திற்கு இக்கோவிலில் சிறப்பிடம் தந்து மகிழ்ந்திருக்கின்றான் ராஜராஜ சோழன். இக்கோவிலில் பயன்படுத்தப்பட்ட மரக்கால், துலாக்கோல் (தராசு), எடைக்கல் போன்றவைகளுக்கும், "ஆடவல்லான்' என்றே பெயரிட்டு போற்றியிருக்கின்றான் ராஜராஜ சோழன். எனவே, கருவறை தெற்கு தூணில் காணப்படும் சிற்பத்தினை ராஜராஜ சோழன் வடிவமாக கொள்வதில் தவறில்லை.


தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இவ்வேளையில், இக்கோவிலில் இருந்ததாக குறிப்பிடப்படும் ராஜராஜ சோழன் பிரதிமத்தை தமிழகம் பெறுவதற்கு, அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில் கலை வரலாற்றில் சிறப்பான இடம் பெற்று விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னனை விரைவில் கண்டு மகிழ்ந்து போற்றுவோம்! என்று வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறார் திரு.ஸ்ரீதரன்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் நம் தமிழனின் கலை திறமைக்கு எடுத்துக்காட்டாக இன்று விளங்கிறது.

ஒரு இரவு வேளையில், விளக்குகள் மின்னும் தருணத்தில் தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை சற்று தொலைவில் நின்றுகொண்டு உற்று நோக்குங்கள்.அப்போது உங்கள் மனதுக்குள் நிகழும், ஆத்மார்த்தமாக தோன்றும் உணர்வு உங்களுக்கு என்ன சொல்லித்தருகிறது??





-இன்பா

Sunday, August 8, 2010

தமிழ் சினிமாவும் பாட்டுப் புத்தகங்களும்


எனது பள்ளி நாட்களில் நான் விரும்பி வாசிப்பது சினிமா பாட்டு புத்தகங்களைத்தான். அதுவும், டி.ராஜேந்தர் படங்களின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 'மைதிலி என்னை காதலி' . மேலும், வைதேகி காத்திருந்தாள்,இதய கோவில் போன்ற படங்களின் பாட்டு புத்தகங்களையும் நான் அடிக்கடி படிக்கும் வழக்கம் கொண்டு இருந்தேன்.

இன்றும் பள்ளியில் படிக்கும் பெண்கள் விஜய் மற்றும் சூர்யா நடித்த படங்களின் பாட்டு புத்தகங்களை சாலையோர கடைகளில் வாங்குவதை கண்டு இருக்கறேன்.

தியடோர் பாஸ்கரன் , அவர்கள் சினிமா பாட்டு புத்தகங்கள் பற்றி ஆற்றிய ஒரு கருத்துரை இங்கே...

‘சினிமாவின் எந்தப் பரிமாணத்தைப் பற்றிப் பேச முயன்றாலும் அது நம்மை சினிமா அழகியலுக்கு இட்டுச் செல்லும். அதாவது சினிமா எனும் ஊடகத்தின் இயல்புகள், சாத்தியக்கூறுகள், நியதிகள், கோட்பாடுகள், தனித்துவங்கள் இவை கண்டிப்பாகப் பேசப்பட வேண்டும். அந்தப் பகைப்புலத்தில்தான் நாம் சினிமாவின் வெவ்வேறு கூறுகளையும் புரிந்துகொள்ள முடியும். சினிமாவின் அடிப்படை இயல்பு என்ன? காட்சிப் படிமங்கள். இவை பற்றிப் பேச வேண்டும்.

தமிழ் பேசும்படம் தோன்றியது முதல் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாகத் தமிழ் சினிமாக் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக சினிமா பாட்டுப் புத்தகம் நிலைத்திருந்தது. எந்த அரங்குகளில் தமிழ்ப் படம் திரையிடப்பட்டதோ அங்கே இந்தச் சிறு அச்சுப் பிரதியும் தனது இருப்பை அறிமுகப்படுத்திக்கொண்டது. அரங்குகளில் இடை வேளையில் ‘பாட்டுப் புஸ்தகேம்’ என்ற அறைகூவல் கேட்டது. முதல் தமிழ் பேசும்படமான காளிதாஸ் (1931) திரையிடப்பட்டபோது அங்கே இந்தச் சிறு வெளியீடும் தோன்றிவிட்டது. கடைசியாக நான் பார்த்த பாட்டுப் புத்தகம் மணிரத்தினத்தின் திருடா . . . திருடா (1992) படத்தின் ஒலிப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த பாட்டுப் புத்தகம்தான்.


தொடக்க காலத் தமிழ் சினிமாவின் பல கூறுகள் அதற்கு முந்தைய நிகழ் கலைகள் சிலவற்றிலிருந்து உள் வாங்கிக்கொள்ளப்பட்டவை. பாடல்களைச் சிறு புத்தகங்களாகப் பதிப்பிக்கும் மரபு கிராமபோன் தட்டுகள் வெளியிடப்பட்ட காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இது கிராம போன் சார்ந்த ஒரு வணிக முயற்சியாக அமைந்திருந்தது. ஆனால் சினிமாப் பாட்டுப் புத்தகத்தின் முன்னோடி சென்னையிலிருந்து வெளியான குஜிலிக்கடை பாட்டுப் புத்தகங்கள்தான்.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழகத்தில் நாட்டுப்பாடல்கள், கதைப்பாடல்கள் அச்சிடப்பட்டு எட்டு அல்லது பத்துப் பக்கங்கள் கொண்ட சிறு புத்தகங்களாகக் காலணா அரையணா வெளியீடுகளாக வந்தன. (காண்க: ஆ.இரா. வேங்கடாசலபதியின் முச்சந்தி இலக்கியம்) சைனா பஜாருக்கு அருகில் இருந்த ‘தீவிங் பஜார்’ என்றறியப்பட்ட ஒரு தெருவில்தான் இந்த அச்சகங்கள் இருந்தன. மு. மாதவய்யா அவர்கள்தான் அன்று முனிசிபல் கமிஷனராக இருந்த தனது நண்பர் மலோனி துரைக்கு எழுதி அத்தெருவின் பெயரைக் குஜிலித்தெரு என்று மாற்றச் செய்தார். அதன் பின்னர் இந்தப் பாட்டுப் புத்தகங்களுக்குக் ‘குஜிலிக்கடை புத்தகங்கள்’ என்று பெயர். இந்த வெளியீடுகளின் ஒரு புது அவதாரமே சினிமாப் பாட்டுப் புத்தகம்.

முதல் தமிழ் பேசும்படமான காளிதாஸ் பாட்டுப் புத்தகம் விலை காலணாதான். Kalidas - Song and story book என்று ஆங்கிலத்திலும் அட்டையில் தலைப்பு இருந்தது. இந்தப் படத்தில் ஏறக்குறைய ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதனால்தான் இந்தப் படத்தை விமர்சித்த கல்கி, ‘இது தமிழ் டாக்கி அல்ல . . . தமிழ் பாட்டி’ என்று எழுதினார். அறுபதுகள்வரை தயாரிப்பு நிறுவனங்களே பாட்டுப் புத்தகங்களையும் அச்சிட்டு வெளியிட்டன. படத்தை உருவாக்கியவர்கள் பட்டியல், கதைச்சுருக்கம், பின்னர் பாடல்கள், விளம்பரங்கள் என ஒரு புத்தகத்தின் உள்ளடக்கம் அமைந்திருந்தது. பாடலை எழுதியவர், பாடியவர்கள், இசை அமைத்தவர் போன்ற பாடல் சம்பந்தப்பட்ட பல விவரங்களும் தரப்பட்டன. சில படங்களின் பாட்டுப் புத்தகங்களில் பாட்டு வரும் காட்சியும் விவரிக்கப்பட்டிருந்தது. ‘கணவன் இன்றாவது வரமாட்டாரா என்று கல்யாணி கடவுளைப் பிரார்த்திக்கின்றாள்.’ என்பது போல. அல்லது ‘ரேடியோ பாட்டு’ என்றிருக்கும்.

படங்களுக்கு விளம்பரமாகவும் இயங்கின இந்தப் புத்தகங்கள். சில வெளியீடுகள் கண்ணைக்கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு பாட்டுப் புத்தகம் இதய வடிவில் இருந்தது. மற்றொன்று ஒரு அம்பு வடிவில் வந்தது. பளபளக்கும் ஆர்ட் காகிதத்தில் பல நிலைப்படங்களுடன் பாட்டுப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. சில பதிப்புகளில் பல விளம்பரங்களும் இடம்பெற்றிருந்தன. அந்தப் படத்தின் பாடல்கள் கொண்ட கிராமபோன் தட்டுகளின் விளம்பரம். அந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படங்கள், அந்தப் பட வினியோகஸ்தர் வெளியிடும் படத்தின் விளம்பரம் இவையும் இப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. சில சமயம் இது ஒரு இந்திப் படத்தின் விளம்பரமாகவும் இருக்கலாம். சரஸ்வதி ஸ்டோர்ஸ் தனது கிராமபோன் தட்டுகளை, உரிய எண்களுடன் இப்புத்தகங்களில் விளம்பரப்படுத்தியது. சினிமாவிற்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத தேயிலை, ஆடைகள் சார்ந்த விளம்பரங்களையும் சில சமயம் காண முடிகின்றது.

சில பாட்டுப் புத்தகங்களில் கதைச்சுருக்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தது. இந்தப் பகுதி சராசரியாக ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் நீண்டிருந்தன. துக்காராம் படப் பாட்டுப் புத்தகத்தில் கதைச் சுருக்கம் 6 பக்கங்கள் இருந்தது. திகம்பரசாமியார் என்ற திரைப் படத்தின் பாட்டுப் புத்தகத்தில் கதைச்சுருக்கத்தின் முடிவில் சில கேள்விகள். ‘வடிவாம்பாளை தன் தம்பிக்கு மணமுடிக்க சட்டநாதன் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார்? திகம்பரசாமியார் யார்? திருட்டுப் போன குழந்தை திரும்பக் கிடைத்ததா? அலங்காரத்தின் கதி என்ன?’ இவற்றிற்கு விடை வெள்ளித் திரையில் காண்க. . . சில சமயம் ஒரு படத்தின் முக்கியக் கருத்து கதைச்சுருக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

வானரதம் என்ற படத்தின் பாட்டுப் புத்தகத்தில் கதைச்சுருக்கத்தின் கடைசி வரி ‘அதிகாரத்தால் அன்பைப் பெற முயற்சி செய்தாள் ஒரு ராணி. முடிந்ததா?’ 1000 தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி படப் பாட்டுப் புத்தகத்தில் கதைச்சுருக்கத்தின் முடிவில் உள்ள பல கேள்விகளில் ஒன்று ‘சுதாமதி என்ன கதி?’

கர்நாடக இசையை சாமான்ய மக்களிடையே பரப்பியதில் திரைப் படங்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. ஒரு பாட்டு மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு, 78 Rpm கிராபோன் தட்டின் ஓட்ட நேரத்திற்கு ஏற்ப, குறைத்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது. செவ்வியல் இசைக்கு வெகுதூரத்தில் இருந்த மக்கள் இந்தப் பாடல்களைக் கேட்க, பாட ஆரம்பித்தனர். இந்த ஜனநாயக இசை இயக்கத்திற்குப் பாட்டுப் புத்தகம் ஊன்றுகோலாக அமைந்தது. பாட்டைப் பாடியவர், எழுதியவர் இவர்களுடைய பெயர்களுடன் பாட்டின் ராகம், தாளம் இவை குறிப்பிடப்பட்டிருக்கும்; ராகம்: பிலஹரி தாளம்; திஸ்ரம் என்பது போல. பல்லவி, அனுபல்லவி சரணம் எனப் பகுதிகள்படி பாடல்கள் அச்சிடப்பட்டிருந்தன. தமிழ் பேசும்படத்தின் ஆரம்ப ஆண்டுகளில் பாட்டை எழுதியவரே இசையையும் அமைத்தார் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். பாஸ்கரதாஸ், பாபநாசம் சிவன் போல. ஒருவர் மட்டுமே ஒரு படம் முழுவதிற்கும் இசை அமைக்கும் வழக்கம் நிலைகொண்டது நாற்பதுகளின் பிற்பாதியில்தான்.

சமகாலப் பத்திரிகைகளைக் காணும்போது நமது சினிமா கலாச்சாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, மக்களுடன் நெருங்கிய ஒரு கலாச்சாரக்கூறாகப் பாட்டுப் புத்தகம் இருந்திருக்கின்றது என்பதைக் காண முடிகின்றது. கதைச்சுருக்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருப்பதற்குப் பதிலாக, தமிழிலும் தெலுங்கிலும் இருக்க வேண்டுமென ஒரு வாசகர் எழுதியிருக்கின்றார். பாடல்களின் ராகங்களையும் மெட்டுகளையும் சில தயாரிப்பாளர்கள் அச்சிடுவதில்லை என்று மற்றொரு வாசகர் குறைப்பட்டுக்கொள்கின்றார்.

திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் பட்டியல் முழுமையாக இருப்பதில்லை என்று ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்தப் புத்தகங்களை வாங்கி பைன்ட் செய்து பாதுகாத்து வைப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஒரு பழக்கமாக இருந்திருக்கின்றது. திருநெல்வேலி சந்திப்பில், ஒரு சாலையோர பழைய புத்தகக்கடையில் இரண்டு பைன்ட் செய்த இத்தகைய சேகரிப்புகள் எனக்குக் கிடைத்தன.

நான் சில படங்களின் பாட்டுப் புத்தகத்தில் கதைச்சுருக்கத்தைப் படித்துவிட்டுப் படத்தைப் பார்த்தேன். எடுத்துக்காட்டாக 1000 தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி. அப்போதுதான் கதைச்சுருக்கத்தின் மகிமையை நான் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தக் கதைச்சுருக்கத்தைப் படித்திருக்கா விட்டால் அந்தப் படத்தின் கதை புரிந்திருக்காது. ஆரம்பகால பேசும் படங்களைப் பார்க்கும்போது காட்சிப் படிமங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளர்த்துக்கொள்ளப்படவில்லை என்று படுகின்றது. ஆகவே, எழுத்தறிவு பெற்றவர்கள் குறைவாக இருந்தாலும் படம் பார்க்கும் அனுபவத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்தக் கதைச் சுருக்கம் அமைந்திருந்தது.

காட்சிப் படிமங்கள் மூலம் கதைசொல்லும் திறனை நாம் ஏன் வளர்த்துக்கொள்ளவில்லை? 1916இல் கீசகவதம் என்னும் படத்தில் தொடங்கி 18 ஆண்டுகளாக இயங்கிய தமிழ் மௌனப்படக்காலத்தில் கோவலன் கண்ணகி, நல்லதங்காள் போன்ற மக்களுக்குத் தெரிந்த கதைகளே படமாக்கப்பட்டன. ஆகவே, கதையைப் பிம்பங்கள் மூலம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை. சீதைக்கு முன் தோன்றும் மான், மாரீசனின் மாயத்தோற்றமேயென்பதும் அதைத் தொடர்ந்து சீதை போவாள் என்பது படம் பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே பிம்பங்கள் மூலம் கதை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பல இயக்குநர்களுக்கு அன்று எழவில்லை. அதனால் சினிமா இலக்கணம், மொழி இங்கு வளரவில்லை.

புதிய கதைகளைப் படமாக்க ஆரம்பித்தபின், பிம்பங்கள் மூலம் கதை சொல்ல இயலாமையை நம் இயக்குநர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்.? வார்த்தைகளால் கதையைச் சொல்கிறார்கள் ஒரு கதாபாத்திரத்தைப் பேசவைத்துக் கதையைச் சொல்லிவிடுகின்றார்கள். இந்தப் பழக்கத்தை அண்மையில் வந்த சந்திரமுகி படத்தில்கூடக் காணலாம். படத்தின் இறுதியில் கதையின் முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சியில் கதாநாயகன் ஒரு நீண்ட பிரசங்கமே செய்து கதையைப் பாத்திரப்பேச்சால் விளக்கும் குறுக்கு வழியை இயக்குநர் கையாள்கின்றார்.

சுதந்திரப் போராட்ட காலத்திலும், பின்னர் திராவிட இயக்க காலத்திலும், இடதுசாரியினராலும் தங்கள் கருத்தை மக்களிடையே பரப்பத் திரைப்படப் பாடல்களும் பாட்டுப் புத்தகங்களும் பயன்படுத்தப்பட்டன. மாத்ருபூமி என்னும் படத்தில் இடம்பெற்ற ‘நமது ஜென்ம பூமி நமது ஜென்ம பூமி’ என்ற நாட்டுப்பற்று சார்ந்த பாடல் பள்ளிகளில் பாடப்பட்டது. சொர்க்கவாசல் படத்தில் வந்த உடுமலை நாராயண கவி எழுதிய ‘எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம்’ பாடல் திராவிட இயக்கத்தின் நாத்திகக் கொள் கையைப் பறைசாற்றியது. உடுமலை கவிராயர் எண்பதுகள்வரை தமிழ்த் திரையுலகில் திராவிட இயக்கத்தின் குரலாக இயங்கினார். பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பொது உடமைக் கருத்துகளைக் ‘காடுவிளஞ் சென்ன மச்சான் நமக்குக் கையும் காலுந்தானே மிச்சம்?’ போன்ற தன் பாடல்கள் மூலம் பரப்பினார்.

தமிழ்நாட்டில் கல்விப்புலத்தில் அண்மையில் திரையியல் ஆய்வு அதிகரித்துள்ளது. திரைப்பட வரலாறு போன்ற துறைகளில் இன்று ஒரு ஆர்வத்தை நாம் காண முடிகின்றது. ஆனால் முதல் இருபது ஆண்டுகளில் வந்த தமிழ் பேசும் படங்களில் வெகுசிலவே எஞ்சியுள்ளன. நாம் பார்ப்பதற்குப் படங்கள் கிடைக்காத நிலையில் அந்த ஆண்டுகளின் திரைப்பட வரலாறு பற்றி நமக்கிருக்கும் ஒரு முக்கிய விவரக் களஞ்சியம் பாட்டுப் புத்தகமே. அச்சுப் பிரதிகளை ஆதாரமாகவைத்துத் திரைப்பட வரலாறு எழுதுவதில் உள்ள சிக்கல்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக நந்தனார் படத்தைப் பற்றி அறிந்துகொள்ள பாட்டுப் புத்தகத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், படம் தலித் மேம்பாடு பற்றியதாகத் தோன்றும். ஆனால் படத்தைத் திரையிட்டுப் பார்த்தீர்களேயானால், காட்சிப் படிமங்கள் சொல்வது வேறாக இருக்கின்றது. சேரியைக் காட்டும்போதெல்லாம் அங்கிருக்கும் மக்கள் யாவரும் குடிபோதையிலிருப்பது போல் காட்டப்படுகின்றது. வேதியர், நந்தனார் பாத்திரங்களின் உடல்மொழி பாரம்பரிய உயர்வு தாழ்வு நோக்கை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

சினிமா கல்விப்புலத்திலிருந்து வரும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் ஆய்வாளர்கள் சினிமா பற்றிய ஆராய்ச்சிக்குப் பாட்டுப் புத்தகங்களை ஒரு மூலாதாரமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். அவற்றில் பெருவாரியான ஆய்வுகள் சினிமாரீதியாக இருப்பதில்லை. இலக்கியரீதியில் அமைந்துவிடுகின்றது. கண்ணதாசனின் திரைப்படப் பாடல்களில் சமூக சீர்திருத்தம் என்று எழுதும்போது அது ஒரு இலக்கியம் சார்ந்த ஆய்வாகவே இருப்பதைக் காணலாம். சினிமா இலக்கியமல்லவே. தமிழ் சினிமா பற்றிய கல்விப்புல ஆய்வுகள் தமிழ்த் துறையிலிருந்துவருவதைக் கவனியுங்கள். சினிமாப் பாட்டு என்று ஆராயும்போது, ஒரு ஆய்வாளர் கேட்க வேண்டிய பல கேள்விகள் உண்டு. பாட்டு திரைப்படத்தில் எந்தக் கட்டத்தில் வருகின்றது? காட்சிப் படிமங்கள் இந்தப் பாட்டின் கருத்திற்குத் துணைபோகின்றனவா அல்லது அதை நீர்த்துப்போகச் செய்கின்றனவா போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். திரை இசை ஒரு applied art. அது தனியாகக் கேட்பதற்கென்று மட்டும் உருவாக்கப்படுவதில்லை.

பாட்டுப் புத்தகம் போன்ற ஒரு அச்சுப் பிரதியை வைத்துக்கொண்டு பாடல்களை ஆராய முற்படுவதிலும் பிரச்சினைகள் உண்டு. பாட்டை அதுவரும் காட்சிப் படிமத்திலிருந்து பிரித்துப் பார்த்து ஆராய முடியாது. அப்படித் தனியாகப் பாடல்களை ஆய்விற்குட்படுத்தினால் அது சினிமா சார்ந்ததாக இல்லாமல் ஒரு இலக்கிய ஆய்வாக உருவெடுக்கும். இப்படித்தான் பல ஆய்வுகள் கல்விப்புலத்தில் இன்று நடத்தப்படுகின்றன. திரைப்பாட்டு, காட்சிப் படிமங்களுக்குத் துணைபோகத்தான் எழுதப்படுகின்றது. திரைக்கதையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்காக எழுதப்படுவது. அது ஒரு பார்க்கும்-கேட்கும் அனுபவம். நாம் திரையில் பார்க்கும் காட்சி நாம் கேட்பதையும் பாதிக்கின்றது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். . . எதனைக் கண்டான். . . மதங்களைப் படைத்தான்’ என்னும் வரிகளைப் படிக்கும்போது, திரையில் அது ஒரு இஸ்லாமிய இளைஞனால் பாடப்படுவது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். அப்போதுதான் அப்பாட்டின் முழுத்தாக்கத்தை ஆய்வாளர் உணர முடியும்.


-இன்பா

Friday, July 30, 2010

'டாப் கியரில்' அஜித்


"வாழ்க்கை என்பது ஒரு பயணம் " - இது நடிகர் அஜித் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அவருக்கு மிக பொருத்தமாகவே இருக்கிறது.

அஜித் திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. தனது பொன்விழா படமான, தனது 50 வது படமான "மங்காத்தா" பட வேலைகளில் வெங்கட்பிரபுவுடன் இணைந்து இறங்கிவிட்டார். இதில் இன்னொரு கதாநாயகனாக நாகார்ஜுனா நடிக்க போகிறார்.

ஆனாலும். அவரது ரசிகர்களிடம் நிலவும் குழப்பம் அஜித் எதற்கு முக்கியத்துவம் தருகிறார் என்பதுதான். சினிமாவுக்கா அல்லது அவரது தனிப்பட்ட தாகமான கார் ரேசுக்கா?

அவருக்கு மிகவும் நெருக்கமான நம்பத்தகுந்த வட்டாரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

"இப்போது அவர் தெளிவாக இருக்கிறார். கார் ரேசில் இருந்து விலகி தொடர்ந்து படங்கள் தரப்போகிறார். மேலும், பல புதிய திறமையான இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவிருக்கிறார் ".

தனது 50 வது படம் பற்றி பேசுகிறார் அஜித்.

"நான் இப்போது என்னுடைய 50 வது படம் செய்கிறேன். இதுவரை கடந்து வந்த பாதையை பார்த்தால், சினிமாவில் எனது பயணம் மிகவும் கடினமானது. நிலையில்லாத திரையுலகில் இவ்வளவு காலம் நிலைத்து இருப்பது சாதாரண விஷயம் இல்லை.அது ஒரு கயிற்றின் மீது நடப்பது போல " என்கிறார் அஜித்.

தனது வெற்றி மற்றும் தோல்விகளை சமமாக பார்க்கும் அஜித், தன்னம்பிக்கைக்கு பெயர் போனவர்.

சினிமா உலகிற்க்குள்ளும் அஜித்திற்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். உதாரணம் சிம்பு. ஒரு கேள்விக்கு சிம்பு அளித்த பதில்.

கேள்வி : த்ரீ இடியட்ஸ் ரீமேக்கில் நடிகர் விஜய்யுடன் நடிக்கிர்களா?

சிம்பு தந்த பதில் : விஜய் சார் பெரிய நடிகர்தான். அவர் கூட நடிக்கிறது நல்ல விஷயம் தான். ஆனால், எனக்கு அஜித் சார் பேன்ஸ் அதிகம் இருக்கிறார்கள். அதையும் யோசிச்சு தான் முடிவு பண்ணனும். அஜித் ரசிகர்களை நான் சங்கட படுத்த விரும்பவில்லை"


வெங்கட்பிரபு இயக்கத்தில், இன்னொரு முன்னணி நடிகரான நாகர்ஜுனாவுடன் எந்தவித இகோ இல்லாமல் நடிக்கும் அஜித், அடுத்ததாக விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், பில்லா படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிக்கிறார்.

சர்வம் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாத விஷ்ணுவர்தன்,
பில்லா 2க்கான கதைக்களத்தை எழுதியிருக்கிறார். அஜித்தை மையமாக வைத்தே கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, கிரிடம் படத்தை இயக்கியவரும் , தற்போது வெற்றி நடை போடும் மதராச பட்டினம் படத்தின் இயக்குனர் விஜய்யுடன் ஒரு படம் செய்யபோகிறார். கௌதம் வாசுதேவ மேனனுடன் ஒரு படம் பண்ணவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

"நான் இங்கே நிலைப்பதற்காக இருக்கிறேன். என் எல்லைகளை தாண்டி சில தொலைவுகள் கூடுதலாக ஓடவும் நான் தயார்" என்கிறார் அஜித்.

சினிமா என்னும் காரை டாப் கியரில் ஓட்ட தொடங்கி இருக்கிறார் 'தல'.இனி அவரது பயணம் வெற்றிகரமாக இருக்கும் என எதிர்பார்ப்போம்.

-இன்பா

Wednesday, July 28, 2010

எழுத்தாளர் பிரபஞ்சன் கண்ட ஞானதீபம்


சமிபத்தில் திருவண்ணாமலை சென்று வந்த தனது அனுபவத்தை பகிர்கிறார் எழுத்தாளர் திரு.பிரபஞ்சன்.

போனவாரம் திருவண்ணாமலை போயிருந்தேன், ஞானத்தேடலா என்றால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இல்லாதவனுக்குத்தானே தேடல். எனக்கு இருக்கிறது. அது காரணம் இல்லை. சும்மா பட்டணத்துப் பிடுங்கலிலிருந்து நாலைந்து நாட்கள் தப்பித்து ஓடலாம் என்பதுதான். அதிகாலையிலும், மாலை மயங்கி வரும் நேரத்திலும் மலைப்பாதை நடப்பதற்குச் சுகமாக இருக்கும். போடப்பட்ட பாதையை விட்டுவிலகி, குறுக்காகவும், தான் தோன்றித்தனமாகவும் நடக்க வேண்டும். அப்படி நடந்தவர்கள்தான் சேரிடம் அறிந்து சேர்ந்திருக்கிறார்கள். ஒழுங்காக நடந்தவர்கள் ஒழுங்கில்லாமல் செத்திருக்கிறார்கள். நாங்கள் நடந்த (நாங்கள் என்பது என்னையும்., என் நண்பர் விசித்திர சித்தனையும்) பாதையில் நிறைய காவி உடுத்தியவர்கள் தட்டுப்பட்டார்கள். அவர்கள் எல்லாம் சாமியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். யாரிடமாவது பேசுவோமா என்றார் நண்பர். காவிக்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டு நடந்தேன். அப்படியென்றால், நீங்கள் சண்முகம் ஐயாவைத்தான் சநதிக்க வேண்டும் என்றார் நண்பர். அவர் யார் என்றேன்.

'துறவி.'

'எதுக்காகத் துறந்தார்? யாருக்கு முன்னால் துறந்தார்?'

'அப்படிப்பட்டவர் இல்லை அவர். யாரையும் தன்னிடம் அண்ட விடாதவர். தன்னைப்பற்றி எந்த நல்ல அபிப்ராயமும் யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்.’ அப்படியென்றால் அவரைச் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரு குகைக்குள் அவர் இருந்தார். வெள்ளைச் சட்டையும், வேட்டியும். மடக்கிய கால்களுக்கு முன் பில்டர் வில்ஸ் சிகரெட் இருந்தது. புகைத்துக் கொண்டு இருந்தார். நண்பரை அடையாளம் கண்டுகொண்டு புன்னகை செய்தார். என்னைப் பார்த்து ‘யார் இவர்’ என்றார். நான் சொல்லிக் கொடுத்தபடி 'சும்மா என்னைப் பார்க்க வந்தவர்' என்று மட்டும் சொன்னார்.

'உக்காருங்க' என்றார்.

'இவருக்கு உங்ககிட்ட சில கேள்விகள் கேட்க இருக்கு. நீங்கள் விரும்பினால் சொல்லலாம்.'

'கேட்கச் சொல். ஆனால் கடவுளைப் பற்றி மட்டும் கேட்கக் கூடாது. அது அயோக்கியர்களுக்கான பிரச்சினை. நமக்கு வேணாம்.'

இதைத் தொடர்ந்து நாங்கள் கேட்டதில் அவர் சொன்னதும், அவர் பாஷையிலேயே சொல்கிறேன். இதை வேதாந்தமாகவோ, விவாதமாகவோ நீங்கள் வியாக்யானம் செய்து கொள்ளலாம்.

அப்போது ஒரு இளம்பெண், சாமியார் வேஷத்தில் எங்களைக் கடந்து போனாள். என் மனசு அவள் பின்னால் போயிற்று.

'சரி. வந்துடு' என்றார் சண்முகம் என்னைப் பார்த்து.

'வந்துட்டேன்' என்று நான் அடங்கினேன்.

1) மழை இப்போதெல்லாம் பெய்யும் காலத்தில் பெய்யாமலும், பொய்த்தலும், காலம் அல்லாத காலத்தில் பெய்தலும் எதனால்? நல்லவர்கள் குறைந்து போனார்கள். அதனால், மழை குறைந்துவிட்டது என்பதெல்லாம் உண்மைதானா?

அழுக்கு மற்றும் சாக்கடைகளின் வெப்ப அனல் நெருப்பின் ஆவிப் பிசாசுகள், மேல் எழுந்து குளிராது. நெருப்புக்கோளமாய் விகசித்துப் பெய்கிறது கல்மழை. மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. முன்னெல்லாம் சூரியன் கடலில் இருந்து நீரை முகந்தது. இப்போது கூவத்திலிருந்து. மழை மக்கள் உறங்கும் போது பெய்கிறது. மக்கள் அதை அறிய மாட்டார்கள். மழையை, அரசர்கள் மற்றும் சமஸ்தானாதிபதிகள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்து லாக்கரில் பூட்டி இருக்கிறார்கள். உனக்கும் எனக்கும் மழை என்பது இனி இருக்காது. தவிரவும், என்ன மயித்துக்கு மழை? அரிசியை, உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம். கமபெனிகள் கமிஷன் பல்லாயிரம் கோடிகள் வரும். தண்ணீருக்குப் பதில், மலிவு மது விற்பனைக்கு வரும்.

2) வள்ளுவன் வான் சிறப்பு என்ன ஆவது? இளங்கோவை?

வான்சிறப்புக்குப் பதிலாக மன்னர் சிறப்பு இடம்பெறும். பெறட்டுமே. நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா என்ன?

3) கனகவிசயர்களின் முதுகு நிமிர்ந்ததா, இல்லையா?

இனமகளை விட்டு இறங்கி வழிந்தது / புனைவில் புகைத்தெழுந்த கனக விசயக் கதா மைதுனம் புலிக் கொடி ஏற்றிய மூதினத்தின் முதுகில் ஏறின/ சதுக்கப் பூதங்கள்.

4) சாம்ராஜ்யங்கள் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றன?

தற்கொலைப் பிணங்கள் மிதக்கும். சாக்கடை நதியில் பூதம், ஸ்தாபிதம் ஆகிறது. அந்தச் சாம்ராஜ்யம். அந்த மாபெரும் அரண்மனையை ஆட்டின் கால் ஒரு தூணாகவும், ஒடிந்த நாயின் கால் ஒரு தூணாகவும், கோழியின் காலும், காக்கையின் காலும், நான்கு தூண்களின் மேல் நிற்கின்றன. நின்றன சாம்ராஜ்யங்கள். வீட்டின் சுவர்கள் இடிந்து அரண்மனைச் சுவர்கள் உருவாகின்றன. ஏரிகளின் மேல் அரண்மனை வருகிறது. தராசுகளை உருக்கிக்கத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

பள்ளிக்கூட வகுப்பறைகளில் ரம்பை, ஊர்வசி, மேனகா, திலோத் தமை நடனங்கள் நடக்கின்றன. அரவம் தீர்ந்த இரவுகளில் உடைந்த குழம்புச் சட்டிகளில் முரசங்கள் தயாராகின்றன. சாயம் தீட்டப்பட்ட கோவணங்கள் கொடிகளாகின்றன. அரசமரமும், ஆலமரமும் மோதிக் கொள்கின்றன. எல்லாக் காலத்திலும் வழிந்தோடுகின்றன சகோதர ரத்தம். மனித ரத்தத்தில் தொட்டு எழுதப்படுகின்றன சமாதான உடன்படிக்கைகள். சமாதானத்தின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் யுத்த முஸ்தீபுகளே கள்ளச் சிரிப்புடன் ஒளிந்திருக்கின்றன.

5) போரைப் புலவர்கள் ஆதரிக்கிறார்களே?

போரை ஆதரிப்பவர்கள் புலவர்கள் ஆகார். அறிஞர் என்போர் அரசுக்கு வாழ்த்துப்பாட தம் வார்த்தைகளை எடுக்க மாட்டார்கள். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுகிறவரே அறிஞர்கள், எழுத்தாளர்கள். நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் கொண்டவர்கள், கருவறையிலேயே விஷம் வைத்துக் கொல்லப்படுகிறார்கள். மீறிப் பிறந்தால் கல்லில் அடித்துச் சாகடிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி நிமிர்ந்து நின்றால், புறக்கணிப்பின் நஞ்சை அருந்தி தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். உண்மைப் படைப்பாளிகள் பட்டினியால் சாவதில்லை. அவமானப்படுத்தலால் சாகிறார்கள். நீ, உண்மையை எழுதப் பேனாவை எடுக்கும்போதே உன் தோள்களில் சிலுவைகள் சுமத்தப்படுகின்றன. உன் ஒவ்வொரு எழுத்தும், உனக்கு நீயே வெட்டிக் கொள்ளும் சவக்குழி. எல்லாக் காலத்திலும் அரசர்களுக்குச் சார்ந்து தங்கள் மூளையைக் கபடமைத்துக் கொண்டவர்களே சௌகர்யமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

6) அறம் என்ற ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்களே?

நானும் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன் அப்படி ஒன்று இருந்ததாக. இப்போது அது, அரசுக் கட்டிலின் பக்கத்தில் நின்று சாமரம் வீசிக் கொண்டிருப்பதாக அரண்மனைச் சேவகர்கள் சொல்கிறார்கள்.

இந்த யுகத்தில் அறம், நக்கிப் பிழைத்தல், வாக்கு சுத்தம் அல்ல, நாக்கு நீளம் முக்கியம். அதிகாரத்தின் காலையும் மற்றும் அதிகாரம் விரும்பும் இடங்களை நக்குபவர்களே இந்தச் சமூகத்துக்கு நாயகர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள், அவர்களின் சுற்றம் மற்றும் உறவுக்காரர்கள், உறவுக்காரர்களின் அடிமைகள் இவர்களே நக்கப்படுவதற்கு ஏற்ற நபர்கள். நக்கிப் பிழைத்தலுக்குத் தமிழில் மிக நீண்ட மரபு உண்டு. பாரியைக் கபிலர் புகழ்வதைப் படித் திருக்கிறாயா? 'பாரி பாரி' என்று சொல்லிக் கொண்டு புலவர்கள் எல்லோரும், பாரியைச் சூழ்ந்து கொள்கிறீர்களே, பாரி மட்டுமா கொடுப்பவர். மாரி, மாரி (மாரி என்பது பிஸ்கட் அல்ல, மழை என்பது பொருள்) என்ற ஒன்றும் இருக்கிறதே, அது உங்களுக்குத் தெரியாதா' என்பதே கபிலனின் பாட்டு.

நக்கல் மரபை அங்கிருந்தே இனம் காணலாம். காலம்தோறும் அறிஞர்கள் அந்தக் கலையை மிக ஆழமாகக் கற்றுத் தங்களை வளப்பமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களைக் கடவுளாகவே உயர்த்திச் சௌகர்யம் அடைந்திருக்கிறார்கள். ‘திருவுடை மன்னரைக் காணில், திருமாலைக் கண்டேன் எனும்' என்று பூரிக்கிறார் ஒரு புலவர். புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையைக் காணவந்தார் ஒரு புலவர். 'கொஞ்சம் இரும்' என்றார் பிள்ளை. புலவருக்கு அவசரம். பறந்தார். ‘சீக்கிரம் கொடுப்பதைக் கொடும்’ என்றார். பிள்ளை 'ஏன் பறக்கிறீர்' என்று சினந்தார். புலவர் ஒரு பாட்டுபாடுகிறார். 'கொக்கு பறக்கும் குருவி பறக்கும், நக்கிப் பொறுக்கிகளும் பறப்பர்,... நீ என் அருகிருக்க, ஒரு நாளும் பறவேன், பறவேனே' என்பது போலப் பாடி இருக்கிறார். ஆக, ஆனந்த ரங்கப்பிள்ளை காலத்திலும் நக்கிப் பொறுக்கிகள் இருக்கிறார்கள் என்பது பெறப்படுகிறது.

ஆக. அறிவு மரபில், இந்தத் தொழும் மரபு மிக நீண்ட காலமாகவே தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சமணர்கள், துறவிகளின், பெரிய ஞானிகளின் கால்களை வணங்கி ஒரு மரபைத் தொடங்கி வைத்தார்கள். பாதங்களை மட்டும் கவ்விப்பிடித்து வணங்கி இருக்கிறார்கள். பிறகு, இந்தத் தொழும் மரபு தொடங்கியது. கண்ணகி தன் கணவனை அடிகள் என்றுகூட அழைத்திருக்கிறாள். சைவர்கள் அடியார்களை உருவாக்கினார்கள். தொண்டர்கள் தொழுவதற்கு என்றே பிறப்பெடுத்து வந்தார்கள். அவர்கள் தலைவர்களின் முகத்தை அறியார்கள். கால்களை மட்டுமே அறிவார்கள். ஆங்கிலேயர் காலத்தில் 'பூட்ஸ் நக்குபவர்கள்'என்ற சொல்லாக்கத்தையே உருவாக்கினார்கள். ஆக, இந்த அரும் மரபு மிக நீண்ட ஆயுளை உடையது.

7) இந்த நக்கல் மரபை மீறிய அறிவுத் தடம் தமிழில் இல்லையா?

உண்டு. நிறையவே உண்டு. ‘மன்னவனும் நீயோ, உலகத்தை எல்லாம் நீதான் ஆள்கிறாயோ, உன்னைக் கண்டா, எதிர்பார்த்தா தமிழை ஓதினேன். என்னை மரியாதையோடு நடத்த மன்னர்கள் ஏராளம் உண்டு. தெரியுமா?’ என்று கேட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். 'மன்னா.. உனக்கு உன்நாட்டில்தான் மரியாதை. எனக்கு உலகம் முழுக்க மரியாதை தெரியுமா' என்று மன்னன் முகத்துக்கு நேராகக் கேட்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். உலக அளவில் அமெரிக்காவை எதிர்க்கிற அறிவாளிகளே மிக அதிகம். உண்மையான அறிஞர்கள் என்போர் ஆதிக்கத்துக்கு எதிராகவே தம்மை நிறுவிக் கொள்கிறார்கள். இந்த நக்கலை மறுத்து வாழும் உண்மை அறிஞர்கள் தமிழ் பூமியிலும் இருக்கவே செய்கிறார்கள். தமிழ் மரபு, அவர்களில் பலரை உருத்தெரியாமல் அழித்து இருக்கிறது. இன்னும் அந்த அழிப்பு வேலை நீடிக்கவே செய்கிறது. என்றாலும், அந்தப் பெருமைக்குரிய சிறுபான்மை அறிவு மரபினர் தங்களை விற்றுக் கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிறார்கள். தமிழ் என்கிற மொழியும் அது உருவாக்கி இருக்கும் கலாச்சாரமும், உருவாக்க இருக்கும் பண்பாடும் இந்தச் சிலராலேயே வாழ்கிறது. அந்தப் பெரும்பான்மை தயாராக இல்லை.

8) அறிவாளிகள் என்போர் எங்ஙனம் சீரழிவுக்கு உள்ளாகிறார்கள்?

அவரவரும் அவரவர் வழியில் கெட்டுப் போகிறார்கள். கெடுவதற்கு மிகப் பெரிய அசைவுகள் தேவைப்படுவதில்லை. தமிழ்ச்சூழலில் உண்பது, உடுப்பது, சம்சாரம் பேணுவது போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானவர்கள் பலரே, அறிவுத்துறைக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆசிரியர்கள், அரசு அலுவலர், வங்கி அலுவலர் என்று பலரும் இங்கு இலக்கிய, கலாச்சாரத் துறைக்குள் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த நாள் காலை உணவு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும் ஏதோ ஒரு இனம் தெரியாத அச்சத்தில் இவர்கள் உழல்கிறார்கள். தங்களுக்களிக்கப்பட்ட ரொட்டி தங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடுமோ என்ற கவலையிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். தங்கள் துறைத்தலைவர்கள்/அதிகாரிகள் மூலம் தங்களுக்குத் துன்பம் வரலாம் என்று அஞ்சுகிறார்கள். இந்தவகை மனோபாவம் கொண்டவர்களுக்கு, ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிந்தனைகளை, மரபை, இலக்கணத்தை மீற முடியாது. மரபை மீறாது, முன்னோர்கள் வெட்டிய உப்புக்கிணற்றில் தண்ணீர் குடிப்பார்கள். இவர்கள் அதிகாரத்தை ஒருபோதும் நிமிர்ந்தே பார்க்கமாட்டார்கள். வாழ்க்கைப் பாதுகாப்பு என்பதே முதலும் கடைசியுமான லட்சியமாக இருப்பதால் அவர்களிடம் இருந்து அந்தப் பாதுகாப்பை அசைக்கிற எந்தச் சிறுமுனகலும் வராது.

இந்த அறிவாளிகள், அதிகாரத்தை அணுகி, அவர்கள் பாதுகைகளைக் கழற்றி, கால் உறைகளையும் நீக்கித் தங்கள் பணியைத் தொடங்குகிறார்கள். அதிகாரத்துக்குள், தம்மை நிறுவிக்கொள்ளும் பொருட்டு அறிஞர்கள் சகவாசம் தேவைப்படுகிறது. இந்த அதிகாரம்+அறிவுத்துறை கூட்டு பரஸ்பரம் இருவருக்கும் இலாபமாக அமைகிறது. அறிவு வர்க்கம்- இந்த அ-அறிவு வர்க்கம் அதிகாரத்துக்கு முகஸ்துதியும் பாதபூஜையும் செய்து, அதிகாரத்தின் அங்கமாகத் தம்மை வடிவமைத்துக் கொள்கிறது. இவர்கள் பொதுவாகவே நாலாம் தரத்தினராகவே இருப்பார்கள். இப்படி இருப்பதே அதிகாரத்துக்கும் வசதி. அதிகாரம், இந்த அடிமுடி வருடிகளுக்குப் பட்டம், பதவி, பணம், விருது என்று பல சலுகைகள் தருகிறது. அ.அறிவாளிகள் அதிகாரத்துக்குத் தங்கள் போற்றிப் பரவலால் அதற்கு ஈடு செய்கிறது.

9) மக்கள், மக்கள் அரசியல் என்றெல்லாம் அடிக்கடி பேசப்படுகிறதே. மக்கள் என்றால் என்ன. அவர்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்?

மக்கள் பாவம். அவர்களை "மக்கள் அரசியல்வாதிகளே"கைவிட்டு மட்டும் அல்லாமல் காட்டிக் கொடுத்தும் விட்டார்கள். மக்களுக்கு அயோக்கியத்தனம், ஊழல், என்பவைமேல் எல்லாம் அலுப்பு வந்துவிட்டது. இவைகளைத் தம் வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஒரு மனிதன் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததை அவர்களிடம் சொல்லியிருப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு பிரச்சினை இல்லை. எவன் திருடலை, எவன் ஊழல் செய்யலை என்றே அவர்கள் கேட்பார்கள். இதுக்கு என்ன காரணம். இந்த தேசத்து அறிவுஜீவிகள் என்போல அயோக்கியர்களாகி விட்டார்கள் என்பதே காரணம். பிரக்ஞை என்கிற சூட்டை மக்களுக்குள் என்றும் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியவர்கள் அறிவாளர்கள். அவர்களே அதிகாரத்து மனிதர்களை விடவும் இழிந்து போனார்கள். நம் தலை முறையின் மிகப்பெரிய பிரச்சினையே இதுதான். மக்கள், தங்கள் அன்றாட ஜீவியத்துக்குப் படும் அல்லல், எத்தனை பேருக்குத் தெரியும்?

இன்னொரு வீழ்ச்சியும் இங்கு நடந்திருக்கிறது. ஊழலை ஒரு சாதாரண சமாச்சாரம் என்கிற மன நிலைக்கு மக்களைக் கொண்டுவிட்டதில் வெற்றி பெற்ற அதிகாரவர்க்கம், மக்களையும் அவர்களின் சக்திகளுக்கு ஏற்ற விதத்தில் அளவில் முடிந்தால் சுரண்டிக் கொள்ளலாம் என்ற மனநிலையையும் கட்டமைத்துக் கொடுத்துவிட்டது. மக்கள் எல்லோரும் இன்னும் கறை படிந்தவர்களாக மாறவில்லை. என்றாலும், அப்படி அவர்களை ஆக்கும் சதி வலை பின்னப்பட்டுவிட்டது. மக்களுக்கு, அவர்களின் உழைக்கும் தகுதிக்கு ஏற்ப உழைப்புச் சூழலை உருவாக்கிக் கொடுத்து, கண்ணியம் மிக்க மனிதர்களாக ஆக்க வேண்டிய அரசுகள், அவர்களுக்கு இலவசங்களைக் கொடுத்து அவர்களை இழிவுபடுத்திக் கொண்டு இருக்கிறது. இது மக்களின் ஆளுமையைச் சிதைக்கும். இதுகுறித்து எந்த மக்கள் அரசியல்வாதிகளும் கவலைப்படவில்லை. மக்கள் மத்தியில் அரசியல் தத்துவம், கட்சி அரசியலாகச் சீரழிந்து கிடக்கிறது. கட்சி நடத்துகிறவர்களின் தகுதியே அதுவாகத்தான் இருக்கிறது. மக்கள் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் சினிமா, தொலைக் காட்சி, பத்திரிகை என்ற அனைத்து ஊடகங்களும் அதிகாரத்தின் கைவசமே இன்று இருக்கிறது. அரசியல், பண்பாடு என்று அனைத்து வகையாலும் மக்கள் இன்று இழிவுக்கு ஆளாகி நிற்கிறார்கள்.

10) இன்றைய மனிதனுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை?

தனித்திருக்க விரும்பாதே. கூட்டத்தில் உன்னைக் கரைத்துக் கொள். நாக்கை வலிமைப்படுத்து. அதிகாரத்தின் அருட்பார்வையில் இடம் பெற்று, அறிஞர் குழாத்தில் இடம் பெறு. சொத்துகளைப் பெருக்கிக்கொள். சுவிஸ் வங்கியில் பணம்போடு. சினிமா எடு அல்லது சினிமாவில் பங்கெடு. உனக்குப் பின்னால் சுற்றும் ஒளிவட்டத்தின் பிரகாசத்தை அதிகப்படுத்து. அதிகாரத்துக்கு ஊறுகாய் பிடிக்காது என்றால், உன் பரம்பரை மற்றும் உன் மனைவிக்கும் ஊறுகாய் பிடிக்காது என்பதை ஊர்ஜிதப்படுத்து. துரோகம் செய். பழிவாங்கு. எல்லா சட்ட மீறல்களையும் சட்டபூர்வமாகச் செய். காட்டிக் கொடுத்தலை ஒரு கலையாகச் செய்.

மேன்மைமிகு சண்முகத்திடமிருந்து நாங்கள் விடைபெறும்போது இருண்டிருந்தது. இருட்டு. செல்லும் வழி இருட்டு. சிந்தையிலும் தனி இருட்டு. என்றாலும் அந்த மகான் அளித்திருந்த ஞானதீபத்தால் எந்தப் பிரச்சினையுமின்றி நாங்கள் வழி நடந்தோம்.

அனுபவம் : எழுத்தாளர் திரு.பிரபஞ்சன்
(நன்றி : உயிர்மை)

 
Follow @kadaitheru