Friday, October 25, 2013

எங்கே போனாய் தாவணியே....



எங்கே போனாய்

கடந்த நூற்றாண்டின்
காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட
காணவில்லை உன் பெயரை.

கிராமபுறங்களில்
விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும்
தொலைந்து போய்விட்டாயே.

வயல்வெளிகளையும்,உன்னையும்
இனிவரும்
தலைமுறை
இன்டர்நெட்டில்தான்
காணமுடியும்.

சுடிதார்,மிடி,ஜீன்ஸ்
என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும்
எடுத்துவிட்டது
நைட்டி.

இன்று
கொஞ்சமாவது
தன் படங்களில்
உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
குறிப்பாக
உனக்கு தொடர்ந்து
வாய்ப்பளிக்கும்
சிங்கம் ஹரிக்கு
நன்றி சொல்வாய்...

தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட
தாவணியே...

-இன்பா..


Tuesday, August 6, 2013

காதலன் - இறந்தும் இருக்கிறான்


இங்கே
காதல் நாடகத்தின்
இறுதிக்காட்சி
ஒரு
இறுதி ஊர்வலத்தில்
முடிந்துவிட்டது,

இதோ
தலை சிதைந்து
வீழ்ந்துவிட்டது
காதல்.

சாதியின்
முரட்டு 'பூட்ஸ்" கால்களில்
மிதிபட்டு நசுங்கிவிட்டது
தருமபுரியில் பூத்த
ஒரு காதல்மலர்.

காதலன்
இறந்தும் இருக்கிறான்.
காதலியோ
இருந்தும் இறந்துவிட்டாள்.

மொத்ததில் இங்கே
மரித்துவிட்டது காதல்.
பிழைத்துவிட்டது சாதி.

காதல் இளவரசனே!

உனக்காக கட்டப்பட்டுவிட்டன
எத்தனையோ உள்ளங்களில்
தாஜ்மகால்கள்.

காதல் போயின்
சாதல் என்று
மகாகவியின் வாக்குக்கு
வாழவளித்தவன் நீ.

இனி தமிழுக்கு
உன் காதல்
ஆறாம் பெருங்காப்பியம்.

பிறப்பு தொடக்கம்.
இறப்பு முடிவு.

வாழ்வெனும் நாடகத்தில்
காதல்
இடையே வந்துபோகும்
காட்சிதான்.

காட்சிகள் மாறலாம்.
உன் மரணம் உட்பட
எந்த சோகத்தையும்
காலம் ஆற்றலாம்.

இரண்டு நூறு வீடுகளை
எரித்ததும்
இரண்டு உயிர்களை
குடித்தும்
இன்னமும் அடங்காவெறியுடன்
அலைகிறதடா சாதி.

இனி உருவாகும்
இளவரசன்களும்,திவ்யாக்களும்
சாதி அரக்கனுக்கு
சமாதி கட்டட்டும்.
சமூகத்தின் முன்
கைகோர்த்து வாழ்ந்துகாட்டி.

-இன்பா

Thursday, August 1, 2013

வெண்ணிலா,கடல் மற்றும் நான்



இருட்டுச்சகதியில்
பூத்ததொரு
தங்கத்தாமரை.

பகலின்
கிழிந்துபோன
சட்டைப்பையிலிருந்து
நழுவி விழுந்த
வெள்ளி நாணயம்.

வானம்
மேகக்கைகுட்டைகளால்
துடைத்து,துடைத்து
பாதுகாக்கும்
ஒளிப்பேழை.

உலகக்கூரையின் கீழ்
எல்லா உயிரினங்களின்
காதலுக்கும்
இறைவன் வைத்த
சாட்சிக் கைநாட்டு.

காதலியின்
பெயர் எழுத
கள்ளிச்செடியின் இலை போதும்.
காதலர்களின்
பெயர் பதிக்க
பாறையொன்று போதும்,
ஆனால்,
காதலை
பதிவு செய்ய
வெண்ணிலா
மட்டுமே வேண்டும்.

.இதோ..
நிலாத்தாய்
தன் ஒளிக்கரங்கள் நீட்டி
உலகை அழைக்கின்றாள்.

துள்ளிவரும் அலைகளை..
தலையாட்டும் மரம்,செடி,கொடிகளை,
நிமிர்ந்து நிற்கும் மலைகளை,

முந்திக்கொண்டு
முதல் நிலையில் செல்கிறது
என் கவிதை.


கவிதை : இன்பா

Sunday, April 7, 2013

ஈழமலர் பாலச்சந்திரன்

எங்கட மகனே
பாலச்சந்திரா!

உன் பிரேதத்தில்
வடியும் பால்மணம் கண்டு
இதயத்தின் கனம் தாங்காமல்
தடுமாறுகின்றன
என் கால்கள்.

நாதியற்றுப்போன
தமிழ்ச்சமுகத்தில்
புலிக்குட்டி
நீ
பலியாடாக போய்விட்டாயே.

சி(வெ)றீலங்காவின்
போர்குற்றங்களுக்கு
அங்கே
சிரிக்கும் புத்தரும்
சிதைக்கப்பட்ட நீயும்
பொதுவிடயங்கள்.

உன் போன்ற
ஈழமலர்களில் இருந்து
இனவெறித்தேனீக்கள்
சிறுகச்சிறுக சேகரித்த
குருதித்தேனடையாய்..
இன்று உருவாகிவிட்டதடா
ஒரு சிங்களநாடு.

ரத்தகுளத்தில்
தமிழ்மீனகள்
தேடும் கொக்குகளாய்…
புத்தபிக்குகள்

உலக வரைபடத்தில்
எமதர்மனின்
கட்டைவிரல் ரேகையாய்
காட்சியளிக்கிறது.
போதிதர்மனை வணங்கும்
இலங்கை.

வேதம் மட்டுமல்ல
சாத்தான்கள் அன்பையும்
சேர்த்து ஒதுகின்றன
கோத்தபாவி ராட்சதபக்சேவின்
நாட்டில்.

விழிதிறந்து கிடக்கும்
உன் சடலம்கண்டும்
இன்னும்
இதயம் திறக்கவில்லையடா
எங்களுக்கு.

இங்கே எங்கள்
கண்எதிரில்தான்
காவேரி அன்னையின்
கூந்தல் மழிக்கப்பட்டது.

தமிழ்நாட்டு மீனவனுக்கு
சொந்தவீட்டில்
சோறு உண்ணும்
உரிமை பறிக்கப்பட்டது.

ஆணிகளை பிடுங்கவே
ஆண்மையில்லாதவர்கள்
நாங்கள்.

தமிழீழம் என்னும்
மலையை பெயர்க்க
மாநாடு போடும்
எங்களை...

மன்னித்துவிடு
பாலச்சந்திரா.

உன் ஆன்மாவிடம்
நாங்கள் யாசிப்பது
ஒட்டுமொத்த
இந்திய தமிழர்களுக்கு
பொதுமன்னிப்பல்ல...
பாவமன்னிப்பு.

இதுவரை
ஈழ இருட்டுக்கு
தமிழக அரசியல்வாதிகள்
பற்றவைத்தவையெல்லாம்
வெறும் வத்திக்குச்சிகள்தான்.

பாலச்சந்திரன்
பிரபாகரனே!

உன்னால்தான்
இன்று
தீப்பந்தம் ஏந்தி வருகிறார்கள்
எங்கள் மாணவர்கள்.

ஈழச்சீதையை மீட்டெடுக்க
இதோ புறப்பட்டுவிட்டது.
நடமாடும் எரிமலைகளாய்...
போராடும் மாணவர்சேனை.

எழுதப்படுமா?
இன்னொரு
இதிகாசம்?


கவிதை : இன்பா

Monday, February 25, 2013

ஜென் - ஒரு கவிதை,ஒரு கதை,ஒரு விதை

கவிதை :

நதிக்கரை மணலில் மரங்களின் நிழலில்
நறுமணம் கமழும் புல்வெளிகளிலே
மலைச்சாரல்களின் சரிவில் கூட
மாட்டின் காலடிச்சுவடுகள் கண்டேன்.

சொர்க்கம் நோக்கி செல்வதுபோல கண்டேன்.
சுவடுகள் சற்றே சாய்த்து தெரிந்தன,

எனது எருதின் குளம்படியல்லவா
எனக்கு தெரியாமல் போகுமா....என்ன?

கதை :  நாம் நடந்து செல்லும் பாதையை, நமது காலடிச்சுவடுகள் மூலம் அந்த வழி நல்ல வழியா? அல்லதா? என பிறர் அரிய வாய்ப்பு உண்டு.

நமக்கு நம் வழி பற்றி நன்றாக தெரியும். நன்றாக இருப்பின் நிச்சயம் அது செர்க்கம் நோக்கி செல்லும்.

விதை : எத்துயர்வரினும் நாம் நல்வழி செல்வோம்.


பதிவு :  ஆ.சிதம்பர குருநாதன், திருச்செந்தூர்.

(கடை(த்)தெருவின் விருந்தினர்).

Sunday, February 3, 2013

புடவைக்குள் ஒரு பூங்கொத்து



 
நீ
புடவை கட்டும்பொதுதான்
புரிந்தது
நீயொரு
பூங்கொத்து என்பது.

மூன்று பூக்கள்
மொத்தம் உன்னில்.

கண்ணுக்கு தெரியும்
முகமொரு
பூ.

ஆடையில்
மறைந்திருக்கும்
மற்ற பூக்கள் இரண்டு.

இத்துடன்
கணக்கில் வராமல்
இரவில் மலரும்
இன்னொரு பூவும்
உன்னிடம் உண்டு.

முகப்பூவில் மணம் அதிகம்.
மற்றதில் அதிகமிருப்பது
சுவை

உதிர்வதும் இல்லை.
வாடுவதும் இல்லை.
பறிக்கவும் முடிவதில்லை
உனக்கே உரித்தான
உன் மலர்களை.

உன் கூந்தல் பூக்களும்
செயற்கையாய் தோன்றுகின்றன
உன் பூக்களுக்கு முன்.
செடியிலிருந்து
பறிக்கப்பட்டதால்.

நீ
நடக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
உன்
தலையிலிருந்து
உன் மார்பு(பூ)கள்
மீது விழுந்து
உன் காலடியில்
தற்கொலை
செய்துகொள்கின்றன
உன் கூந்தல் பூக்கள்.
 

கவிதை : இன்பா

 
Follow @kadaitheru