Friday, August 31, 2012

"முகமூடி" - கிழிந்தது

"கிராமத்தில் இருந்து பெட்டியை தூக்கிக்கொண்டு உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்று வந்து விடுகிறார்கள். சினிமாவுக்கு வருவதற்க்கு இலக்கிய அறிவும், உலக சினிமாவும் தெரிந்து இருக்க வேண்டும்" என்று ஒரு முறை கூறினார் மிஷ்கின்.

"எல்லாம் தெரிந்தவர்கள் போன்று ப்ளாக்கில் சினிமாவை ஆளாளுக்கு விமர்சிக்கிறார்கள்" என்றும் அவர் கூறி இருக்கிறார்.

பாரதிராஜாவுக்கு முன்பே கிராமத்தில் இருந்து வந்து சாதித்தவர்கள் இருக்கிறாரிகள். இன்றும் நல்ல இயக்குனர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சசிகுமார்,சமுத்திரகனி உட்பட பல இயக்குனர்கள் ஏன் கே.பாலச்சந்தர், கமல் கூட கிராம பின்புலம் கொண்டவர்கள்தான்.

இவர்களுக்கு மத்தியில், இதுவரை கொரிய மற்றும் ஜப்பானிய மொழி படங்களை அப்படியே 'ஈ அடிச்சான் காப்பி' அடித்து 'பெயர்' வாங்கிய தமிழ் நாட்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளி வந்து இருக்கும் "முகமூடி" படத்தை ஹாலிவுட்டோ - சீனோ படம் என்று கூறலாம். பேட்மேன் மற்றும் ஜாக்கிசான்,ப்ருஸ் லீ நடித்த படங்கள் என ஒரு டெஸ்ட் டியுப்பில் போட்டு 'கலக்கி' இருக்கிறார் மிஷ்கின்.

விமர்சனம் எழுதுமளவுக்கு கூட படத்தில் ஒன்றும் இல்லை. படத்தின் 'ஒவர் சீன்' போட்ட பாடல் வெளியிட்டுவிழா அதன் பின் வெளியிடப்பட்ட பேட்மேன் 2 பாணி ட்ரைலர் இவற்றை பார்க்கும்பொதே ரிசல்ட் ஒரளவுக்கு தெரிந்து விட்டாலும், கிராமத்தில் இருந்து இயக்குனர் கனவுகளோடு வரும் இளைஞ்சர்களை கேவலமா பேசிய மிஷ்கினை விமர்சிக்கவே படம் பார்த்தேன்.

ஜீவாவின் நடிப்பு திறமையையும், ஒளிப்பதிவாளர் சத்யா போன்ற டெக்னிசியனகளின் உழைப்பையும் எப்படி வீணடிக்கலாம் என்று மிஷ்கின் ஒரு வகுப்பே நடத்தலாம்.

உதவி இயக்குனராக வர உலக சினிமா அறிவு முக்கியம் என்று மிஷ்கின் சொன்னதன் அரத்தம்...அப்பொதுதான் அவற்றை காப்பி அடிக்க எளிதாக இருக்கும் என்பதே என்பது அவரது படங்களை பார்க்கும்பொது நமக்கு புரிகிறது.

இந்த படத்தின் 'மெகா' தோல்விக்கு பிறகாவது, கிராமத்தில் இருந்து வந்து இயல்பான படங்கள் மூலம் சாதித்து கொண்டிருக்கும் 'களவானி' சற்குணம், 'தென் மேற்கு பருவகாற்று" சீனு ராமசாமி, சமிபத்திய 'அட்டகத்தி' ரஞ்சித், 'மதுபான கடை' கமலகண்ணன் போன்றவர்களிடம் பாடம் கற்க வேண்டும்.

கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் எல்லாம் டைட்டில் கார்டில் மட்டுமே இருக்கிறது.

"முகமூடி" - மிஷ்கினின் அகம்பாவம் மிகுந்த 'அறிவு ஜீவி' முகத்திரையை கிழித்து இருக்குறது.

-இன்பா


Tuesday, August 28, 2012

'சிவாஜி 3D' - மீண்டும் ஒரு திரைவிமர்சனம்

லோகத்தில் எப்பொழுதெல்லாம் அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் ஷங்கரின் கடவுள் அவதாரமெடுக்கிறார். அதர்மத்தை அதர்மத்தால் முறியடித்துத் தர்மத்தை நிலைநாட்டிவிட்டு மறைந்துவிடுகிறார். 
அர்ஜுன், கமல்ஹாசன், விக்ரம் போன்ற நாயகர்களின் வடிவில் முந்தைய யுகங்களில் மனிதனுக்குரிய குணாம்சங்களோடு அவதரித்த ஷங்கரின் கடவுள் இப்பொழுது நேரடியாகக் கீழே வந்து தன்னுடைய ரசிகர்களுக்கு 'விஸ்வரூபதரிசனம்' தந்திருக்கிறார். 

முந்தைய யுகங்களின் அதர்மக்காரியங்களுக்கும் 'சிவாஜி' யுகத்தின் அதர்மக்காரியங்களுக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. அதர்மத்தைத் தூண்டும் இந்த யுகத்தின் அசுரர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் கை நீட்டும் சாதாரண அரசு ஊழியர்களோ பெட்டிக் கடைக்காரர்களோ தெருச் சுற்றிகளோ அல்லர். கல்வி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து வரம்பே இல்லாமல் கொள்ளையடிக்கும் பகாசுரன். 

அவனுடைய சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்று கொண்டிருக்கிறது அரசாங்கம். காசிமேட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதிசேஷன் என்னும் அந்த அசுரனை அழிக்க, சாஃப்ட்வேர் இன்ஜினியரின் ரூபத்தில் அமெரிக்காவிலிருந்து டாலர் மூட்டைகளுடன் வந்திறங்குகிறார் கடவுள்.

அவனைச் சும்மா போகிறபோக்கில் வதம் செய்துவிட முடியுமா? அதற்காகத்தான் ரஜினி தேவைப்படுகிறார். ஏ.வி.எம். என்னும் பெருமுதலாளியின் முதலீடு தேவைப்படுகிறது ஷங்கருக்கு. ரஜினி ஏற்கனவே தமிழக விளிம்பு நிலை மனிதர்களின் கடவுள். அவரை எல்லோருக்குமான கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான 'திருப்பணி'களை ஊடகங்களின் துணையோடு மேற்கொண்டது 

ஏ.வி.எம். நிறுவனம். சி.என்.என். ஐ.பி.என்., டைம்ஸ்நௌ, என்.டி.டி.வி. போன்ற ஆங்கிலச் செய்தி சானல்களின் உபயத்தால் ரஜினி இப்பொழுது இந்திய நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்குமான கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். 

ஷங்கரின் சமூகப் பொறுப்பு உலகறிந்தது. ஊழலுக்கெதிராகப் போராடுவதில் அவருக்கு நிகரான இயக்குநர்கள் யாருமில்லை. சதா சர்வகாலமும் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் குறித்தே சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதன் தற்போதைய சீரழிந்த நிலைக்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் தேடுவதில் தனது வாழ்நாட்களையும் பணத்தையும் செலவிட்டுக்கொண்டிருப்பவர். வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் தீர்க்கவும் (தீர்த்துக்கட்டவும்) செய்திருக்கிறார். அதற்கு கே.டி. குஞ்சுமோன், 'சிந்தனைச் சிற்பி' சுஜாதா எனப் பலரும் துணை நின்றிருக்கிறார்கள்.

ஆனால், தீர்க்கத் தீர்க்கச் சீரழிவு பெருகிக்கொண்டே போகிறது. இந்த அரசு அதிகாரிகளும் குமாஸ்தாக்களும் மந்திரிகளும் அரசியல்வாதிகளும் 'லஞ்சம் வாங்காதே' என்று ஒரு தடவை சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார்கள். 'நூறு தடவை சொன்னா'லாவது கேட்பார்களா என்னும் அவரது பொறுப்புணர்வு மிக்க சிந்தனையின் விளைவே ரஜினி அவருடைய படத்தின் நாயகரானதற்கான காரணமாயிருக்க வேண்டும்.


மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்தத் திரைப்படத்தை எப்பாடுபட்டாவது ஒன்றுக்குப் பத்துத் தடவை பார்க்க வேண்டியது மட்டும்தான். 'மற்றதை' அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ரஜினி தனியொரு மனிதனாகவேகூடப் பார்த்துக்கொள்வார். அவர் சிங்கம்; பன்றி அல்ல. இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் இந்தப் படத்தை அடுத்தடுத்துப் பார்த்து 'நல்ல படம்' எனச் சான்றிதழ் வழங்கிவிட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் 'கூட்டம்' அவர்களைப் பின்தொடர்கிறது. 

பிரம்மாண்டங்களின் மீதும் கிராபிக்ஸ் போன்ற நவீன உத்திகளின் மீதும் ஷங்கருக்கு இருக்கும் மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தன் நிலையை மேம்படுத்திக்கொண்டுள்ளார் ரஜினி. அவரது ஒப்பனைகளும் உடையலங்காரங்களும் சண்டையும் நடனமும் இளம் நடிகர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாபாவின் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஜினி, ஒரு நடிகராகத் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்கு முக்கியத்துவமளித்திருக்கிறார். ஷங்கர், சுஜாதா கூட்டணியின் திரைக்கதை வழக்கமான ரஜினி பட பார்முலாக்களோடு சமரசம் செய்துகொண்டுள்ளது. ஷங்கர் படங்களின் அடையாளமாக விளங்கும் அதிகார அமைப்பின் மீதான விமர்சனங்கள் மென்மையாக்கப்பட்டு ரஜினியின் பழிதீர்க்கும் கதையாடல் உத்திக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை 'ரஜினி விளைவு' என்றுகூடச் சொல்லலாம். ஆனால் ஷங்கர்- சுஜாதா கூட்டணியின் நுண் அரசியல் படம் முழுவதும் கிருமிகளைப் போல் பரவியிருக்கிறது.

நகைச்சுவைப் பாத்திரமொன்றில் நடித்திருக்கும் பேராசிரியர் சாலமன் பாப்பையா 'அங்கவை, சங்கவை' என்னும் கறுப்பு நிறம் கொண்ட தன் மகள்களைக்காட்டி 'எங்கிட்ட ரெண்டு பொண்ணுக இருக்கு, கட்டறதா இருந்தா கட்டிக்குங்க, பழகறதுன்னா பழகிக்கிங்க' என 'இளிக்கும்'பொழுது சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்கிறது. 

சிரிப்பைத் தூண்டியது சாலமன் பாப்பையா பேசிய வசனங்களா அந்தப் பெண்களின் தோற்றமா? படத்தில் ரஜினி பேசும் 'சொன்னா அதிருதில்ல?' என்னும் 'பஞ்ச் டயலாக்' ரஜினி ரசிகர்களால் வெவ்வேறு தருணங்களில் பலவித அர்த்தங்களில் பிர யோகிக்கப்படுகிறது. 

ரஜினி ரசிகர்கள் கறுப்பான இளம் பெண்களைக் குறிப்பிடுவதற்குப் பாரி மகளிரின் பெயரைக் கேலியாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னையின் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றுகொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைக் காட்டி, 'அங்க ஒரு அங்கவை சங்கவை நிக்குது பாரு' என ஒரு இளைஞன் சொன்னதைக் கேட்டபொழுது அது ரஜினி விளைவாக அல்ல, சுஜாதா-ஷங்கர் விளைவாகவே தோன்றியது எனக்கு. 

கறுப்பாக இருப்பது தொடர்பான தாழ்வு மனப்பான்மையை ஆழப்படுத்தும் இக்காட்சிகளில் பேசப்படும் வசனங்களில் தென்படும் விரசத்தையும் விஷமத்தனத்தையும் தமிழ் ரசிகர் 'கூட்டம்' கைதட்டி ரசிக்கும் என்பதில் ஷங்கருக்கோ சுஜாதாவுக்கோ எள்ளளவும் சந்தேகம் தோன்றியிருக்க முடியாது. 

சமூகத்தின் நெருக்கடிகளையும் தனிமனிதனின் பலவீனங்களையும் மட்டம்தட்டும் சொல்லாடல்கள் தொடர்ந்து நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. வெள்ளைச்சட்டையில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டிருக்கும் ரவுடி ஆதிசேஷனின் பூர்வாசிரமம் சென்னையின் விளிம்புநிலை மனிதர்கள் வாழும் காசிமேடு. காசிமேடு போலீஸ் ரெக்கார்டுகளில் இடம்பெற்றுள்ள ரவுடி அவன். பிராமணர்கள் அதிகமாக வசிக்கும் மயிலாப்பூரையோ திருவல்லிக்கேணியையோ மேற்கு மாம்பலத்தையோ அப்படியொரு கொடிய வில்லனின் பூர்வீகமாகக் கற்பனை செய்ய முடியாததும்கூட சுஜாதாவின், ஷங்கரின் நுண்அரசியலின் விளைவுகள்தாம்.

இப்படத்தின் முதிர்ச்சியற்ற திரைக்கதையையும் விஷமத்தனமான வசனங்களையும் சிறுபிள்ளைத்தனமான தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டாடும் ஊடக அரசியலைப் பற்றித் தனியே எழுத வேண்டும்.

கையில் ஒரு லேப்டாப்பையும் மனம் திருந்திய சில ரவுடிகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு சில நாள்களுக்குள் 46 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்துவிடும் சாமர்த்தியம் கொண்ட ஒரு கற்பனையான நாயகனை மையப்படுத்தித் தமிழ் வாழ்வின் பல கூறுகளை நுட்பமான முறையில் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தைப் பொருட்படுத்துவதற்கோ விவாதிப்பதற்கோ ஒன்றுமில்லைதான். 

(எல்லா பத்திரிகைகளும் சாதா 'சிவாஜி' வெளியிட்ட சமயத்தில் 'ஜால்ரா' அடிக்க, காலச்சுவடு இதழ் மட்டுமே படம் பற்றி நேர்மையொடு பிரசுகரித்த ஒரு விமர்சனத்தை, "3டி சிவாஜி" வரப்போகும் இந்த சமயத்தில் இங்கே மறுபதிப்பு செய்து உள்ளேன். கட்டுரையாசிரியர் : தேவிபாரதி.)

Sunday, August 12, 2012

டெசோ மாநாடு - ஒரு சிறப்புக் கவிதை

காலம்காலமாக தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட தடுத்து நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக்கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கதில் உள்ள ஒரு பழமொழிதான் என் நினனவுக்கு வருகிறது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்"  - டெசோ குறித்து ஈழ எழுத்தாளர் சமயந்தன்.
 

ன்னித்தீவாய் தொடரும்
ாவேரி நதிநீர்ப்
ிரச்சினையின் வயது
வருடங்கள் நாற்பது.

நூலாறாய் ஒடும்
ாலாற்றுக்கும்
வந்ததடா சோதனை
ஆந்திர அணை

முல்லை பெரியாரில்
மூச்சுமுட்டி நிற்கிறது
நம் தமிழக உரிமை.

சிறுநீர் கழிப்பிடமாக
சிறுவாணி ஆற்றை
மாற்றும்
முயற்சியில் இருக்கிறது
கேரள அரசு.

தமிழின துரோகம்
.என்பதின்
அடையாள சின்னமாய்..
கச்சத் தீவு.

வாரம் தோறும்
ராமேஸ்வர மீனவர்கள் மீது
'பயிற்சி ஆட்டம்' ஆடுவது
இலங்கை ராணுவத்துக்கு
வாடிக்கை.

ொந்த நாட்டு
அகதிகளாய்..
நம் மீனவர்கள்.
  
ப்படி
ள்ளூரில் இருக்கும்
'ஆணிகளை' 
புடுங்க வக்கில்லாத
பண்ணாடைகள் எல்லாம்
ஒன்றுகூடுகிறார்களாம்

"டெசோ மாநாடு"
என்னும் பெயரில்
வெளியுரில் இருக்கும்
'மலையை' பெயர்க்க

கெடுகெட்ட
அரசியல் சவாரிக்கு
இரண்டு குதிரைகள்.
ஒன்று
இங்கிருக்கும்
தமிழர்கள்.
இன்னொன்று
ஈழத் தமிழர்கள்.

கூவம் ஆறும்
மணக்கிறது
இவர்களின்
சாக்கடை அரசியலின்
முடை நாற்றத்தில்.

ஒருவரி விமர்சனம்
டெசோ மாநாடு -
தூத்தேறி.

கவிதை : இன்பா

Thursday, August 2, 2012

காத்திருப்பு

ஒரு பிரிவின் வலி..

ஒவ்வொரு ஞாயிறு

உறங்கப்போகும் போதும்.


திங்கட்கிழமை காலைப்பொழுதுகளில்

தொடங்கிவிடுகிறது

ஞாயிற்றுக்கிழமைக்கான

காத்திருப்பு.


அவசரகதி இயந்திரஒட்டம்

அரைகுறை உணவு என

இரண்டு சக்கரங்கள்

ஞாயிறு தவிர

வாரத்தின்

மற்ற நாட்களுக்கு.


நிம்மதிப் பெருமூச்சு வரும்

அலுவலகம் முடியும்

ஓவ்வொரு

சனிக்கிழமை மாலையும்

தியான அநுபவம்.


நிதானவிழிப்பு

காபி அருந்தியபடி

வாசிப்பு

விரும்பிய உணவு

மதிய உறக்கம்

பிடித்தச் சேனல்

இப்படி

பணிச்சுமையை

இறக்கிவைக்கும்

நாளல்லவா ஞாயிறு?


"வீட்லேயே அடைஞ்சு இருக்கேன்.

நாளைக்கு..." என இழுக்கும்

என் மனைவிக்கு

தெரிந்திருக்க நியாயமில்லை

இந்த

ஒரு நாள்

வரம் வாங்க

நான் இருக்கும்

ஆறு நாள் தவத்தை.



கவிதை : இன்பா

Monday, July 23, 2012

கேப்டன் லெட்சுமி - அஞ்சலி

"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்" என்றான் பாரதி. தங்களால் போரினையும் நடத்தமுடியும் என நிரூபித்தவர் கேப்டன் லெட்சுமி.

அக்டோபர் 24, 1914 ஆம் வருடம், அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நம் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை S.சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர், தாய் அம்மு அவர்கள் கேரளாவை சேர்ந்த சமுகசேவகர் மற்றும் சுதந்திரபோராட்ட வீரர்.

ஏழை மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, 1938 ஆம் வருடம் சென்னை மருத்துவகல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின் சிங்கப்பூர் சென்று, அங்கு வாழும் ஏழை இந்திய தொழிலாளிகளுக்கு மருத்துவமையம் அமைத்தார். 1942 ஆம் வருடம் சிங்கப்பூர், ஜப்பான்வசம் வந்ததும், போரினால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சைகள் செய்தார்.

அப்போதுதான் அவர் வாழ்கையின் முக்கியமான திருப்பமான சம்பவம் நடந்தது. ஜூலை 2, 1943 ஆம் வருடம் சிங்கப்பூர் வந்த நேதாஜி அவர்கள் பெண்களுக்கான படைபிரிவை ஜான்சி ராணியின் பெயரால் தொடங்கவிருப்பதாக அறிவிக்க, கணமும் தாமதிக்காமல் அதில் இணைந்தார் லெட்சுமி. ராணுவ சேவைகளோடு, மருத்துவ சேவைகளையும் கவனித்தார். தனது சிறப்பான பணிகளால் விரைவில் ஜான்சிராணி படைபிரிவின் தலைமை பொறுப்பை ஏற்று கேப்டன் லெட்சுமி ஆனார்

1946, மார்ச் 4 ஆம் தேதி, பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு கொண்டுவரப்பட்டவர், நீண்ட சிறைவாசத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
1970 களில் நேதாஜியின் வழிகாட்டுதலின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபணிகளிலும், வங்கதேச போர்காலங்களில் அகதிகளுக்கான மருத்துவ சேவைகளில் ஈடுபட்டார். 2002 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் நமது அப்துல்கலாம் அவர்களை எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு போட்டியிட்டு, தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தனது கணவர் பிரேம்குமரோடு கான்பூரில் செட்டில் ஆகி, ஏழை எளியவர்களுக்கான மருத்துவ சேவைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

அடுப்புஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று இருந்த அந்த காலகட்டத்தில் கேப்டன் லெட்சுமி சாதித்துக்காட்டிஇருக்கிறார். இவரைபோன்று 'வெளிச்சத்திற்கு' வராமல் 'இருட்டில்' இருக்கும் பாரதி கண்ட புதுமைபெண்கள் எத்தனயோ?



இன்று (23-7-12 ) இயற்கை எய்திய கேப்டன் லெட்சுமி அவர்களுக்கு எங்களின் வீர வணக்கங்கள்.

ஜெய்ஹிந்த்.



-இன்பா

Sunday, July 8, 2012

'சாணக்யன்' தந்திரம்


மனிதன் தனியாகவே பிறந்தான். தனியாக இறக்கின்றான். நல்லதோ, கெட்ட கர்மவினையோ தனியாக அனுபவிக்கிறான். இறுதியில் சொர்க்கமோ, நரகமோ கடைசியில் தனியாகவே செல்கிறான்.

ஒரு மனிதனின் உயர்வு அவனது செய்கையால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது. அவனது பிற்ப்பால் அல்ல.

ஒரு மனிதன் எப்பொதும் அதீத நேர்மையுடன் இருக்ககூடாது. நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன.அதுபோலவே நேர்மையான மனிதனே முதலில் தண்டிக்கபடுகிறான்.

ஒரு வேலையை தொடங்கும் முன், மூன்று கேள்விகளை உன்னுள் கேள்.

   1..இதை நான் ஏன் செய்கிறேன்?
   2. இதன் விளைவு என்ன?
   3. தற்பொது இதில் நான் வெற்றிபெறுவேனா?

இந்த கேள்விகளுக்கு ஆழ்ந்த சிந்தனைக்குபின் உண்மையாகவும், திருப்திகரமாகவும் விடைகள் உன்னுள் கிடைத்தப்பின், காரியத்தை செய்யத் தொடங்கு.

முட்டாளுக்கு புத்தகம் அறிவைத் தரும் என்பது கண்ணாடி குருடனுக்கு பார்வையை தரும் என்பதை போலாகும்.

கல்வியே உண்மையான நண்பன். கற்றவன் எங்கும் மதிக்கபடுகிறான். கற்றவனின் அழகு இளமை அழகைவிட மேலாக காட்டுகிறது.

பாம்பு தற்போது விஷமற்றதாக இருக்கலாம். ஆனாலும், அது எப்பொதாவது விஷத்தை கக்கும் என்பதில் அவதானமாக இரு.

கடவுள் சிலைகளில் இல்லை. உன்னுள் உள்ள ஒவ்வொரு உணர்ச்சியும் ஒரு கடவுளே. அதனை உள்ளிருந்து உருவாக்கும் ஆத்மனே கோயில்.

Thursday, June 7, 2012

நான் மொட்டைமாடி பேசுகிறேன்


நட்சத்திர  புள்ளிகளை இணைத்தபடி
நிலவொளிப் பாயில்
என்மீது படுத்ததுண்டா
நீங்கள்?

ஒரு
சூர்யோதையப் பொழுதில்
கோபுர தரிசனம்
செய்ததுண்டா நீங்கள்?
என்மீது நின்றபடி.

அந்திமாலை வானத்தில்
பறவைகள் ஊர்வலம்.
இப்படியொரு வேளையில்
என்றாவது ஒரு நாள்
என்னோடு சேர்ந்து
ஒரு கவிதைப்புத்தகம்
வாசித்ததுண்டா?

உங்களோடு
நீங்கள் மனம்விட்டு பேச...
யாருமில்லா வேளையில்
என்வழி பேசுவதே
ரே வழி.

எங்கிருந்தோ ஒலிக்கும்
பாடல்.

பூக்களாய்..
என்மீது மோதி
மொட்டுக்களாய் சிதறும்
மழைத்துளிகள்

தெரியுமா உங்களுக்கு?
இந்த பட்டியலில்
இருப்பதும்,
இல்லாமல் விடுபட்டதும் .

அன்று
அம்மாவோடு சேர்ந்து
நிலாச்சோறு ஊட்டிய
நான்..
இன்றோ
ஒரு
சரக்கு தர்'பார்'.

துணி, வற்றல்
உலர்த்தவும்
லாயக்கு இல்லாமல்
போய்விட்டேன் நான் .
பால்கனியின்
வரவுக்கு பின்.

அண்டை வீட்டுக்காரர்களை
மட்டுமல்ல
எல்லோருக்கும் மேலிருக்கும்
என்னையும் தெரியாத
இன்றைய
அடுக்குமாடி மனிதர்கள்.

இன்றைக்கு
காணாமல் போனவர்கள்
பட்டியலில்...
திண்ணை
தாவணி
துப்பட்டாவோடு
நானும்.


கவிதை :  இன்பா

 
Follow @kadaitheru